மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இரண்டு கோவில்கள் அடையாளம் தெரியாத சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் நவக்கிரகங்கள் நேற்றிரவு (23) சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
அத்துடன், ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் பலி பீடத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நவக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு, அவற்றின் பாகங்கள் ஆலயத்திற்கு அருகேயுள்ள வீதிகளில் எறியப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஆலயத்தின் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, இத்தியடி விநாயகர் கோவிலின் சிலை, பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளது.
கோவிலிலிருந்த சுவாமி உருவப்படங்கள் மற்றும் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.