பாட்னா: ஒரு தலைவர் பரபரப்பாக பேசப்படும் நேரத்தில் அவரைப் பற்றி அதிர்ச்சி தரக்கூடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவுவது அண்மைக்காலமாகவே நடந்து வருகிறது.

அந்த வகையில், பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவருமான நிதீஷ் குமாரின் வீடியோ ஒன்று வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில், நிதீஷ் குமாரை மாந்திரீகர் ஆசிர்வதிக்கும் காட்சியும், அவரை கட்டியணைக்கும் காட்சியும் உள்ளது. மேலும், நிதீஷ் குமார் வாழ்க என்றும், லாலு பிரசாத் ஒழிக என்றும் மாந்திரீகர் தெரிவிப்பது போன்ற காட்சியும் உள்ளது.

மாந்திரீகருடன் நிதீஷ் குமாரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மொகமா பேரவைத் தொகுதி வேட்பாளர் நீரஜ் குமாரும் உள்ளனர். இந்த விடியோவால் பீகார் அரசியலில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “நிலைமை மிகவும் மோசமாகிவிட்ட நிலையில், மந்திரமோ, தந்திரமோ உதவாது’ என்று கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரான கிரிராஜ் சிங் கூறுகையில், ” அண்மையில் லாலு பிரசாத், பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசுகையில், தீய சக்திகளை தடுத்து நிறுத்துவது எப்படி என்று தனக்குத் தெரியும் எனக் கூறியிருந்தார்.

ஆனால், அவருக்கு முன்னதாகவே அவரது இளைய சகோதரர் (நிதீஷ் குமார்) லாலு பிரசாத்தை ஒழிப்பதற்காக மாந்திரீகரை அணுகியுள்ளார்’ என்றார்.

மேலும் பல்வேறு தலைவர்களும் நிதீஷ் குமாருக்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ பீகார் தேர்தலில் நிதீஷ் குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version