டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜோபர் நகரில் ரஷ்யா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசித் தாக்குதல் நடத்த சிரியா ராணுவம் படிப்படியாக முன்னேறிச் செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் 4 ஆண்டுகாலமாக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் சிரியாவின் பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகளும் அல் நூஸ்ரா முன்னணியும் கைப்பற்றி வருகின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகள், அல்நுஸ்ரா அமைப்பினரை ஒடுக்குவதற்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழித்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அதே நேரத்தில் அமெரிக்கா ஆதரவளிக்கும் கிளர்ச்சி குழுக்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா, ஜோர்டான் ஆகியவை இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ரஷ்யா நடத்தி வரும் விமானத் தாக்குதல்களை பயன்படுத்தி சிரியா ராணுவம் படிப்படியாக முன்னேறி கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகள் வசம் உள்ள நகரங்களை மீட்பதில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இதனிடையே சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் புறநகர் பகுதியான ஜோபர் நகரம் கிளர்ச்சி குழு வசம் உள்ளது. இந்த நகரை மீட்பதற்காக ரஷ்யா விமானங்கள் வான்வழித் தாக்குதலை நடத்த சிரியா ராணுவம் படிப்படியாக முன்னேறுகிறது.

மொத்தம் 4 நிமிடம் நீடிக்கும் இந்த யுத்த காட்சிகளை ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் படம்பிடித்துள்ளன. இவை தற்போது ரஷ்யா நாட்டின் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

ரஷ்யா விமானங்கள் சரமாரியாக குண்டுவீசுவதும், சிரியா ராணுவத்தினர் காத்திருந்து படிப்படியாக முன்னேறுவதுமான பரபரப்பான யுத்த காட்சிகள் மிகத் துல்லியமாக இந்த வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version