சென்னை, சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, காணொளித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்.

1986ஆம் ஆண்டு சூளைமேடு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தா சிறிலங்கா திரும்பியிருந்தார்.

அவர் விசாரணையில் பங்கேற்காத இந்த கொலை வழக்கு விசாரணை நடந்து வந்தது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டும், அவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காத நிலையில், அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எனினும், 2010ஆம் ஆண்டு அவர் சிறிலங்கா அதிபருடன், புதுடெல்லி வந்த போது, கைது செய்யப்படவில்லை. இராஜதந்திர விலக்குரிமையைக் காரணம் காட்டி அப்போது அவருக்கு சலுகை அளிக்கப்பட்டது.

எனினும், அதன் பின்னர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்தியா செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் அவர் தான் காணொளித் தொழில்நுட்பம் மூலம் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேவைப்படும் போது, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்படும், காணொளித் தொழில்நுட்பம் மூலம் விசாரணைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version