கோவை: கோவையில் போலீசார் முன்னிலையிலேயே தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை அமைப்பை சார்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ராம் நகர், செங்குப்தா வீதியில் தனியார் நிறுவனத்தின் மருந்து பொருட்கள் மொத்த விற்பனையகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த விற்பனையகத்துக்கு மாத இறுதியில் வரும் மருந்து பொருட்கள் விற்பனை பிரதிநிதிகள், ஒட்டுமொத்தமாக மருந்து பொருட்களை பெற்று செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை ஏராளமான மருந்து பிரதிநிதிகள் விற்பனையகத்துக்கு வந்திருந்தனர். இவர்கள் அந்த சாலையில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், அலுவலகத்தில் இருந்த கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் சிலர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை திடீரென அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதில் 6 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மருந்து விற்பனை பிரதிநிதிகள் போலீசில் புகார் தெரிவித்ததோடு, கொங்கு இளைஞர் பேரவை அலுவலகம் முன்பும் கூடினர். இந்நிலையில் போலீசாரும், பத்திரிகையாளர்களும் அங்கு வந்தனர்.