முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தெனியாய மாளிகையை நிர்மாணிப்பதற்கு அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகளிற்காக பயன்படுத்தப்பட வேண்டிய கட்டுமானப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
தெனியாய பங்களாவை நிர்மாணிப்பதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு மகநெகுமன திட்டத்தின் கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன, தெனியாயவின் நதகல தோட்டத்தில் 40 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஆடம்பர பங்களாவை நிர்மாணிப்பதற்கு அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளிற்காக பயன்படுத்தப்பட வேண்டிய கட்டுமானப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என அமைச்சர் சாகலரத்னாயக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் சகோதரியொருவரே குறிப்பிட்ட பங்களாவை வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் சகோதரிக்கு இந்த பங்களாவை நிர்மாணிப்பதற்கான பணம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாளிகை அமைந்துள்ள 40 ஏக்கர் காணி மஹிந்தவின் சகோதரி ஒருவரின் பெயரில் பதியப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாளிகை அமைந்துள்ள பகுதியில் கொங்கிறீட் வீதி காணப்பட்டதாகவும் எனினும் பின்னர் காப்பட் வீதி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த மாளிகை அமைப்பு பணிகளுக்காக 180 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் மாளிகையின் மேல் தளத்தில் உலங்குவானூர்தி தளம் அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சகல வசதிகளையும் கொண்ட இந்த மாளிகை நிலக்கீழாக இரண்டு தளங்களைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு இந்த பங்களா குறித்து செய்திசேகரிக்க சென்ற மூன்று பத்திரிகையாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத் தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.