யாழ்ப்பாணம் புதிய சிறைச்சாலை நேற்று முன்தினம் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பனவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை
கடந்த ஆட்சிக்காலத்தில் 12 ஆயிரம் முன்னாள் புலிகள் இயக்க போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதன் போது உருவாகாத ஐந்தாவது கட்ட ஈழப்போர் 217 அரசியல் கைதிகளை விடுவிக்கும்போதுதான் ஏற்படப்போகின்றதா?
இனவாதிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். சிறைச்சாலைகளில் போதைவஸ்துப் பாவனை தடுக்கப்படவேண்டும்.
சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைக்கு செல்பவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் போதைவஸ்து பாவனையாளர்களாக வெளியே வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் தற்போது நிலவுகின்றது.
சிறைகளில் உள்ள கைதிகளும் மனிதர்களே. அவர்களை நன்கு பராமரிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாக உள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை திறந்துவைக்கப்பட்டமை வரவேற்கத்தக்க செயற்பாடாக உள்ளது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை காணப்படுவதுடன் கைதிகள் பெரும் நெருக்கடிகளை சிறைச்சாலைகளில் சந்திக்க வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இதுவரை தற்காலிகமாக இயங்கிவந்த சிறைச்சாலையில் உரிய வசதிகள் எதுவும் இருக்கவில்லை.
இதனால் இங்கு தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் இடநெருக்கடியினை எதிர்நோக்கி வந்தனர். தற்போது பெரும் செலவில் புதிய சிறைச்சாலைக் கட்டடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் கைதிகள் இடவசதியில்லாது திண்டாடவேண்டிய நிலை ஏற்படாது.
யாழ். மாவட்டத்தில் நிரந்தர சிறைச்சாலை இல்லாமையினால் இங்கிருந்து கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பவேண்டிய நிலைமை இதுவரை ஏற்பட்டுவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ். நீதிமன்ற கட்டடம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
இதனால் அவர்களை பார்வையிடும் விடயத்தில் உறவினர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கினர். அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு வழக்கு விசாரணைகளுக்காக அவர்களை அழைத்துவரவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
தற்போது யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளமையினால் கைதிகள் இத்தகைய அலைச்சல்களுக்கு உட்படவேண்டியநிலை ஏற்படாது.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 5000 கைதிகள் வரையிலேயே தடுத்து வைக்கக்கூடிய நிலைமை உள்ளபோதிலும் பல்லாயிரக் கணக்கான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிறு குற்றங்களைப் புரிந்தவர்களும் பிணையில் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாள்தோறும் அரசாங்கத்துக்கு பெரும்செலவு ஏற்பட்டு வருகின்றது.
சிறைச்சாலைகளில் போதைவஸ்துப் பாவனையும் அதிகரித்திருக்கின்றது. இதனால் வேறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகின்றவர்கள் போதைவஸ்துப் பாவனையாளர்களாக வெளியில் வரவேண்டிய நிலைமை காணப்படுகின்றமை துரதிஷ்டவசமானதாகும்.
தமிழ் அரசியல் கைதிகளும் இந்த விடயத்தில் பெரும் பாதிப்புக்களை சந்திக்கின்றனர்.
ஏனெனில் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் போதைவஸ்து விநியோகம் தொடர்பான குற்றவாளிகள் மற்றும் கொலைக்குற்றவாளிகளுடனேயே தமிழ் அரசியல்கைதிகளும் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இதனால் தமிழ் அரசியல்கைதிகளும் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். குற்றமொன்றைப் புரிந்த நபர் சிறைச்சாலைக்கு திருந்துவதற்காகவே அனுப்பப்படுகின்றார்.
ஆனால் சிறைச்சாலைகளில் போதைவஸ்து பாவனை காரணமாக திருந்துவதற்குச் சென்ற நபரொருவர் போதைவஸ்துப் பாவனையாளராக வெளியே வரும் நிலை இனிமேலும் தொடரக்கூடாது.
யாழ். குடாநாடு உட்பட வடக்கு, கிழக்கில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் என்பன அதிகரித்து வருகின்றன.
இத்தகைய குற்றச்செயல்களை தடுப்பது குறித்து சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் நாம் ஒன்றிணைந்து ஆராய்ந்துள்ளோம்.
இத்தகைய குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
விடுதலையுமின்றி விசாரணையுமின்றி இவர்கள் இனியும் சிறையில் வாடுவதனை அனுமதிக்க முடியாது.
கடந்த பன்னிரண்டாம் திகதி நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்ககப்பட்ட 217 அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
இதனையடுத்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று கைதிகளுடன் நான் உரையாடியிருந்தேன். அதன் பின்னர் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ வுடன் சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன்.
தமிழ் அரசியல் கைதிகள் தம்மை பொது மன்னிப்பளித்து விடுவிக்குமாறு கோருகின்றனர். யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளின் முன்னாள் தளபதிகள் உட்பட 12 ஆயிரம் பேர் கடந்த அரசாங்க காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் புலிகளின் முக்கியஸ்தர்கள் கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் திகழ்ந்தனர்.
இவ்வாறு புலிகளின் முக்கியஸ்தர்கள் அனைவரும் வெளியில் சுதந்திரமாக நடமாடும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலும் சந்தேகத்தின் பேரிலும் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் வாடுவது எந்தவகையிலும் நியாயமானதல்ல.
இதனால்தான் தமிழ் அரசியல்கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுவிக்க வேண்டுமென்று நான் கோருகின்றேன்.
பொது மன்னிப்பு அளிப்பதற்கு அமைச்சரவையில் சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தவறான நடவடிக்கையாகும்.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அந்த உறுதிக்கிணங்க தமிழ் அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை 17 அரசியல்கைதிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் அரசியல்கைதிகளை நீதிமன்றம் விடுவிக்கவில்லை.
இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்டுக்கொடுப்புப் போக்கை கடைப்பிடிக்கவேண்டியது அவசியமானதாகும்.
அரசியல்கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ் அரசியல்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும். இல்லையேல் குறுகிய கால புனர்வாழ்வின் பின்னராவது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசியல்கைதிகளை விடுவித்தால் அதன்மூலம் 5ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஜெனிவா தீர்மானத்துக்கிணங்க சர்வதேச விசாரணையாளர்களிடம் சாட்சியமளிப்பதற்காகவே அரசியல்கைதிகளை விடுவிக்க அரசாங்கம் முயல்வதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான இனவாத கருத்துக்களுக்கெல்லாம் செவிசாய்க்காது அரசியல்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அரசாங்க காலத்தில் 12 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுவித்தபோது ஈழப்போர் உருவாகவில்லை.
தற்போது 217 தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்கும்போதுதான் மீண்டும் போர் உருவாகப்போகின்றதா? இனவாதிகளின் கருத்துக்கு நாம் செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ் அரசியல் கைதிகள் பல தடவைகள் தமது விடுதலை கோரி போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இத்தகைய நிலையில் தமிழ் அரசியல்கைதிகள் மீது களுத்துறை மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வவுனியா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு அரசியல்கைதிகள் உயிரிழந்துமிருந்தனர். இத்தகைய உயிரிழப்புக்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவகையில் சட்டம் ஒழுங்கு சிறைச்சாலைகள் அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இங்குள்ள சிறைச்சாலைகளில் முழுமையாக நியமிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு இதுகுறித்தும் கவனம்செலுத்தவேண்டியது இன்றியமையாததாகும்.
குடாநாட்டில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் நீதிபதிகள் செயற்பட்டு வருகின்றனர். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருவது பாராட்டத்தக்கதாக உள்ளது.
யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்களை சந்தித்த எமது மக்கள் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். இதற்கு குற்றச்செயல்கள் இல்லாதொழிக்கப்படவேண்டும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டியது அவசியமாகும்.
நாட்டில் குற்றச்செயல்களை குறைத்தால் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் இதன்மூலம் சிறைச்சாலைகளின் எண்ணிக்கையையும் குறைக்கலாம்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் அரசியல் கைதிகள் இல்லை என்று அரசதரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. உண்மையிலேயே இனப்பிரச்சினை காரணமாகவே யுத்தம் உருவானது.
யுத்தத்தின் காரணமாகவே தமிழ் இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்பட்டனர். எனவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை தமிழ் அரசியல் கைதிகள் என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை.
இன்று இந்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் பெரும் ஏமாற்றங்களை சுமந்தவாறு வாழ்ந்து வருகின்றன. இவர்களது ஏக்கங்களுக்கும். தீர்வு காணப்பட வேண்டும்.
சிறையில் வாடும் அவர்களது உறவுகள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இதனைக் கருத்தில்கொண்டே அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு நான் கோருகின்றேன்.
அரசியல்கைதிகள் விடயத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சும் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்.
எதிர்வரும் 7ஆம் திகதிக்குள் அரசியல்கைதிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்காவிடின் அவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் சூழலும் காணப்படுகின்றது.
எனவே இந்த விடயத்தில் நாமனைவரும் அக்கறை செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். தீபாவளிக்கு முன்னராவது இவர்களுக்கு விடிவு ஏற்படவேண்டும்.
மனம் நிறைந்த பாராட்டுகள் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கு உரித்தாகட்டும.
யாழ் பண்ணை பகுதியில் சிறைச்சாலை திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு)