எல்பிட்டிய, ஊறுகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன் தொட்டுவிலவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றுக் காலை 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் உரிமையாளரான
23 வயதுடைய ரங்க விஜேசுரேந்திர மற்றும் அங்கு வேலைபார்த்த 24 வயதுடைய இஷான் சந்திக ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சுட்டுக்கொல்லப்பட்டுள்ள குறித்த இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று காலை குறித்த இருவரும் வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிர்த்திசையில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ஒன்றினால் சரமரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளுடன் கீழே சாய்ந்துள்ள இரு இளைஞர்களும் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த ஊறுகஸ்மங்ஹந்திய பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த இரு இளைஞர்களுடன் வேறு இரு இளைஞர்களுக்கு இருந்து வந்த தனிப்பட்ட பகையே கொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து 9 வெற்றுத் தோட்டாக்கள் பொலிஸ் தடயவியல் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ள இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர் என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதுடன் அவ்விருவரையும் கைது செய்ய விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எல்பிட்டிய நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் மஜிஸ்திரேட் விசாரணைகள் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிலையில் சடலங்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்கக வைக்கப்பட்டுள்ளன.