‘பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் பிள்ளையானைத் தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி’- போலிசார்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள்.
பிள்ளையானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தடுப்புக் காவல் உத்தரவொன்றை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் போலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இன்று பிள்ளையானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் இதனை தெரிவித்ததாக, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கசாலி ஹுசேன் தெரிவித்தார்.
போலிசாரின் இந்த அறிவித்தல் வேடிக்கையாக இருப்பதாக கூறிய வழக்கறிஞர் ஹுசேன் சந்தேக நபர் ஜனாதிபதி உட்பட உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிள்ளையான் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கும் முயற்சிக்கும் ஒரு நபராக இருந்தால் அவருக்கு முதலைமைச்சர் பதவி வழங்கப்பட்டது எப்படியென்று கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் ஹுசேன் அரசியல் நோக்கத்துடன் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் வாகனமொன்றை கண்டுபிடிப்பதற்காக சந்தேக நபரிடமிருந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் மேலும் அறிவித்தனர்.
போலீசார் தெரிவித்த கருத்துக்களை ஆராய்ந்த கொழும்பு மாஜிஸ்ட்ரேட் பிள்ளையானை டிசம்பர் மாதம் 10 திகதி வரை போலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கினார்.