‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவைதானா?’ – பேரறிஞர் அண்ணா எழுப்பிய கேள்விக்கு இன்று வரையில் பதில் இல்லை.

மக்களின் வரிப் பணத்தில் ஆளுநர்கள், ஆடம்பர வாழ்க்கையை ராஜபோகமாய் வாழ்கிறார்கள் என்ற விமர்சனம் நீண்ட காலமாக உண்டு.

மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக, ஏஜென்டாக செயல்படும் கவர்னர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இப்படிச் செய்யப்படும் செலவுகள் கோடிகளைத் தாண்டுகின்றன.

2011 ஆகஸ்ட் மாதம் ஆளுநராக பொறுப்பேற்றுகொண்ட ரோசய்யா, இந்த நான்கு ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிருக்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன்.

செலவுக் கணக்குகள் தலைசுற்ற வைக்கிறது. அதன் விவரம் இங்கே…

சென்னை கிண்டியில் மிகப் பிரமாண்டமாய் அரண்மனைபோல் சகல வசதிகளுடன் இருக்கும் ராஜ்பவன் 156.14 ஏக்கர் பரப்புகொண்டது.

ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர்களுக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் எல்லாம் ராஜ்பவனில்தான் இருக்கின்றன.

இந்த அலுவலகம் மற்றும் குடியிருப்புகளைப் பராமரிக்க, சீரமைக்க கடந்த நான்கு ஆண்டுகளில் 1.27 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

p12a
2011 ஆகஸ்ட் முதல் 2015 மே வரையில் மின் கட்டணமாக 36.24 லட்சம் செலவாகியிருக்கிறது. மாதம் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

சராசரியாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணமாகச் செலுத்தியிருக்கிறார்கள். கடுமையான மின்வெட்டு இருந்த காலத்தில்கூட ராஜ்பவனில் மின்சாரப் பயன்பாடு உச்சத்தில் இருந்திருக்கிறது.

மெர்சடைஸ் பென்ஸ், ஸ்கோடா சொகுசு கார்கள் உட்பட 4 கார்கள், ஒரு மோட்டார் பைக் கடந்த நான்கு ஆண்டுகளில் புதிதாக வாங்கப்பட்டுள்ளன.

இவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய். இந்த வாகனங்களின் பராமரிப்புச் செலவு மட்டும் 11 லட்ச ரூபாய். எரிபொருள் செலவு 52 லட்சம் ரூபாய்.

இது தவிர, கவர்னர் செயலகத்தின் கட்டுப்பாட்டில் ஏற்கெனவே, 3 கார்கள், ஒரு ஆட்டோ உள்ளது. இவற்றின் பராமரிப்பு, எரிபொருள் செலவு 25 லட்ச ரூபாய்.

நான்கு ஆண்டுகளில் பயன்ப டுத்தப்பட்ட தொலைபேசிக் கட்டணம் சுமார் 36 லட்ச ரூபாய். மாதம்தோறும் 80 ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பேசியிருக்கிறார்கள்.

ராஜ்பவனில் பணியாற்றும் 83 பேருக்கு மாதம்தோறும் 22.67 லட்சம் ரூபாய் ஊதியமாகத் தரப்பட்டிருக்கிறது. உதகையில் ஆளுநர் தங்குவதற்காக 86.72 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாளிகை இருக்கிறது.

அங்கே பணியாற்றும் 24 பேருக்கு மாதம் 6.47 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.

லோகநாதனிடம் பேசினோம். “கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஆளுநரின் பயணத்துக்கு ரூ.1.22 கோடி செலவாகியிருக்கிறது.

இதில் உள்நாட்டுப் பயணச் செலவு ரூ.1.20 கோடி. 470 முறை விமானங்களில் பறந்திருக்கிறார் ரோசய்யா. 1,400-க்கும் மேற்பட்ட விழாக்களில் பங்கேற்றுள்ளார். அதில் அரசு விழாக்கள் 15 சதவிகிதம் மட்டுமே.

அதுவும் அமைச்சரவை பதவி ஏற்பு விழாக்கள், பட்டமளிப்பு விழாக்கள்தான். ஆனால் 85 சதவிகிதம் அளவுக்குத் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.

இப்படி தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ரோசய்யா.

தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும்போது, மக்களின் வரிப் பணத்தில் பெருந்தொகையைச் செலவு செய்வது சரியா?

மக்கள் வரிப் பணத்தை விரயமாக்கலாமா? தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் எத்தனை, அவை எல்லாம் யார் கணக்கில் சேரும் என்பதையெல்லாம் தகவல் அறியும் சட்டத்தில் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை.

அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநருக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு தேவையா? தமிழக அமைச்சர்கள் மீது எதிர்க் கட்சிகள் ஆளுநரிடம் ஊழல் புகார் பட்டியலைத் தந்திருக்கிறார்கள்.

அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆளும் கட்சியின் நலனைக் காக்கும் வகையில் செயல்படுவதற்கு இவர்களின் ராஜபோக வாழ்க்கையும் ஒரு காரணம்’’ என்றார்.

ஆளுநர்கள் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருப்பதற்காகவே கவர்னர்களின் செலவுகளுக்கு கரன்சிகளை வாரி இறைக்கிறார்கள். நாட்டுக்கு ஆளுநர் தேவைதானா?

– ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

Share.
Leave A Reply

Exit mobile version