அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நாடகம் ஆடுகின்றது. யுத்தக் குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரசியல் கைதிகள் பகடக்காயாக பயன்படுத்த அரசு முனைகின்றது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதுவாக இருந்தாலும் தீபாவளி நாளினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கைதிகள் அனைரையும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அரசியல் கைதிகள் சம்மந்தமான கரிசனை எல்லோருக்கும் இருக்கின்றது. இவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி, பிரதமர், சட்டமா அதிபர் மற்றும் அமைச்சர்களிடம் கோரியிருந்தோம். இது சம்மந்தமான தகுந்த பதிலை 7 ஆம் திகதிக்குள் தருவராக அவர்கள் சொல்லியிருந்தார்கள்.
இருப்பினும் அவர்களுடைய விடுதலை தொடர்பாக எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனால் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதில் மயக்கம் இருந்து வருகின்றது.
இவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஏன் இவ்வளவு தாமதிக்கின்றது என்று எமக்குப் புரியவில்லை. ஏதாவது இனரீதியான காரணத்திற்காக ஆல்லது வேறு காரணங்கள் இரக்கின்றதா என்று ஒன்றும் புரியவில்லை எமக்கு.
இவர்களை விடுதலை செய்வதில் சட்ட ரீதியான காரணங்கள் இருக்கின்றது என்றால் அதனை முதலில் எடுத்துப் பார்ப்போம். இத்தனை வருடங்களாக வழக்குகள் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எப்பொழுதோ பிணை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பிணை வழங்கப்படாமல் இவ்வளவு காலமும் வைத்திருந்துவிட்டு இப்போது பிணை வழங்குவது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
காரணம் இதுவரை காலமும் வழக்குப் பதிவுசெய்யாத ஒருவருக்கு இனி எவ்வாறு வழக்குப் பதிவு செய்யப் போகின்றார்கள்.
இவ்வளவு காலமும் வழக்குப் பதிவு செய்யாமல் இருந்ததற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்பதுதான் அர்த்தம்.
இனிவருங்காலங்களில் தடுத்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக புதிய சாட்சியங்களை உருவாக்கி வழக்குப் பதிவு செய்யப்படப் போகின்றதா?
எனவே இவர்களை பொது மன்னிப்பில் விடுதலை செய்வதில் எந்தச் சிக்கலும் இருக்க முடியாது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலருக்கு எதிராக வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லுகின்றார்கள். அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் இவ்வளவு காலமும் அதனை விசாரணை செய்யாமல் ஏன் தாமதம் செய்தீர்கள்.
இவர்கள் அரசியல் கைதிகள் என்பதை நாம் மறக்கக் கூடாது. இந்த நாட்டில் ஜே.வி.பி யினர் மீது எமது தமிழ் இளைஞர் யுவதிகள் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களைப் போல் பல மடங்கு குற்றச்சாட்டுக்கள் இருந்த போதும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் பொது மன்னிப்பு வழங்க முடியாது.
10 ஆயிரம் பேருக்கு புணர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுவிட்ட இந்த அரசாங்கத்தினால் ஏன் 248 பேருக்கு விடுதலை கொடுக்க ஏன் அஞ்சுகின்றார்கள்.
இவர்களை சில குற்றங்களைச் செய்யுமாறு பணித்தவர்கள் வெளியில் இருக்கின்றார்கள். ஏதோ சிறு குற்றங்களைச் செய்தவர்கள் சிறையில் உள்ளார்கள்.
இவ்வாறான நிலை எங்களை பலவித எண்ணங்களை கருத்துக்களை உண்டாக்குகின்றன. இவை அரசியல் காரணங்கயுளுக்காக நடைபெறும் நாடகங்கள் போல் எனக்கத் தெரிகின்றது.
எதோ ஒன்றினை எங்களால் செய்து முடிப்பதற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்திருக்கின்றார்களோ என்று யோசிக்கத் தோன்றுகின்றது.
எதுவாக இருந்தாலும் தீபாவளியை முன்னிட்டு நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்து வருத்திவிட்டீர்கள்.
அவர்களுக்கு வயதும் கடந்து செல்லுகின்றது. அவர்களுடைய குடும்பங்கள் மிகவும் கஸ்ரப்படுகின்றது. எனவே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.