திருவள்ளூர்: காதலிக்கு திருமணம் நிச்சயித்ததால் ஆத்திரமடைந்த காதலன், காதலியின் வருங்கால கணவனை கொடூரமாக வெட்டி கொன்றார்.
இதையடுத்து அவரது காதலியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த சித்துக்காடு அருகே கொடூரமாக தலையை துண்டித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து, சாலையோரம் வீசப்பட்டு கிடந்த ஆண் சடலத்தை கடந்த 4ம் தேதி வெள்ளவேடு போலீசார் மீட்டனர்.
விசாரணையில் அவர் சென்னை பெருங்குடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜா(34) என்பதும், சென்னையில் உள்ள யுடிஐ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.
மேலும் விசாரணையில், ராஜாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்த பெருங்குடியை சேர்ந்த சத்யா(28) என்ற பெண்ணும், ஆவடியை சேர்ந்த சகாயம்(33) என்பவரும், 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில், சகாயத்தை பிடித்துவந்து போலீசார் விசாரணை செய்ததில், ‘ராஜாவை திருமணம் செய்து கொள்ள எனக்கு பிடிக்கவில்லை.
நான் உன்னைத்தான் நேசிக்கிறேன். எனவே ராஜாவை அழைத்து பேசு என அவரது செல்போன் எண்ணை என்னிடம் சத்யா கொடுத்தார்.
இதையடுத்து கடந்த 3ம் தேதி இரவு, ‘உன்னிடம் பேசவேண்டும். எனவே கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு வா’ என ராஜாவை அழைத்தேன்.
அங்கு, ‘சத்யாவை மறந்து விடு’ என கூறியும் ராஜா கேட்காததால் அவரை தாக்கினேன். அப்போது ராஜா மயங்கி விழுந்தார்.
இதையடுத்து ராஜாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, காரில் தூக்கி போட்டுக்கொண்டு மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
உடலை பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்தும், தலை வெளியே தெரிந்ததால், கழுத்தை அறுத்து தனியாக அதில் வைத்து கோணியை போட்டு மூடி சித்துக்காடு அருகே சாலை ஓரம் சடலத்தை வீசிவிட்டு சென்றேன்’ என போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார், சகாயத்தின் காதலியான சத்யாவையும் நேற்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து, இருவரையும் சம்பவ இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று, கொலை செய்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்தது எப்படி? என்பதை போலீசார் முன்னிலையில் நடித்துக் காட்டினர்.
மேலும், இக்கொலையில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனரா? என விசாரித்து வருகின்றனர். இருவரையும் இன்று மாலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
காதலிக்கு திருமணம் நிச்சயித்ததால் ஆத்திரம் வாலிபரை கொடூரமாக வெட்டி கொன்றார் காதலன்
07-10-2015
சென்னை : காதலிக்கு திருமணம் நிச்சயித்ததால் ஆத்திரமடைந்த காதலன் வருங்கால கணவனை கொடூரமாக வெட்டி கொன்றார்.
திருவள்ளூர் அருகே கொடூரமாக தலையை துண்டித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து, சாலையோரம் வீசப்பட்டு கிடந்தவரின் விவரம் தெரியவந்துள்ளது.
அவர் சென்னை பெருங்குடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் எனபது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குபதிந்து விசாரித்து வந்தார்.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய பகுதியில் எங்கேயாவது கொலை செய்து, பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து இங்குவந்து சடலத்தை வீசியிருக்கலாம் என மாவட்ட எஸ்.பி., சாம்சன் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் சென்னை மாநகரம் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாயமானவர்களின் விவரங்கள், புகைப்படங்களை சேகரித்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கொலையாகி கிடந்த நபர் சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ராஜா(34) என்பது தெரியவந்துள்ளது.
இவரது தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர். ராஜா சென்னையில் உள்ள யுடிஐ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவரது ஆடை மற்றும் அங்க அடையாளங்களை வைத்து கொலையாகி கிடந்தவர் ராஜாதான் என அவரது சித்தப்பா உறுதிபடுத்தி உள்ளார்.
போலீசார் விசாரணை செய்ததில் ராஜாவுக்கும் பெருங்குடியை சேர்ந்த சத்தியா (28) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் 15ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது.
சென்னை பாடியில் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை சத்தியா நடத்தி வந்துள்ளார். அவருக்கும், கொரட்டூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ள ஆவடியை சேர்ந்த சகாயம் (33) என்பவருக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது.
இதையடுத்து சகாயம், சத்தியா ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து வந்து திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராஜாவை திருமணம் செய்து கொள்ள பெண் சத்தியாவிற்கு பிடிக்கவில்லை. அவர் சகாயத்தைத்தான் நேசித்தார்.
பலமுறை ராஜாவிடம், சத்தியா இதுபற்றி எடுத்து சொல்லியும் அவர் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவந்துள்ளார்.
அதற்கான திருமண பத்திரிக்கையும் உறவினர்களுக்கு கொடுத்து வந்தார். எனவே ராஜாவை அழைத்து பேசு என சகாயத்திடம் அவரது செல்போன் எண்ணை சத்தியா கொடுத்தார்.
இதையடுத்து கடந்த 3ம் தேதி இரவு உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும். எனவே கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு வருமாறு சகாயம், ராஜாவை அழைத்துள்ளார்.
இதையடுத்து கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு ராஜா சென்றுள்ளார். அங்கு ராஜாவிடம் தான் சத்தியாவை காதலித்து வருவதாகவும் நீ சத்தியாவை மறந்து விடு என கூறியுள்ளார்.
அப்போதே இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சகாயம் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜாவை தாக்கியுள்ளார். இதில் ராஜா மயங்கி விழுந்தார்.
இதையடுத்து ராஜாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக தனது நண்பர்களிடம் கூறிவிட்டு ராஜாவை காரில் தூக்கி போட்டுக்கொண்டு மறைவான இடத்தில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து கோணியால் மூடி திருவள்ளூர் அடுத்த சித்துக்காடு அருகே சாலை ஓரம் சடலத்தை வீசிவிட்டு சென்றது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொலையை தனிப்பட்ட நபரால் செய்து விடமுடியாது. மேலும் இந்த கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சகாயத்திடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.