வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ நா வல்லுநர்கள் குழு இலங்கை சென்றுள்ளது.

ஏராளமானோர் பல ஆண்டுகளாக காணாமல் போன தமது உறவுகளை தேடுகின்றனர்.

அரசின் அழைப்பில் அங்கு சென்றுள்ள அந்தக் குழு எதிர்வரும் 18ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு செல்லவுள்ளனர்.

ஆட்கள் கடத்தி காணாமல் செய்யப்படுவதை தடுக்கவும், அதை முற்றாக ஒழிக்கவும், இலங்கை என்னென்ன வழிகளைக் கையாண்டு வருகிறது என்பது குறித்து அவர்கள் ஆராயவுள்ளனர் என ஐ நாவின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மையக் கண்டறிவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடுகள் கிடைப்பது ஆகியவற்றில் அரசு இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்தும் ஐ நா வல்லுநர்கள் குழு ஆராயும்.

150323095005_tamil_protest_512x288_bbc_nocredit
ஐ நா தலையீடு கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

வலிந்து கணாமல் போனோர் தொடர்பிலான தகவல்களையும் சேகரிக்கவுள்ள அந்தக் குழுவினர், ஏற்கனவே தமது பரிசீலனையில் உள்ள முறைப்பாடுகள் குறித்தும் கூடுதல் விவரங்களை சேகரிக்கவுள்ளனர்.

அவர்களது பயண அறிக்கையின் இறுதி வடிவம் அடுத்த ஆண்டு ஐ நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்னெஸ்டி வேண்டுகோள்

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ நாவின் இந்தக் குழு இலங்கை செல்கிறது எனக் கூறியுள்ள சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல், இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையை உயர்த்தக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

உரிய தகவல்கள் கிடைக்கவில்லை என்று உறவினர்கள் புகார்

இவர்களின் பயணத்தின் மூலம் காணாமல் போனவர்களின் உறவினர்கள், அவர்களுக்கு என்ன ஆனது என்பதை இறுதியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும், அதன் மூலம் நீதி மற்றும் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகளை தொடங்க முடியும் எனவும் அம்னெஸ்ட்டி கூறுகிறது.

ஏராளமானோர் பல ஆண்டுகளாக காணாமல் போன தமது உறவுகளை தேடுகின்றனர்.

இலங்கை செல்லும் இந்தக் குழுவினர் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை கருத்துக்களை கவனமாகக் கேட்க வேண்டும் என்றும் நாட்டில் பொறுப்புக்கூறும் நடைமுறை மற்றும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் ஏற்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் அம்னெஸ்டி கோரியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version