மாலைதீவு அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர், கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒரு கருவாட்டு வியாபாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் சினைப்பர் தாக்குதலாளி ஒருவர் கைது செய்யப்பட்டதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த மாதம் 24ஆம் நாள் இவர்கள் மாலைதீவில் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது.

இந்த நிலையில், மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ள மதுசங்க என்ற 27 வயதான நபர், கொழும்பை அடுத்துள்ள மாலபேயில் கருவாட்டு வியாபாரம் செய்பவர் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தக் கைது தொடர்பாக தமக்கு முறைப்படி அறிவிக்காதது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விசனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாலைதீவு அதிபரைக் கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவர் தெகிவளையில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட விவகாரம் குறித்தும் வெளிவிவகார அமைச்சு சீற்றமடைந்துள்ளது.

கொழும்பிலுள்ள மாலைதீவு தூதுவர், நேரடியாக குடிவரவுத் திணைக்களம், காவல்துறையுடன் தொடர்பு கொண்டு அவரை நாடு கடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

இது இராஜதந்திர நெறிமுறைகளை மீறும் செயல் என்றும், வெளிவவகார அமைச்சுடன் கலந்தாலோசிக்காமல், செயற்பட்டது தவறு என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இதுகுறித்து, விளக்கமளிக்க இன்று வெளிவிவகார அமைச்சுக்கு வருமாறு கொழும்பிலுள்ள மாலைதீவு தூதுவருக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version