சென்னை: கணவரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாத சென்னையை சேர்ந்த இளம் பெண் சிங்கப்பூரில் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை ெசய்து கொண்டார்.

திருவல்லிக்கேணி சுங்குவார் சந்து பகுதியை சேர்ந்தவர் தீபிகா. சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.

இவருக்கும் சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷுக்கும் 2014ல் திருமணம் நடந்தது. ஜெயப்பிரகாஷ் சிங்கப்பூரில் பணி செய்து வந்ததால் தம்பதியினர் சிங்கப்பூரில் குடியேறினர்.

அவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தீபிகா நேற்று காலை 10 மணிக்கு, தான் வசித்து வந்த 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்தான் மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி தீபிகா பெற்றோர் சீனிவாசன், உஷா மற்றும் உறவினர்கள் நேற்று மதியம் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளித்தனர்.

தீபிகாவின் தாய் உஷா கூறியதாவது: மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக 100 சவரன் நகை கேட்டனர். நாங்கள் 40 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தோம்.

இதனால் என் மகளிடம் வரதட்சணை கேட்டு மிரட்ட ஆரம்பித்தனர். தீபிகாவுக்கு சிங்கப்பூரில் பிரசவம் நடந்தது. இதற்கு 15 லட்சம் செலவானதாகவும், அதை உடனே கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதுகுறித்து எங்களுக்கு போன் செய்து எனது மகள் பல நாள் அழுதுள்ளார். இந்த நிலையில்தான் ஜெயப்பிரகாஷ் போன் செய்து, என் மகள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறினார்.

உடலை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது. சிங்கப்பூரிலேயே அடக்கம் செய்து கொள்கிறோம் என்றார். என் மகள் தவறி விழ வாய்ப்பு இல்லை.

அவரை எனது மருமகன் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்திருக்க வேண்டும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளின் சடலத்தை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தற்கொலைக்கு முன் சகோதரிக்கு எஸ்எம்எஸ்
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் சகோதரிக்கு தீபிகா எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். நேற்று காலை 7 மணிக்கு அந்த எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டிருந்தது.

“எனது சாவு எனது கணவருக்கும், அவரது பெற்றோருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என எனது கணவரிடம் கேளுங்கள்.

என் சடலத்தை அப்பாவின் செலவில் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வாருங்கள். எனது மகள் ஜெயப்பிரகாஷிடம் வளர வேண்டாம். குழந்தையை சென்னை கொண்டு வந்து வளர்த்து ஆளாக்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version