அரசியல் கைதிகள், தங்கள் விடுதலையை வலியுறுத்தி இங்கு உண்ணாவிரதம் இருக்க, அவர்களை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக நேரில் சென்று உறுதிமொழி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்தியா, டெல்லியில் இருப்பது சரியில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘ஒருவருக்கு, மருத்துவ சிகிச்சையென்பது முக்கியமானது. ஆனால், தமிழர்களின் தலைமைக் கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படுபவர், முக்கியமான மக்கள் பிரச்சினையொன்று இங்கு காணப்படும் வேளையில், மருத்துவ சிகிச்சைக்குச் செல்வது அநாகரிகமானது.

இப்பிரச்சினையைத் தீர்த்த பின்னர், தனது மருத்துவ சிகிச்சைக்குச் சென்றிருக்கலாம்’ என்றார்.

‘கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக, சம்பந்தன், சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்குக் கூறியிருந்தார்.

ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. 61 கைதிகளுக்குப் பிணை வழங்குவதாகத் தற்போது கூறப்படுகின்றது.

அப்படியென்றால் மிகுதிப் பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படவுள்ளனரா? 5, 10 மற்றும் 20 வருடங்கள் எனச் சிறையில் இருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஆயுட்காலச் சிறைத்தண்டனை என்று கூறப்படுபவர்கள் கூட, 14 வருடங்களில் வெளியில் செல்ல முடியும். ஆனால், பல வருடங்களாக சிறைகளில் உள்ளவர்களுக்கு விசாரணைகள் நடைபெறாமல் உள்ளன’ என்றார்.

‘தற்போது மீண்டும், அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். முழுமையான பதில் வேண்டும் என அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். கைதிகள், உண்ணாவிரதம் இருக்கக்கூடிய உடல்நிலையில் இல்லை. அவர்கள் வாழ்வா, சாவா என்னும் நிலையில் உள்ளனர்.

ஆகவே, சம்பந்தன் உடனடியாக இந்தியாவிலிருந்து நாடு திரும்ப வேண்டும்’ எனக் கூறிய அவர், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய தமிழ்த் தலைமைகள் எவரும் தற்போது நாட்டில் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிக்கிறது – சி.வி விக்னேஷ்வரன்.
12-11-2015

cvvயுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த, தமிழ் மக்களை ஆதரவு வழங்குமாறு கோரி அவர்களின் வாக்குப் பலத்துடன் ஆட்சியமைத்த புதிய அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்த்து இருந்ததாக சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் நடந்துகொள்வதாகத் தெரியவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது விடுதலையை வலியுறுத்தி சிறைக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களின் விடுதலைக்கு வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் அதனை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கைதிகளுக்கு பகுதி பகுதியாக பிணை வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் ஒற்றுமையாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயல்வது போன்று கருத முடிவதாகவும் கூறியுள்ளார்.

எனவே, மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்கு வட மாகாண சபை ஆதரவைத் தெரிவிக்கும் எனவும் சி.வி விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை உடனடியாக நிறைவேற்றுமாறு கோரி இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்லும் வகையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version