சிறைக்கைதியொருவர் சிறைச்சாலையில் வைத்து ஆடம்பர திருமணம் செய்ததுடன் அந்த சிறைச்சாலை சிறைக்கூடத்திலேயே தேனிலவைக் கொண்டாடிய விசித்திர சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கிழக்கு சவூதி அரேபியாவில் டம்மாம் நகரிலுள்ள சிறைச்சாலையில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பெயர் வெளியிடப்படாத நபரே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
இந்த திருமண வைபவத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சரான இளவரசரான மொஹமட் பின் நயெப் கலந்துகொண்டு புதிதாக திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதிக்கு 1,760 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பரிசை வழங்கியிருந்ததாக மேற்படி பத்திரிகை தெரிவிக்கிறது.
அந்த திருமண வைபவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இளவரசரால் பரிசாக வழங்கப்பட்ட காசோலைப் பிரதியின் படங்களும் குறிப்பிட்ட அரேபிய மொழிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திருமண நிகழ்வில் மணமக்களது உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு சிறைச்சாலைக் கூடத்துக்குள்ளே உணவும் குடியானங்களும் பரிமாறப்பட்டுள்ளன.
தொடர்ந்து புதுமணத் தம்பதி அந்த சிறைக்கூடத்திலேயே தேனிலவைக் கழித்துள்ளது. அந்த நபருக்கு எவ்வளவு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.