சென்னை : சென்னையில் பெய்யும் கன மழையால் 10 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல லட்சம் மக்கள் இதனால் உணவு, உடைகள், மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
நேற்று பெய்த மழைக்கு பஸ் போக்குவரத்து முடங்கியது. ரயில்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதனால் சென்னையில் மக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு வந்தனர். மேயர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எம்எல்ஏவையும் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 9ம் தேதி கடலூர் அருகே கரையை கடந்தது.
இதனால் கடலூர், நாகப்பட்டினம், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த ஆண்டு இயல்பு நிலையை விட 88 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு வலு சேர்க்கும் வகையில் மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இயல்பு நிலையை தாண்டியும் மழை பெய்துள்ளது. சென்னையிலும் தொடர்ந்து நாள்தோறும் கனமழை பெய்து வருகிறது.
இதுபோல் நேற்று முன்தினம் பகல் முழுவதும் ஓரளவுக்கு வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென இரவு 7 மணியளவில் கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டி தீர்த்தது.
குறிப்பாக வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புழல், செங்குன்றம், தாம்பரம், மீனம்பாக்கம், வேளச்சேரி, அடையாறு, ராயப்பேட்டை, வேளச்சேரி, ஆதம்பாக்கம்,
மடிப்பாக்கம், பல்லாவரம், வியாசர்பாடி, கொடுங்கையூர், தண்டையார் பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது.
இடம்- வியாசர்பாடி
நேற்று பிற்பகல் வரை மழை கொட்டியதால், பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 10 லட்சம் வீடுகள் தண்ணீரில் மிதக்கிறது.
மழை நீருடன், கழிவு நீரும் கலந்துள்ளதால், துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
பலர் பள்ளிகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர். புறநகர் பகுதி மற்றும் குடிசை பகுதி, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உணவு கிடைக்காமல் அவமதிப்படுகின்றனர்.
திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் உட்பட பல இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டையில் பொதுமக்களுக்கும், மேயருடன் வந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
அதில் மேயர் சைதை துரைசாமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேயருடன் வந்த அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, வேலுமணி ஆகியோர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றனர்.
இடம்- கெல்லீஸ்
திருவொற்றியூரில் எம்எல்ஏ குப்பன், கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை முழுவதும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்
ஆங்காங்கே மழையில் நின்று விட்டன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களை மக்கள் தள்ளிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மழையொட்டி சென்னை உட்பட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி நின்றதாலும், ஊழியர்கள் வேலைக்கு வர முடியாததாலும் 30 முதல் 40 சதவீத பஸ்களே
இயக்கப்பட்டன.
தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால் புறநகர் ரயில்கள் போக்குவரத்து சில இடங்களில் நிறுத்தப்பட்டன.
சில இடங்களில் மெதுவாகச் சென்றன. அதேபோல நீண்ட தூர ரயில்களும் 4 மணி நேர மாதமாக சென்னைக்கு வந்தன. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.
சென்னையைப் போலவே, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால், 3 மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி விட்டன. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக தூர் வாரப்படாததால் பல
ஏரி, குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி உள்ளாட்சித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் ஏரி, குளங்களை அரசியல்வாதிகள் ஆக்கிரமித்து விற்பனை செய்து விட்டதால், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால் மாநகராட்சியும், தமிழக அரசும் தண்ணீரை அகற்றவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், நிவாரணப் பணிகளை செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
* சாப்பிடக்கூட வழியின்றி பல குடும்பங்கள் தவிப்பு
* கொதித்துப்போன மக்கள் மேயர் மீது தாக்குதல்?
* தொடர் மின்வெட்டால் பல இடங்கள் இருண்டன
* புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தம்
* தொலைதூர ரயில்கள் மணிக்கணக்கில் தாமதம்
* பஸ் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்பு