தூத்துக்குடி: கணவரை மீட்க கோரி கோவையை சேர்ந்த இளம்பெண் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையில் தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை சேர்ந்தவர் காமுத்தாய்(19). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். இவர் நேற்று திடீரென தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அங்கு கொட்டும் மழையில் அமர்ந்து, தனது கணவரை மீட்டு தரக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்த அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் தூத்துக்குடியில் தங்கியிருந்து நர்சிங் மற்றும் லேப் டெக்னீசியன் படித்த போது நேதாஜிநகரை சேர்ந்த துரைபாண்டி மகன் பொய்யாழி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம்.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார்கள் என்று நினைத்து கடந்த 7-10-2015 அன்று கோயமுத்தூர் சென்று அங்குள்ள மருதமலை கோயில் அடிவாரத்தில் திருமணம் செய்துகொண்டோம்.

பின்னர் அங்கு வாடகை வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி எனது கணவரின் உறவினர் மற்றும் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பணிபுரிவதாக கூறிக் கொண்டு கோவை வந்த 2 போலீஸ்காரர்கள் என்னை மிரட்டி எனது கணவர் பொய்யாழியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டனர்.

அதிலிருந்து அவரை காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனது கணவரை அழைத்து சென்றவர்கள் போலீசாராக இருக்க வாய்ப்பில்லை என்பதால் நான் இதுகுறித்து கோவையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன்.

பின்னர் கடந்த 7 -11-2015 அன்று தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திலும் புகார் செய்தேன். இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து காமுத்தாய் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version