கெய்ரோ, நவ.16-பாரிசுக்கு நடந்ததுதான் வாஷிங்டனுக்கும், சிரியாவில் தாக்குதல் நடத்தும் மற்ற நாடுகளுக்கும் நடக்கும் என்று மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 14-ம்தேதி நள்ளிரவு பாரிசில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்நிலையில் பாரிசில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. பிரான்ஸ் தவிர அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்நாடுகளை மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் “சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் கொடூரமான தாக்குதலில் பங்கேற்கும் நாடுகளே, கடவுளின் ஆணைப்படி பிரான்சின் மையப்பகுதியான பாரிசை எப்படி தாக்கினோமோ அதேபோல் அமெரிக்காவின் மையமான வாஷிங்டனையும் தாக்குவோம்” என்று ஒரு ஐ.எஸ் தீவிரவாதி கூறுகிறான்.

ஐ.எஸ் அமைப்பின் இந்த புதிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version