அமெரிக்காவில் தீ விபத்தினால் முகம் முற்றாக எரிந்த முன்னாள் தீயணைப்பு வீரர் ஒருவர் முழுமையான முகம் மாற்று சத்திரசிகிச்சைக்குள்ளாகி சிறப்பாக குணமடைந்து வருகிறார்.
மிசிசிப்பி மாநிலத்தைச் சேர்ந்த பட்றிக் ஹார்டிசன் எனும் இவர், சத்திரசிகிச்சை செய்யப்பட்டு 3 மாதங்களான நிலையில், முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றிகரமான முகம் மாற்று சத்திரசிகிச்சையானது மருத்துவத்துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனால் பட்றிக்கை அடையாளம் காண முடியாதளவுக்கு அவரின் முகம் அலங்கோலமாக மாறியது.
இந்நிலையில் டாக்டர் றொட்ரிகஸ், 2012 ஆம் ஆண்டு பட்றிக்கை சந்தித்த போது, அவரின் முகத்தை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவருவதாக உறுதியளித்தார்.
இதற்காக இறந்த ஒருவரின் முகத்தின் மேல் பகுதியை பற்றிக் ஹார்டினுக்குப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இச்சத்திரசிகிச்சைக்குப் பொருத்தமான முகம் ஒன்று தேவைப்பட்டதுடன், அதை, அன்பளிப்பாக பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் இருந்தது.
இத்தகைய முகத்திற்காக காத்திருந்த மருத்துவர்களுக்கு, பொருத்தமான முகம் கிடைத்துள்ளதாக இரு தடவைகள் தவறான தகவல்களும் கிடைத்தன.
இறுதியில் அமெரிக்காவின் புரூக்ளின் நகரைச் சேர்ந்த 26 வயதான டேவிட் ரொட்போக் எனும் இளைஞர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்ததையடுத்து அவரின் முகத்தை அன்பளிப்பாக வழங்க அவரின் குடும்பத்தினர் முன்வந்தனர்.
அதையடுத்து டேவிட் ரொட்போக்கின் முகத்தை பட்றிக் ஹார்டினுக்குப் பொருத்துவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்தனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் லாங்கோன் மருத்துவ நிலையத்தில் இச்சத்திரசிகிச்சை நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள், உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து இச்சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர்.
சுமார் 26 மணித்தியாலங்கள் இச்சத்திரசிகிச்சை நீடித்தது.
இச்சத்திரசிகிச்சை வெற்றியடைவதற்கு 50 சதவீத வாய்ப்பே உள்ளதாக கருதப்பட்டபோதிலும், பட்றிக் ஹார்டிசன் சிறப்பான வகையில் குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த இஸபெல்லா டினோரி எனும் 38 வயதான பெண்ணின் முகத்தை நாய் கடித்ததால் அவருக்கு பகுதியளவில் முகம் மாற்று சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
அமெரிக்காவில் முதல் தடவையாக 2008 ஆம் ஆண்டு முகம் மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
சுமார் 30 பேருக்கு இத்தகயை சத்திரசிகிச்சை செய்யப்பட்டபோதிலும் இவர்களில் ஐவர், ஒவ்வாமையால் இறந்துவிட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரு பிள்ளைகளின் தந்தையான பட்றிக் ஹார்டிசன் (41) தனது முகம் மாற்று சத்திரசிகிச்சை குறித்து கூறுகையில், “விபத்துக்குப் பின் என்னைக் காணும் சிறார்கள், பயந்து ஓடுவார்கள், இப்போது நான் சாதாரண மனிதனாக வாழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.