வடமராட்சிப் பகுதியில் உள்ள பெருமளவு சாராயக்கடைகளுக்குச் சொந்தமான நபரும் வடமாட்சிப் பகுதி பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில பொலிசாரும் சேர்ந்து நடாத்திய புதையல் வேட்டை தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
சாராயக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான விடுதியில் திட்டங்கள் தீட்டப்பட்டு புலிகளின் தங்கம் தோண்டப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற நிதித்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் தகவலின் படியே சாராயக்கடை உரிமையாளர் செயற்பட்டுள்ளர்.
அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வடமாட்சியில் உள்ள பொலிஸ்நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் சிலரும் செயற்பட்டுள்ளார்கள். இவர்களுடன் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரின் மகனும் இணைந்து புதையல் தோண்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
பொலிசாரல் மீட்கப்பட்ட கார் குறித்த பல்கலைக்கழ விரிவுரையாளரின் மகனுடையதாகவும். இதன் பின்னர் நடந்த சம்பங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் மணற் காட்டுப் பகுதி கடற்கரையில் ஒரு குழுவினர் கனரக வாகனம் மூலம் குழி ஒன்றைத் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக அங்குள்ள மக்கள் இக் குழுவினரிடம் விசாரித்த போது தாம் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனத் தெரிவித்தனர்.
எனினும் இக்குழுவினர் மீது சந்தேகம் கொண்ட பொது மக்கள் இது தொடர்பாக கிராம சேவையாளருக்கும் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நெல்லியடி பொலிஸ் குழுவும் புலனாய்வுத்துறைப் பிரிவினரும் சென் றிருந்த போது அக் குழுவினர் இரண்டு கார்களில் தப்பிச் சென்றனர்.
எனினும் அக்கார்களை பின்தொடர்ந்து பொலிஸாரும் புலனாய்வுத்துறைப் பிரிவினரும் மண்டான் பகுதியில் வைத்து ஒரு காரினை மடக்கிப் பிடித்ததுடன் அதில் இருந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். அதில் மூவர் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் என்பதுடன் ஒருவர் தமிழர் என்பதும் தெரிய வந்தது. தற்போது குறித்த தமிழன் பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசாவினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அக் குழுவினரால் கடற்கரையில் விட்டுச் செல்லப்பட்ட கனரக வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இக் குழுவினர் தொடர்பான பொலிஸ் விசாரணையில் வெளிநாட்டிலுள்ள ஒருவரது இரகசிய தகவலின் படியே தாம் இங்கு வந்ததாகவும் இதற்காக புலனாய்வுத்துறை அதிகாரிகள் என்ற பேரில் வடமராட்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்றுவருவதுடன் மணற்காட்டு கடற்கரையில் தங்க நகைப் புதையல் இருப்பதற்கான புலனாய்வுகளை நெல்லியடிப் பொலிஸ் புலனாய்வுத் துறை பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
புதையல் தோண்டும் சம்பவம் முற்று முழுதாக வடமராடச்சியில் உள்ள சில முக்கிய பொலிஸ் அதிகாரிகளின் தொடர்புடன் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இருந்து இதனை பொலிசார் முடிமறைக்க முற்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வெளிநாட்டில் இருந்து தங்கம் தொடர்பாக தகவல்கள் தெரிவித்த புலிகளின் நிதித்துறையில் முக்கியமானவராக இருந்தவரையும் சாராயக்கடை முதலாளியையும் பொலிசார் விசாரணைகளில் இருந்து தப்ப வைக்க முயல்வதாகவும் தெரியவருகின்றது.