பரபரப்பான கால்பந்து போட்டிக்கு இடையே பயங்கர சத்தங்கள் கேட்டபோது யாரோ பட்டாசு கொளுத்துகிறார்கள் என்றுதான் அரங் கில் இருந்த அத்தனைபேரும் நினைத் தார்கள்.

ஏன் அங்கிருந்த ஜனாதிபதி கூட அதனை பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை. மூன்றாவது வெடிப்பு நிகழ்ந்தபோதுதான் எல்லோரும் பர பரப்படைந்தனர்.

அருகில் இருந்த இசை மண்டபத்திலும் இதே கதை தான். மண்டபத்திற்கு நடுவில் கூட்டத்திற்கு மத்தியில் யாரோ சுடும்போது, இதுவும் இசை நிகழ்ச்சியின் ஓர் அங்கம் என்றே எல்லோரும் நினைத்தார்கள்.

அருகில் இருப்பவர்கள் துப்பாக்கி சூடு பட்டு இரத்தம் தெறிக்க கீழே வீழும்போதுதான் நிலைமையை உணர்ந்து உயிரை காத்துக்கொள்ள பின்னங்கால் பட ஓடினார்கள்.

பாரிஸ் நகரில் ஒரு வாரத்திற்கு முன்னர் பயங்கர தாக்குதல் இடம்பெற்ற போது அங்குள்ள மக்களின் மனநிலை இப்படியாகத்தான் இருந்தது. எம்மை இப்படியெல்லாம் கொடூர மாக யார் தாக்கப்போகிறார்கள் என்றே பாரிஸ் நகர மக்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

சரியாக செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெறும்போது அமெரிக்க மக்களின் மனோநிலையும் இப்படி யாகத்தான் இருந்தது. ஆனால் உண்மையை புரிந்துகொள்ளும்போது போதுமான அளவு பதிப்புகள் அரங்கேறி இருந்தன.

poles-1செப்டெம்பர் தாக்குதலாக   இருக்கட்டும் பாரிஸ் தாக்குதலாக இருக் கட்டும் மேற்குலகில் இடம்பெறும் இவ்வாறான தாக்குதல்களை கிளறிப் பார்த்தால் அதற்கு பின்னால் தன்னையே சுடும் தன்வினை இருப்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்றே எடுத்துகொள்ள வேண்டி இருக்கும்.

தீவிரவாதத்தை ஒழிக்கவெனக் கூறி மேற்குலகம் மத்திய கிழக்கில் கண் டேமேனிக்கு அத்துமீறல்களை நடத்து கிறது. அப்படியாவது தீவிரவாதத்தை ஒழிப்பார்களா என்று பார்த்தால் பதிலுக்கு பெட்ரோல் ஊற்றி நன்றாக வளர்க்கிறார் கள்.

அதாவது மேலோட்டமாக பார்த்தால் தீவிரவாதம் முளைக்கும் இடம் எல்லாவற்றிலும் அமெரிக்கா டேரா போட்டு ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள், உளவாளிகள் அப்படியும் இல்லை என்றால் தனது சொந்த படையினரையே அனுப்பி தாக்குதல் நடத்துகிறது.

ஆனால் அமெரிக்கா சொல்லும் அந்த தீவிரவாதம் அழிந்த பாடில்லை. அதற்கு பதில் அந்த தீவிரவாதம் இன்னும் விகார மடைந்திருக்கிறது.

முன்னர் என்றால் அல் கொய்தா இருந்தது. அது இருந்து நின்று தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டு வேலையை பார்க்க போய்விடும். ஆனால் இப்போது இஸ்லாமிய தேசம் என்று தம்மை அழைத்துக் கொண்டு அட்டகாசம் புரியும ஐ.எஸ். குழுவை பார்த்தால் அல் கொய்தாவே மேல் என புரியும் நினைக்கத் தோன்றுகிறது.

அமெரிக்கா அல் கொய்தாவை அழிக்க நினைத்து அதனை மேலும் விகாரமாக்கியதன் விளைவுதான் இந்த ஐ.எஸ். குழு. அடிப்படையில் ஒன்று சரியில்லை என்றால் மாற்றாக சரியான ஒன்றை கொண்டுவரவேண்டும். ஆனால் மேற்குலகின் தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் பிழைத்துப் போவதற்கு காரணம் இந்த சின்னஞ்சிறிய கோட்பா டாகும்.

அல் கொய்தா அல்லது ஐ.எஸ். போன்ற குழுக்களுக்கு மாற்றாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருப்பது வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளார்கள் மாத்திரமாவார்கள்.

எப்படி அல் கொய்தாக்காரர்கள் சட்ட விரோதமாக அட்டூழியங்களை செய்கிறார்களோ அதனை இந்த சர்வாதிகாரிகள் சட்டம் இயற்றிக் கொண்டு செய்கிறார்கள்.

ஆனால் மேற்குலகம் இந்த சர்வா திகாரிகளைத்தான் ஒரு மாற்றாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் மத்திய கிழக்கில் ஜனநாயகம் வருவதை அமெ ரிக்காவானாலும் சரி ஐரோப்பாவானா லும் சரி நுனி நாக்கால் மாத்திரம் பெரிதாக வரவேற்கும்.

மேற்குலகின் இந்த இரட்டை நிலைப்பாடு தான் ஐ.எஸ்ஸின் விகாரத் தோற்றத்திற்கு காரணம். இந்த இரட்டை நிலைப்பாட்டின் கதையை 1992ஆம் ஆண்டு அல்ஜீரி யாவில் இருந்து ஆரம்பிக்கலாம்.

அல்ஜீரிய பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய மீட்பு முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தகுதி பெற்றது. ஆனால் இராணுவம் தலையிட்டு வெற்றிபெற்ற இஸ்லாமியவாத கட்சியை நாட்டில் தடை செய்து அதன் உறுப்பினர்களையும் கைது செய்தது. மேற்குலகம் அப்போதுதான் ஆறுதல் அடைந்தது.

மத்திய கிழக்கில் ஜனநாயகம் இருக்கும் ஒரே இடம் என்று இஸ்ரேல் பெருமை பேசுகிறது. ஆனால் அந்த ஜனநாயகம் ஏனைய பிராந்திய நாடுகளுக்கு வருவதற்கு அதிகம் பயப்படுவதும் இஸ்ரேலாகும்.

மக்கள் விரும்பும் ஆட்சி வந்தால் அது இஸ்ரேல் எதிர்ப்பு ஆட்சியாகத் தான் இருக்கும் என்பது இஸ்ரேலுக்கு நன்றாகத் தெரியும். எனவே மத்திய கிழக்கில் ஜனநாயகம் பிறப்பதை எந்த தகிடுதத்தம் செய்தாவது தடுப்பதில் இஸ்ரேல் எப்போதும் கவனமாக இருக்கும்.

இதனைத் தெளிவாகச் சொல்வதற்கு வேறெங்கும் போகத் தேவையில்லை, பலஸ்தீன நிலத்தில் 2006இல் நடந்த தேர்தலையே உதாரணமாகக் காட்டலாம். அந்த தேர்தலில் இஸ்ரேலின் பரம எதிரியான ஹமாஸ் அமைப்புக்கு மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாக்களித்தார்கள்.

கடைசியில் ஹமாஸ் ஆட்சியில் இருக்கும் காசாவை முடக்கிய இஸ்ரேல், ஹமாஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்கு வழக்கின்றி சிறையில் போட்டது. ஆனால் எப்போதும் ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பதாகச் சொல்லும் மேற்குலகம் அப்போதெல்லாம் மெளனம் காத்தது.

ஐ.எஸ்ஸின் விகாரத் தோற்றத்திற்கு உடனடிக் காரணம் 2011இல் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் ஏற் பட்ட மக்கள் எழுச்சி போராட்டம்.

யாரோ தலைகால் புரியாதவர்கள் அதனை அரபு வசந்தம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த மக்கள் போராட்டத்திற்கு பின்னர் மக்கள் வீதிக்கு இறங்கிய எல்லா நாடுகளிலும் நிலைமை இன்னும் சீரழிந்தன.

அதாவது ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியும் உருப்படியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று பெரும்பான்மை மக்கள் தோல்வியை உணர்ந்த தருணம் அது.

பெரும்பான்மை ஷியா முஸ்லிம்களை கொண்ட பஹ்ரைனில் சுன்னி ஆட்சி யாளர்களுக்கு எதிராக ஜனநாயகம் கேட்டு மக்கள் வீதிக்கு இறங்கினார்கள்.

ஆனால் மன்னர் அருகில் இருக்கும் சுன்னி நாடானா சவூதியின் துருப்பினரை அழைத்து வந்து ஆர்ப்பாட்டக்காரர் களை கொடூரமாக ஒடுக்கினார். கடைசி யில் மக்கள் தோல்வியோடு வீடுகளுக்கு திரும்பவேண்டியதாயிற்று.

ஹொஸ்னி முபாரக்

எகிப்தின் நிலைமையை பார்த்தால் அதனை விடவும் மோசம். அங்கு ஆர்ப்பாட்டாத்தின் மூலம் மூன்று தசாப்தங்கள் ஆட்சியில் இருந்த ஹொஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டது என்னமோ உண்மைதான்.

ஆனால் அதற்கு பின்னர் ஜனநாயகப்படி வெற்றி பெற்றவர்களை ஆட்சி செய்ய விடாமல் இடையில் இராணுவம் புகுந்து ஆட்சியை கைப்பற்றியது. கடைசியில் பார்த்தால் ஹொஸ்னி முபாரக் பரவாயில்லை என்னும் அளவுக்கு ஆட்சியை பிடித்த அப்துல் பத்தாஹ் அல் சிசி கொடூர மானவராக தெரிகிறார்.

அப்துல் பத்தாஹ் அல் சிசி

லிபியாவிலும் மக்கள் போராட்டம் வெடித்து அது ஓர் ஆயுதப் போராட்ட மாகவே மாறியது. ஆட்சியில் தொத்திக் கொண்டிருந்த முஅம்மர் கடாபி கொலை செய்து ஒரு முடிவு கட்டியபோதும் ஆயு தத்தை பிடித்தவர்கள் அதனை கைவிடாமல் அதிகாரத்திற்காக ஆளுக்கொரு முனை யில் இருந்து சண்டை பிடிக்கிறார்கள்.

கடாபியை துரத்த முண்டியடித்துக் கொண்டு வானில் இருந்து குண்டு போட்ட மேற்குலம் அதற்கு பின் உருப்படியாக ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றும் செய்யவில்லை.

அரபு எழுச்சி போராட்டம் பிறந்த துனீஷியாவின் நிலைமை ஒப்பீட்டளவில் ஸ்திரமானது என்றபோதும் அங்கும் குழப்பத்திற்கு பஞ்சமில்லை.

மக்கள் ஆர்ப் பாட்டம் ஆட்சியில் இருந்த சைன் அல்.அபிதீன் பென் அலியை துரத்திய போதும் அதற்கு பின் ஏற்பட்ட ஜன நாயக அரசுக்கு தொடர்ந்து ஆட்சி செய்ய அரசியல் சூழல் சாதகமாக இருக்கவில்லை. இன்றும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

யெமனிலும் இதே கதைதான். ஜன நாயகம் கேட்டு மக்கள் வீதிக்கு இறங்கினார்கள். பல தசாப்தங்கள் ஆட் சியில் இருந்த அலி அப்துல்லாஹ் சலேஹ்வும் பதவி விலகி ஜனநாயகத் திற்கு வழி விடுவதாக பாசாங்கு செய்தார்.

ஆனால் இன்று அவர் ஹுத்தி ஷியா கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து நாட்டை கைப்பற்ற முயற்சிக்க மறு பக்கம் சவூதிக்கு தலையாட்டு பொம்மை அரசொன்று எதிராக போராட ஜனநாயகம் கேட்ட மக்கள் அர்த்தம் இல்லாத சிவில் யுத்தம் ஒன்றில் சிக்கிக்கொண்டார்கள்.

இதுவெல்லாவற்றையும் விழுங்கிச் சாப்பிடும் அளவுக்கு சிரியாவின் பிரச்சினை பெரியது. சிறுபான்மை ஷியா முஸ்லிமான ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசை வீழ்த்த வீதிக்கு இறங்கிய பெரும்பான்மை சுன்னி முஸ்லிம்கள் கடைசியில் சிவில் யுத்தம் ஒன்றை சந்திக்க வேண்டியதாயிற்று. இப்போது பார்த்தால் அங்கு கண்டவர் குண்டு போட்டுச் செல்லும் சர்வதேச குண்டுத் தொட்டியாக மாறிவிட்டது.

இதிலே ஜனநாயக ஆதரவு இஸ்லாமியவாதிகளையே குறிப்பிட்டுச் சொல்லவேண்டி இருக்கிறது. அரபு எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் இடம்பெற்ற உண்மையாக மக்கள் வாக்களித்த தேர்தல்களில் இந்த இஸ்லாமியவாதிகளே வெற்றி பெற்றார்கள்.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வெற்றி அல் கொய்தா போன்ற இஸ்லாத்தின் பெயரால் முரட்டுத்தனமாக போராடும் குழுக்களின் மிகப் பெரிய தோல்வியாக இருந்தது. உண்மையில் இந்த தீவிரப் போக்குடையவர்களுக்கு ஜனநாயகத்தை நம்பும் இஸ்லாமியவாதிகள் தான் சரியான மாற்றாக இருந்தார்கள்.

ஆனால் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வெற்றி அல்கொய்தா போன்றவர்களுக்கு மாத்திரமன்றி சவூதி அரேபியா உட்பட பிராந்தியத்தில் இருக்கும் சர்வாதிகார நாடுகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று மேற்குலம் மற்றும் இஸ்ரேலும் தொடை நடுங்கின.

எனவே இஸ்லாமியவாத ஜனநாயக விரும்பிகள் அனைவரினதும் ஒத்துழைப்போடு துரத்தியடிக்கப்பட்டார்கள். எகிப்தில் நடந்தது அதுவே, துனீஷியாவில் அரசியல் குழப்பம் விளைவித்த இஸ்லாமியவாதிகளான அன்னஹ்தா கட்சியினர் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார்கள். லிபியாவிலும் ஓரளவுக்கு அப்படியான சூழல் இருந்தது.

எனவே பழையபடி சர்வாதிகாரிகள் அதிகார நாற்காலியில் காலுக்கு மேல் கால்போட்டு அமர்ந்தார்கள். மேற்குலகம் ஆறுதல் அடைந்தது. இஸ்ரேலின் முயற்சி பழித்தது. இந்த கட்சியில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த செயலால் உண்மையில் இந்த ரக இஸ்லாமியவாதிகள் தான் வெற்றிபெற்றார்கள்.

இவர்களுக்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பே பெரும் எதிரியாக இருந்தது. ஆனால் இப்போது ஜனநாயகத்தால் இஸ்லாத்தை கொண்டுவர முடியாது என்பதை நிரூபிக்க கடும்போக்காளர்களுக்கு சூழல் ஏற்பட்டது.

தேர்தலில் வென்றாலும் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர விடமாட்டார்கள் என்பதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆட்சி கவிழ்ப்பு இந்த கடும்போக்கு இஸ்லாமியவாதிகளுக்கு நல்லதொரு உதாரணமாக போய்விட்டது.

இவ்வாறான நம்பிக்கை இழந்த சூழலிலேயே ஐ.எஸ். குழுவின் எழுச்சி ஈராக்கின் மொசூல் நகரில் ஆரம்பமானது. இந்த இரண்டு சம்பவத்தையும் தொடர்புபடுத்தி பார்த்தால் விடுபட்ட பகுதிகள் தெளிவாக தெரிந்து விடும்.

அதாவது மத்திய கிழக்கில் ஜனநாயகம் தோற்ற பின் மக்கள் மாற்று தீர்வு தேடிய போதுதான் ஐ.எஸ். மொசூலில் தனது பயணத்தை ஆரம்பித்து ஒருசில மாதங்களுக்குள் சிரியாவின் ரக்கா நகர் வரை வந்து பெரியதொரு நிலத்தை கைப்பற்றி அதற்கு பம்மாத்தாக இஸ்லாமிய கிலாபத் என்று பெயரும் வைத்துக் கொண்டது.

ஐ.எஸ்ஸின் தோற்றத்திற்கு நேரடி பங்குதாரர்கள் யார் என்று பார்த்தால் அங்கு அமெரிக்கா இருக்கும், ஐரோப்பா இருக்கும், இஸ்ரேல் இருக்கும் மத்திய கிழக்கு சர்வாதிகாரிகள் இருப்பார்கள்.

தர்க்கம் போட்டு சொல்வதென்றால் ஐ.எஸ்.இருப்பதால் மேற்சொன்ன தரப்புகளுக்குத் தான் இலாபம் அதிகம் ஆனால் ஐ.எஸ்ஸின் கோணத்தில் இருந்து பார்த்தால் அது தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் அது மேற்சொன்ன தரப்புக்களுக்கு எதிராகத் தான் சண்டை போட வேண்டும்.

அதன் விளைவே பாரிஸ் தாக்குதல் மற்றும் ஐரோப்பாவில் இன்று ஏற்பட்டிருக்கும் பதற்றம். அதாவது ஐ.எஸ்ஸின் இந்த தாக்குதல் எல்லாம் வெறுமனே ஒரு சந்தைப்படுத்தல் உத்தி.

இந்த குழப்பதை சரியாக புரியும்படி சொல்வதென்றால் எதிரிகளும் அவர்கள்தான் நண்பர்களும் அவர்கள்தான்.. என்றே விளக்க வேண்டும்.

-எஸ். பிர்தௌஸ்-

Share.
Leave A Reply

Exit mobile version