இலங்கையில் உள்ள சிகிரியா என்ற சிங்க மலையும் அதில் அமைந்துள்ள அரண்மனையும் உலக பாரம்பரிய சின்னமாக ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோவால் 1982 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பெருமைக்கு உரியது.
மத்திய மாகாணத்தில் மத்திய மட்டெல்லா மாவட்டத்தை சேர்ந்த தம்புல்லா என்ற ஊருக்கு அருகில் உள்ளது இந்த சிகிரியா. இங்கு செல்ல சகல பயண வசதிகளும் உண்டு.
தொல்பொருள் ஆய்வுக்குரிய இடங்களில் உலக அளவில் முக்கியமானவைகளில் ஒன்றாக உள்ளது.
இந்த அரண்மனை கி.பி. 477 – 495 வரையிலான காலத்தில் கசியப்பா என்பவரால் பாறை மீது கட்டப்பட்டது.
இதன் பக்கங்களில் எழிலான ஓவியங்கள் வரையப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த ஓவியங்கள் திறந்த பாறை சுவர்களில் வரையப்பட்டுள்ளது.
இத்தனை காலமாக, மழை வெயில் எல்லாம் கடந்து தனது புதுமை மாறாமல் காட்சியளிப்பது, உலகில் வேறு எங்கும் போட்டி இல்லாத பெருமை என்றே சொல்லலாம்.
உலகிலேயே பெரிய ஓவியங்கள் இதுவாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த ஓவியங்களில், திறந்த மார்பகங்களுடன் உள்ள 21 பெண்கள், இலங்கையில் 5ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெண்களின் தோற்றம், உடைகள், ஆபரணங்கள், அவர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக தத்ரூபமாக உள்ளது.
பாறையை சுற்றி அரண்மனை எழுப்ப வரலாற்று காரணமாக சொல்லப்படுவது. மன்னர் வழி இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் போராட்டம் நடந்துள்ளது.
அந்த போராட்டத்தில் காசியப்பா தன் தந்தையை கொன்றுவிட்டார். தப்பி அயல்நாடு சென்ற தனது சகோதரன் திரும்ப வந்து பழிவாங்கக் கூடும் என்ற பயத்தில் தனது இருப்பிடத்தை பாறை மீது அமைத்துக்கொள்ள கட்டப்பட்டதுதான் இந்த அரண்மனை.
இந்த பாறையின் உயரம் 200 மீற்றர் (660 அடிகள்) உடையது. இந்த பாறையின் தோற்றம் அதன் சமபாதியான உயரத்தில் ஒரு மடிப்பாக இயற்கையாகவே அமைந்துள்ளது. அதனால், ஒரு சிங்கம் படுத்திருப்பது போன்ற தோற்றம் இருப்பதால் இந்த மலைக்கு சிங்க மலை என்ற பெயர் கிடைத்துள்ளது.
சிங்கத்தின் வாய்க்குள் பார்வையாளர்கள் செல்வதற்கான வழி அமைக்கப்பட்டுள்ளது. பாறையின் உச்சி அமைப்பு சமதள பரப்பும் ஒரு பக்கம் சாய்வும் கொண்டது. காடுகளை சுற்றி அடித்தளத்துடன் அரண்மனை வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதை அமைத்தவரிடம் நல்ல கலைஞானம் இருந்துள்ளது. அழகிய தோட்டம் நீர்பாசன அமைப்பு, ஒரே மாதிரியான சீரான குளியல் குளங்கள், நீரூற்றுகள் என சிக்கலான அமைப்பு, ஒரு மாயாஜால படைப்பு போலவே பிரமிப்பை தருகிறது.
கீழே சிங்கத்தின் கால்களாக இரண்டு பெரிய பாறைகற்கள் செதுக்கப்பட்டுள்ளது. அதன் விரல்கள், நகங்கள் அற்புத வடிவமைப்பு.
சிங்கள மொழியிலும் இலங்கை தேசியக்கொடியிலும் சிங்கம் தொடர்புடையது. இந்த மலை சிங்கத்தை அந்த நாட்டோடு இவற்றுக்கெல்லாம் முன்பாகவே தொடர்புபடுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
அதனால், அந்த சிங்கம் ஒரு இனத்தை பிரதிபலிப்பது அல்ல இலங்கையில் வாழும் சகல இனத்துக்குமே உரியதுதான்.
பரவசப்படுத்தும் இந்த பாறை அரண்மனை சுற்றுலா சுவைஞர்களுக்கும் வரலாற்று காலத்தை, அதன் களத்திலே வாசிக்க விரும்புபவர்களுக்கும் ஒரு வளமான வாய்ப்பு.
மரு.சரவணன்