தீவிரவாத கருத்துக்களை சொன்னவுடன் மக்கள் கை தட்டுகிறார்கள் என்பதற்காக அரசியல் தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் இனிமேலும் செயற்படக்கூடாது.
வன்முறையை நாங்கள் தொட்டுக்கூட பார்க்கக்கூடாது சொல்ல வேண்டி யதார்த்தத்தை கைதட்டல் கிடைக்காவிட்டாலும் சொல்வதற்கு தயங்கக்கூடாது. ஏனென்றால், வன்முறை வெடிக்கும் சந்தர்ப்பத்தில் கூடுதலாக பாதிக்கப்படுவது எமது மக்களே தவிர வேறு எவரும் இல்லை.
இளைஞர்கள் பொறுமையிழந்து சில சிறு சிறு வன்முறை சம்பவங்களில் ஈடுபடும்போது சில அரசியல் தலைவர்கள் அதை கட்டுப்படுத்தாமல் அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.
பின்னர் அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் கை மீறிப்போனதால் இறுதியில் அதற்கு அவர்களே பலியானார்கள். ஆனபடியால் அவ்வாறான சூழ்நிலை இனிமேல் ஏற்படாமல் நாம் புத்திக்கூர்மையுடன் செயற்படவேண்டுமென யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரி வார வெளியீட்டிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் காணாமல் போனோர் தொடர்பாக நேரடியாகவே இங்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 18 ஆம் திகதி அந்தக் குழுவை நீங்கள் சென்று சந்தித்தீர்கள். அந்த சந்திப்பு எவ்வாறு அமைந்தது? அந்த சந்திப்பில் எது குறித்து கலந்துரையாடினீர்கள்?
பதில்: ஐக்கிய நாடுகள் சபையின் காணாமற்போனோர் தொடர்பான செயற்குழுவுடனே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஒரு முக்கியமான அங்கமாகும்.
இந்த செயற்குழுவிற்குத்தான் 1989 , 1990 களில் மஹிந்த ராஜபக் ஷவும் வாசுதேவ நாணயக்காரவுமே அங்கு சென்று தென்னிலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களை கொடுத்து காணாமல் போனோர் தொடர்பிலான சர்வதேசத்தின் தலையீட்டை கோரியிருந்தார்கள்.
அப்பொழுது தமரா குணநாயகமும் மனித உரிமை ஆர்வலராக அவர்களுடன் சேர்ந்து செயற்பட்டார். ஆகவே, அந்த செயற்குழுவிற்கு உலக நாடுகள் மத்தி யில் எத்தகைய செல்வாக்கினை கொண்டுள்ளது என்பது பற்றி அன்றே மஹிந்த ராஜபக் ஷ அறிந்து வைத்திருந்த படியினாலேயே மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் பல தடவைகள் இவர்களது வருகையினை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப்பேரவை பல தடவைகள் இவர்களது வருகையினை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் கடந்த அரசாங்கம் இவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.
ஆனால், தற்போது ஆட்சிமாற்றத்தின் பின் வரவேண்டி இருந்தும் வரமுடியாத பல குழுக்கள் தற்போது வர ஆரம்பித்து விட்டன.
அதில் முதலாவதாகவும் பிரதானமானதாகவும் வந்த குழுதான் இந்த காணாமற்போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு. இச்செயற்குழுவையே நேற்று நான் சந்தித்தேன்.
இவர்கள் வந்து காணாமல்போனோர் தொடர்பாக வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங் களுக்குச் சென்று நேரடியாகவே வாக்குமூலம் திரட்டினார்கள். இவர்கள் வந்ததற்கான முக்கிய நோக்கமும் இதுவே.
பின்னர் அவர்கள் பல அரச தரப்பினருடனும் அமைப்புக்களுடனும் மற்றும் சிவில் சமூகஙகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நானே கலந்து கொண்டேன். இச்சந்திப்பானது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அவர்கள் காணாமல்போனோர் தொடர்பாக உறவினர்கள் மற்றவர்களிடம் திரட்டிய தகவல்களை அடிப்படையாக வைத்து பல முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக என்னுடன் கலந்துரையாடினார்கள்.
அதில் நான் இரகசிய தடுப்பு முகாம் பற்றிய எனக்கு தெரிந்த விடயங்கள் அவற்றின் அமைவிடம் அவற்றின் தற்போதைய நிலை பற்றி அவர்கள் கேட்டிருந்த படியால் அவர்களுக்கு தெரிவித்தேன்.
அதுமட்டுமல்ல, சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளுள்ள இடம் மற்றும் அவர்களின் எண்ணிக்கை போன்ற தரவுகள் கூட நேரத்திற்கு நேரம் வித்தியாசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நேற்று முன்தினம் கூட உண்ணாவிரதத்தின்போது கைதிகளின் எண்ணிக்கையில் பத்துப்பேர் அளவில் வித்தியாசம் தெரிந்தது. அதாவது உத்தியோகபூர்வமாக முதல் அவர்கள் தந்த தகவலை தற்போது பிழை எனக்கூறி மேலும் பத்துப்பேர்கள் உள்ளடங்குகிறார்கள் என தற்போது தெரிவிக்கிறார்கள்.
அதாவது, தங்களுடைய பாதுகாப்பிலுள்ளார்கள் எனக்கூறும் அரசாங்கம் ஆவணங்கள் உள்ள கைதிகளின் எண்ணிக்கையினையே அழுத்தம் திருத்தமாக குறிப்பிட முடியாத நிலையிலுள்ளமையானது, அவ்வளவு ஆரோக்கியமான விடயமில்லை.
ஏனென்றால், ஒருவர் இருவருடைய எண்ணிக்கை மாறுபடும் பட்சத்தில் கூட அவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன ஆனது? என்று பாரியதொரு கேள்வி எழும்பி விடும்.
கேள்வி: விடுதலை செய்யப்பட்ட 31 கைதிகளில் 8 பேர் சிங்களவர்கள். ஆகவே, எப்படி அவர்களையும் தமிழ் அரசியல் கைதிகள் என்ற எண்ணிக்கைக்குள் உள்ளடக்கி விடுதலை செய்ய முடியும்?
பதில்: பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவ லில் உள்ளவர்களில் மற்றைய இனத்தவர்களும் உள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்று பல சிங்களவர்களும் முஸ்லிம்களும் இருக்கின்றார்கள்.
உதாரணமாக விடுதலைப்புலிகள் BMICH இல் மஹிந்த ராஜபக் ஷவை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு சிங்கள கேர்ணலை பயன்படுத்தியது.
இவ்வாறு வெவ்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளால் உளவாளிகளாக ஊடுருவினவர்களாக பயன்படுத்தப்பட்ட பலர் விடுதலைப்புலிகளின் சந்தேக நபர்கள் என்று அக்குழுவினுள் இவர்களும் காணப்படுகின்றனர்.
கேள்வி: அந்த 31 அரசியல் கைதிகளுக்குள்ளும் உள்ளடக்கப்பட்டுள்ள அந்த 8 பேருக்கும் ஏதேனும் விசேட கவனிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் நிலவுகின்றதே? மற்றும் இது குறித்து ஐ.நா. குழுவின் கருத்து யாது?
பதில்: அந்த 8 பேரில் பெரும்பாலானவர்களுக்கு வேறு வழக்குகளும் இருக்கின்றன. ஏனெனில், பாதாளக்கோஷ்டியை சேர்ந்தவர்களையும் பல சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் தம் தேவைகளுக்காக பணம் கொடுத்து அவர்களிடம் உதவி பெற்றுள்ளார்கள்.
ஆகவே, இந்த 8 பேரும் பிணையில் வெளியே செல்ல முடியாது. ஒருவேளை இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டாலும் வேறு வழக்குகள் இருப்பதால் இவர்களுக்கு வெளியில் செல்ல முடியாது.
அத்துடன், இதையும் நான் அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன். அதாவது அரசாங்கம் இந்த எண்ணிக்கையினைக் கூட தெளிவாக குறிப்பிடாததும் ஓர் ஆபத்தான சூழ்நிலை.
அதாவது, அரசிடம் தகவல்கள் காணப்படுகின்ற போதும் ஏன் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன? அதில் ஏதாவது விடயங்கள் நடைபெறுகின்றனவா? இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? ஆவணங்கள் மறைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து அக்குழு உரிய தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என அவர்களிடம் தெரிவித்தேன்.
அத்துடன், 20,000 இற்கு மேற்பட்டவர்கள் தங்கள் உறவினர்கள் காணாமல் போனது தொடர்பாக ஆதாரபூர்வமாக சாட்சியமளித்திருக்கிறார்கள்.
உதாரணமாக பரணகம கொமிஷனிலும் சாட்சியமளித்திருந்தார்கள். அவ்வாறான வேளைகளில் நானும் அங்கிருந்து அதனை அவதானித்திருக்கின்றேன்.
அவ்வாறு சாட்சியமளிப்பவர்கள் தங்கள் உறவினர்களை யார் கைது செய்தார்கள்? யார் கடத்திச் சென்றார்கள்? என்று கடத்தி சென்றவர்களுடைய பெயர், அவர்கள் யார், எந்த முகாமுக்கு கொண்டு சென்றார்கள் என்பது பற்றிய விடயங்களை அநேக தடவைகள் வழங்கியிருந்தும், அவற்றை அரசாங்கம் பதிவுசெய்ததே தவிர, வேறு மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அதாவது ஆதாரங்கள் காணப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது ஏன் என்று அக்குழு ஆராய வேண்டும் எனவும் மேற்படி அது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் எனவும் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
அவர்கள் காணாமல்போனோர் தொடர்பான தாங்கள் எவ்வாறான பங்களிப்பினை வழங்கவேண்டும் எனக்கேட்டிருந்தார்கள்? உண்மை கண்டறிவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கிறது.
அவ்வாறு ஏற்படுத்துகின்றபோதும் இந்த காணாமல்போனோர் தொடர்பான விடயங்கள் வெளிவரும் போதும், அக்குழுவினுடைய தொழில்நுட்ப உதவி எங்களுக்கு அவசியம்.
ஆகவே, அவர்கள் அரசாங்கத்திற்கு அந்த உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக அவர்களுடைய நிரந்தர பிரசன்னம் ஒன்று இங்கு காணப்பட வேண்டும். அதாவது அவர்களுடைய அலுவலகம் ஒன்றை இங்கு ஏற்படுத்தும்படி கேட்டுள்ளோம்.
ஐ.நா.வின் பல்வேறு அங்கங்கள் வெவ்வேறு விதமாக செயற்பட்டாலும் இந்த காணாமல் போனோர் தொடர்பான விவகாரம், யுத்தம் சம்பந்தமான விடயங்க ளில் முக்கியமானதாக இருப்பதாலும் ஆட்சிமாற்றத்தின் பின்னர் தெளிவான தரவுகள் காணப்படாமையாலும் இச்செயற்குழுவின் அலுவலகம் ஒன்றின் மூலம் நேரடி ஈடுபாடு இருப்பது இங்கு அவசியம் என்பதனை வலியுறுத்தினேன்.
இதனைப்பற்றி அவர்களுக்கும் முதலே ஒரு எண்ணம் காணப்பட்டதால் இதனைக்குறித்து மிகவும் சாதகமாக பரிசீலிப்பதாகவும் அரசாங்கத்துடன் அதனைக்குறித்து பேசுவதாகவும் கூறினார்கள்.
கேள்வி: யாழ்ப்பாணத்தில் மூன்று வாரங்களுக்கு முன் காணாமல்போன மூன்று பேரை வீட்டில் கொண்டுவந்து விட்டதாகவும் இதுகுறித்து வாய் திறக்க வேண்டாம் எனக் கூறியதாகவும் ஒரு தகவல் வெளியாகியது. இதுகுறித்து பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அக்குழுவிடம் ஏதாவது தெரிவித்தீர்களா? அவர்களை விசாரிப்பதால் மேலும் தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படலாம் தானே?
பதில்: இது மட்டுமல்ல, இதைப்போன்று வேறு தகவல்களும் எங்களுக்கு தெரியும். இதனைக்குறித்தும் கலந்துரையாடினோம். விசேடமாக இரகசிய தடுப்பு முகாம்களிலுள்ளவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படும் பல சம்பவங்கள் உண்டு.
சில தகவல்கள் வெளிவருவதில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இது குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்ற போது இது குறித்த பல தகவல்கள் எனக்கு கிட்டியது.
ஆனால், நான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் அச்சாட்சியங்களை நான் பதிவு செய்து அவற்றை விசாரணைக்கு அனுப்பி வைத்தும் இருக்கிறேன்.
இரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஒரு கடப்பாடு இருப்பதால் அக்குழுவிடம் கூட நான் விபரங்களை கூறவில்லை. ஆனால், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதை குறிப்பிட்டேன்.
இவை கூட அந்த இரகசிய முகாம்கள் இருப்பதற்கு ஓர் ஆதாரம். அத்துடன், அந்த இரகசிய முகாம்களில் இருந்தவர்களைக்கூட நான் விசாரித்து அனுப்பியிருக்கிறேன்.
இப்பொழுதும் கூட ஒரு கடற்படை வீரர் திருகோணமலையில் டொக்கியாட்டில் ஒரு இரகசிய முகாம் இருந்ததாக ஒரு வழக்கின் போது நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளார்.
ஆகவே, முதல் எம்மால் கூறப்பட்டது, தற்பொழுது அது சாட்சியம் மூலமாக அவர்களில் ஒருவராலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதுகுறித்து அரசாங்கத்திடம் துருவி ஆராய வேண்டும்.
இருந்ததை இனி மறைக்க முடியாது. அப்படி இல்லை என்று கூறும் பட்சத்தில் இருந்தவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை பற்றி அவர்கள் ஆராய வேண்டும் எனவும் அவர்களிடம் நான் கூறியிருந்தேன்.
கேள்வி: இப்பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்ததா?
பதில்: ஆம் சாதகமாகவே அமைந்தது. அவர்கள் இவ்விடயங்களில் நிபுணர்கள். அத்துடன், அவர்கள் அர்ப்பணிப்புடனும் இணக்கப்பாட்டுடனும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: அவர்கள் இந்த தரவுகளை சேக ரித்துக்கொண்டு அடுத்து என்ன செய்வார் கள்? இதனை ஐ. நா. விற்கு சமர்ப்பிப்பார்களா? அல்லது இலங்கை அரசுக்கு அழுத் தம் கொடுப்பார்களா?
பதில்: இவர்கள் அத்தரவுகளை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளருக்கு சமர்ப்பிப்பார்கள். அத்துடன், அதனை இலங்கை அரசிற்கும் சமர்ப்பிப்பார்கள். ஆனால், இவர்கள் இந்த விடயங்களை பகிரங்கமாக வெளியிடுவார்களா என்று தற்போது என்னால் கூறமுடியாது.
அது அவர்கள் எடுக்கின்ற தீர்மானத்தினை பொறுத்து அமையும். ஆனால் இவர்கள் இந்தப்பிரச்சினை தொடர்பாக விசாரணை செய்து உண்மையினை கண்டறிவது மிகவும் அத்தியாவசியமானது..
கேள்வி: கடந்த 17 ஆம் திகதி ஜெனீவா தீர்மானம் தொடர்பாக சர்வகட்சி மாநாடு இடம்பெற்றது. அதில் குழப்ப நிலை ஏற்பட்டதாகவும் உள்ளக விசாரணைக்கு ஜே.வி.பி கட்சியினர் மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. உண்மையில் அங்கு நடந்தது என்ன? ஏதேனும் இணக்கப்பாடுகள் ஏற்றப்பட்டனவா?
பதில்: அன்று அங்கு நடந்த கூட்டத்தில் தீர்மானத்தில் எவ்விடயங்களை நடைமுறைப்படுத்தலாம்? எதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற கலந்துரையாடல் இடம்பெற்ற போது நான் எழுந்து ஒரு விடயத்தினை முன்வைத்தேன். அதாவது தீர்மானத்தில் சில விடயங்களை நிறைவேற்றலாம். சில விடயங்களை தவிர்க்கலாம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
ஏனென்றால், இது வேறொருவரால் சொல்லப்பட்ட சிபாரிசு இல்லை. இது இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட தீர்மானம். இது தமிழர்களுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கப்பட்ட வாக்குறுதி.
அதனால் இதனை பாகம் பாகமாக பிரித்து, இதை செய்யலாம், இதனை செய்ய முடியாது என்று கூறுவதில் அர்த்தமில்லை எனக் கூறினேன். நான் கூறிய இக்கூற்றை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முழுமையாக ஆதரித்தார்.
அத்துடன் இதை நடைமுறைப்படுத்து வதா இல்லையா என்ற பேச்சுக்கு இட மில்லை. எப்படி இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறித்தே இனி பேச வேண்டும் எனக்கூறியிருந்தார்.
வேறுபலரும் இதனையே சொன்னார்கள். இதில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களை நடைமுறைப்படுத்தினால் உதாரணமாக வெளிநாட்டு நீதிபதிகளை உட்படுத்தி னால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற் படும் என சிலர் குறிப்பிட்டிருந்தார்கள்.
கேள்வி: இத்தீர்மானத்திற்கு அரசியலமைப்புச்சட்டத்தில் இடமில்லை என்ற ஒரு கருத்து நிலவுகின்றதே?
பதில்: ஜனாதிபதி கூறிய கருத்து அரசியலமைப்புச்சட்டத்திற்குட்பட்டே எந்த வொரு பொறிமுறையும் ஏற்படுத்தப்படும். அரசியலமைப்புச் சட்டத்தினை மீறி எதுவும் நடைமுறைப்படுத்தப்படாது.
அதற்கு ஜே.வி.பி யினர் கூறிய கருத்து இலங்கை அரசியலமைப்புச்சட்டத்திற்குள் வெளிநாட்டு நீதிபதிகளை வரவழைப்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை. எனது கூற்றும் அதுவே.
இலங்கையில் விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகளின் ஒத்துழைப்பினை பெற இலங்கை அரசியலமைப்புச்சட்டத்தில் பூரண சுதந்திரம் உண்டு. அத்துடன், ஜனாதிபதியும் இலங்கை அரசியலமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நாங்கள் இதைச்செய் வோம் என்று கூறுவதில் தவறேதும் இல்லை என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி: தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 180 நாட்களுக்குள் வாய்மொழிமூலம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். தற்பொழுதே 30 நாட்களுக்கு மேல் கடந்து விட்டதே அதைக்குறித்த நிலைப்பாடு என்ன?
பதில்: இவ்வறிக்கையினை சமர்ப்பிக்கவேண்டியது ஐக்கிய நாடுகளின் மனித உரிமையின் உயர்ஸ்தானிகர். இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எவ்வளவு முன்னேறியுள்ளது? என்பது குறித்து அடுத்த வருடம் ஜூன் மாதம் கொடுக்க வேண்டும்.
இதற்கு இசைவாக இலங்கை அரசும் சட்டங்களை உருவாக்குதல் நீதிமன்றங்களை உருவாக்குதல் போன்ற முன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்ய வேண்டும்.
அது மட்டுமல்ல, அத்துடன், அந்த 20 பரிந்துரைகளிலுமே கவனம் செலுத்த வேண்டும். எல்லோரும் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றி குறி்ப்பிடுகின்ற ஒரு பரிந்துரையைப் பற்றியே இவர்கள் கதைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, ஏனைய 19 பரிந்துரையினை பற்றி கவனத்திற் கொள்வதாக தெரியவில்லை.
இதனையே அங்கு ஏனையோரும் சுட்டிக்காட்டினார்கள். அத்துடன் அரசியல் தீர்வு என்பதும் ஒரு முக்கியமான விடயம். அது குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதையும் அங்கு பலர் கோடிட்டுக் காட்டினார்கள்.
இந்த 20 பரிந்துரைகளிலும் அரசு எவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டுள்ளது என்பது பற்றியதாகவே அந்த அறிக்கை அமையும். இன்னும் அவற்றினை நிறைவேற்றுவதற்கு அரசிற்கு போதுமானளவு காலம் உள்ளது. ஆனால், அவற்றினை செய்யுமோ இல்லையோ என்று என்னால் கூற முடியாது.
இந்த ஒவ்வொரு விடயம் சம்பந்தமாக சிபாரிசுகளை பகுதி பகுதியாக பிரித்து கொடுக்கும்படி கேட்கப்பட்டிருக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு சில குழுக்களாக சில நிபுணர்களுடன் சேர்ந்து கொண்டு அதனை செயற்படுத்துவதற்கான அடுத்த செயற்பாடாகவே அடுத்த சர்வகட்சி மாநாடு அமையலாம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
கேள்வி: அவுஸ்திரேலியாவில் என்ன நடந்தது? அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பு உங்களுக்கு விடுக்கப்பட்டிருந்ததா?
பதில்: அவுஸ்திரேலியாவில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சருடன் எனக்கு சந்திப்பொன்று இடம்பெற்றது. அங்கிருந்து எனக்கு ஒரு உத்தியோக பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னரும் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் உம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்பான அவுஸ்திரேலிய கிளையும் இந்த ஜெனீவா தீர்மானத்தின் பின் ஏற்பட்டுள்ள புதிய நிலைப்பாடுகள் பற்றி தமக்கு விளக்கமளிப்பதற்கு அங்கு வரவேண்டும் என எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.
ஜெனீவா தீரமானம் நிறைவேற்றப்பட்ட காலத்திலேயே நான் சுவிஸ், ஒஸ்லோ ,கனடா மற்றும் லண்டன் போன்ற இடங்களில் எம்முடைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களுக்குச் சென்று நிலைமைகள் பற்றி விளக்கமளித்துள்ளேன்.
அக்காலப்பகுதியிலேயே அவுஸ்திரேலிய தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான அவுஸ்திரேலிய கிளையும் எனக்கு அழைப்பு விடுத்தது.
நான் நீண்ட காலம் நாட்டிற்கு வெளியே இருந்ததால், இலங்கைக்கு வந்து சில காரியங்களை முடித்து விட்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பினை மேற்கொண்டுவிட்டு சிட்னி ,கன்பரா ,மெல்பேர்ன் ஆகிய மூன்று இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டங்களுக்குச் சென்றேன்.
கன்பராவில் நடந்த கூட்டம் மிகவும் ஒழுங்காக நடைபெற்றது. முதல் கூட்டம் சிட்னியில் இடம்பெற்றது. கூட்டம் ஆரம்பிக்க முன்னரே அங்கு ஏழு அல்லது எட்டு வாலிபர்கள் ஒன்று சேர்ந்து இங்கே சுமந்திரனை பேச விடமாட்டோம் என கூறியவாறு அங்குள்ள ஒலிபெருக்கிகளை பிடுங்கி வீசி, கதிரைகளை குழப்பி, அடிப்படையிலேயே ஒரு வன்முறைச் செயற்பாட்டில் ஈடுபட்டார்கள்.
பலர் என்னை அங்கு போக வேண்டாம் எனக் கூறினார்கள். ஆனாலும், அங்கு மக்கள் வந்த காரணத்தினால் நான் அங்கு சென்றேன். அங்கு சென்றதும் கூட்டத்தினை தொடங்கவும் என்னை பேசவோ விடாமலும் அங்கு கூக்குரலிட்டு குழப்பிய வண்ணமாக காணப்பட்டதனால் பொலிஸார் அங்கு வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
அதன்பின்னர் 45 நிமிடங்கள் கழிந்தே கூட்டம் ஆரம்பமாகியது. அந்த கூட்டம் ஆரம்பமாக முன்னர் அந்த வாலிபர்களிடம் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் எனக் கூறினேன். அதற்கு அவ்வாலிபர்களோ “உன்னிடம் கேள்வி கேட்டால், நீ பதிலளித்து விடுவாய் என்று உன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என கூறினார்கள்” என்றே கூறினார்கள்.
அக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குழப்பத்தை ஏற்படுத்திய இரு வாலிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு நான பேசிய அனைத்தையும் அமைதியாக கேட்ட பின்னர், என்னிடம் சில கேள்விகளையும் கேட்டார்கள்.
நான் அவர்களுக்கு போதிய காலம் கொடுத்து கேட்கப்பட்ட அனைத்து கேள்விகட்கும் பதிலளித்தேன் கூட்டம் 2 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றன. ஆனால் இலங்கையிலோ கூட்டம் நடைபெற்றதை விட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பமே பெரியளவில் பேசப்பட்டது.
மெல்பேர்ன் நகரில் கத்தோலிக்க திருச்சபையொன்றுக்கு சொந்தமான கட்டடத்திலேயே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு முன்னரே சிலர் அங்கு பெயர்ப்பதாகைகளுடன் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதால், கட்டட உரிமையாளர்கள் அங்கு கூட்டம் நடாத்த வேண்டாம் எனக்கூறியதும் உடனே வேறு இடத்திற்கு கூட்டம் மாற்றப்பட்டு கூட்டம் இடம்பெற்றது.
ஆனால் முன்னர் ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்தில் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றன. அதில் இருவர் காயமடைந்தனர் பின்னர் பொலிஸார் வந்து அதனை தடுத்து நிறுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இங்கு சிலருடைய காடைத்தனமான செயற்பாடுகள் செய்திகளாக வெளிவருவதை விட இங்கு கூட்டம் நடைபெற்றது என்ற செய்தி வந்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி: புலம்பெயர் அமைப்புக்கள் உங்களை மாத்திரமே குறிவைப்பதற்கான காரணம் யாது?
பதில்: இதற்கு இளைஞர்களை தவறாக வழிநடத்திய அரசியல் தலைவர்களும் காரணம் என்றும் சொல்லலாம். ஏனென்றால், இளைஞர்கள் பொறுமையிழந்து சில சிறு சிறு வன்முறை சம்பவங்களில் ஈடுபடும்போது சில அரசியல் தலைவர்கள் அதை கட்டுப்படுத்தாமல் அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.
பின்னர் அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் கை மீறிப்போனதால் இறுதியில் அதற்கு அவர்களே பலியானார்கள். ஆனபடியால், அவ்வாறான சூழ்நிலை இனிமேல் ஏற்படக்கூடாது.
அவ்வாறு தீவிரவாத கருத்துக்களை சொன்னவுடன் மக்கள் கை தட்டுகின்றார்கள் என்று அரசியல் தலைவர்கள் பொறுப்பற்று இனிமேலும் செயற்படக்கூடாது.
வன்முறையை நாங்கள் தொட்டுக்கூட பார்க்கக்கூடாது என்பதை கைதட்டல் கிடைக்காவிட்டாலும் சொல்வதற்கு தயங்கக்கூடாது. ஏனென்றால், வன்முறை வெடிக்கும் சந்தர்ப்பத்தில் கூடுதலாக பாதிக்கப்படுவது நமது மக்களே தவிர, வேறெவரும் இல்லை. ஆனபடியினால், இதனை பொறுப்புடன் அரசியல் தலைவர்கள் வெளியில் சொல்ல வேண்டும்.