ஏற்கனவே கோஷ்டிபூசலுக்கு பஞ்சமில்லாத காங்கிரஸ் கட்சி தற்போது உச்சக்கட்ட கோஷ்டி பூசலில் சித்தி தவிக்கிறது. அந்த கட்சியின் தலைவர் இளங்கோவனுக்கும் மகிளா காங்கிரஸ் தலைவியான விஜயதரணி எம்.எல்.ஏவுக்கும்மிடையே வெடித்த சர்ச்சை தற்போது போலீசில் ஒருவர் மீது ஒருவர் புகாரளிக்கும் வரை சென்றிருக்கிறது.

தங்கபாலு ‘தங்க மகன்’ ஆனது எப்படி?

தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பின்னர், காங்கிரஸ் கட்சியில் உள் கூத்து இன்னும் அதிகமாகியுள்ளது. ஏற்கனவே தங்கபாலு தலைமையில் ஒரு குழு, தேசிய தலைவர் சோனியாவிடம் சென்று இளங்கோவனை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, தங்கபாலு பற்றி கடுமையாக விமர்சித்த இளங்கோவன், புலவரான தங்கபாலுவுக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது ? என்ற கேள்வியை எழுப்பினார்.

இது தொடர்பாக பின்னர் தங்கபாலு பிரஸ் மீட் வைத்து, ‘அனைத்தும் உழைத்து சேர்த்த சொத்து’ என்று விளக்கமளித்தார். இந்த உள்கூத்து முடிவடைந்த நிலையில், இப்போது விஜயதரணி எம்.எல்.ஏவுடன் ஏற்பட்ட சர்ச்சை இளங்கோவன் பதவிக்கு வேட்டு வைத்து விடும் என்றே கூறப்படுகிறது.

விஜயதரணியுடன் மோதல்

கடந்த 19ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில், இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை இளங்கோவன் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதரணி இளங்கேவனை சந்தித்து பேனரை கிழித்தவர்கள் மீத நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்.

அப்போது இருவருக்கிடையே வாக்குவதம் ஏற்பட்டதாகவும் இருவரும் ஒருவரையொருவர் ஒருமையில் திட்டிக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

மேலும் விஜயதரணியை இளங்கோவன் அடிக்க பாய்ந்ததாகவும் போலீசில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக மகிளா காங்கிரஸ் துணைத் தலைவி, சாந்தாஸ்ரீநி, மானசா ஆகியோர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் இளங்கோவன் மீது புகார் அளித்துள்ளனர்.

விஜயதரணி சாதி பெயரை சொல்லி திட்டினாரா?

இந்த புகாரளித்து சில மணி நேரத்துக்குள், மகிளா காங்கிரஸ் இன்னொரு துணைத் தலைவி, ஆலிஸ் மனோகரி, விஜயதரணி மீது போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், கடந்த 27ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் கட்சிப்பணிகளை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த விஜயதரணி, ‘கட்சி பதவி பெற்ற பின் இவ்வளவு நாளாகிறது என்னை வந்து ஏன் பார்க்கவில்லையென்று கூறி நீ உன் சாதி புத்தியை காட்டி விட்டாயே? என்று கடுமையாகத் திட்டினார்.

சாதி பெயரை ஏன் இழுக்குறீர்கள் என்று கேட்டதற்கு, என்னையா எதிர்த்து பேசுகிறாய்? என்று செருப்பால் அடிப்பேன், கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் விஜயதரணி உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை சட்டப்படி வழக்கு பதிய வேண்டுமென்றும் ஆலிஸ் மனோகரி வலியுறுத்தியுள்ளார்.

விஜயதரணி அனுப்பிய இமெயில் குண்டு

இது இப்படியிருக்க இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, விஜயதரணி எம்.எல்.ஏ காங்கிரஸ கட்சியின் தலைவர் சோனியாவுக்கும், துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் இமெயிலில் புகார் கடிதம் அனுப்பியுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது.

கடந்த 19-ந்தேதி பெண்களுக்கு அதிகாரமளித்தல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக, இந்திரா காந்தி படத்துடன் வைக்கப்பட்ட   பேனரை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர்.

பின்னர் அந்த பேனர் ஆண்கள் கழிவறையில் கிடந்தது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கூறினேன். ஆனால் அவரோ என்னை தரக்குறைவாகத் திட்டி கட்சியை விட்டு போகுமாறு கூறினார்.

இத்தோடு இளங்கோவன் என்னை திட்டுவது இது 3-வது முறையாகும். கட்சியில் உள்ள பிற பெண்களையோ பல முறை திட்டியிருக்கிறார்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.பெண்களுக்கு தொல்லை கொடுப்பது அவருக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது. மகிளா காங்கிரஸ் தலைவியாக நான் பொறுப்பேற்ற பின்னர் பெண்களின் பலத்தை அதிகரிக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். நான் கட்சியில் 28 வருடமாக இருக்கிறேன். இதுநாள் வரையிலும் யாரை பற்றியும் புகார் செய்ததில்லை.

இத்தனை வருடங்களில் நான் எந்த கட்சிக்கும் சென்றதில்லை.என்னுடைய பணியை பார்த்து சோனியா காந்தி அங்கீகரித்து, ராகுல்காந்தி என்னை பணி செய்யுமாறு ஊக்குவித்துள்ளார்கள்.

ஆகையால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு என்னை கட்சியில் இருந்து செல்லுமாறு கூறுவதற்கு அதிகாரம் இல்லை. நான் கட்சி கொள்கைகளை விரும்புகிறேன்.

தமிழகத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக விரும்பத்தகாத சூழல் இருக்கிறது .தமிழகத்தில் நடப்பது என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது. ஆகையால் தமிழகத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள சரியான முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே விஜயதரணிக்கு எதிராக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் திரண்டுள்ளதாகவும் அவர்கள் இளங்கோவனுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version