தமிழ் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இனியும் மௌனம் காப்பது அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையில் பாரிய விரிசலை ஏற்படுத்தும். சமாதான சூழலில் தமிழ் கைதிகளை தொடர்ந்தும் சிறைபிடித்து வைத்திருப்பது அர்த்தமற்றது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். புலம்பெயர் அமைப்புகளின் தடைநீக்கம் நாட்டை பாதிக்கலாம். அரசாங்கம் பாதுகாப்பு
விடயத்தில் அக்கறையுடன் செயற்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் மக்கள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் அது தொடர்பிலும் புலம்பெயர் அமைப்புகளின் தடைநீக்கம் நாட்டில் எவ்வாறான மற்றதை ஏற்ப்படுத்தும் எனவும் வினவியபோதே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை நான் முன்னரே தெரிவித்துள்ளேன்.
யுத்தத்தில் புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு எம்மிடம் இருந்தது உண்மையே. நாட்டை காப்பாற்றவும் மூவின மக்களை அமைதியாக வாழவிடவும் அந்த காரியத்தை செய்யவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருந்தது.
ஆனால் இன்று உள்ள சூழலில் நாட்டில் பயங்கரவாதம் ஒன்று உருவாகக்கூடிய சூழ்நிலை இல்லை என்றே நன் நினைகின்றேன்.
யுத்த காலகட்டத்தில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் வடக்கில் பலரை கைது செய்தோம். அதேபோல் புலிகளுடன் தொடர்புடைய ஆயுதமேந்தி போராடிய பல்லாயிரக்கணக்கான நபர்களை கைதுசெய்தோம்.
இதில் உண்மையில் புலிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்களும் இருந்தனர். அதேபோல் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளும் இருந்தனர்.
ஆனால் நேரடியாக புலிகளில் இணைந்து செயற்பட்ட 12ஆயிரம் நபர்கள் மஹிந்த அரசாங்கத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் சாதாராண சமூகவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
அவ்வாறு இருக்கையில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகளை இத்தனைகாலம் தடுத்து வைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதேபோல் அவர்களை விடுவிப்பதால் நாட்டில் எந்தவித குழப்பங்களும் ஏற்படப்போவதும் இல்லை.
மேலும் இந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நல்ல நம்பிக்கையை வைத்துள்ளனர். முன்னைய அரசாங்கத்தின் மீது இருந்த வெறுப்போ, சந்தேகமோ இந்த ஆட்சியாளர்கள் மீது இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
அவ்வாறு இருக்கையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையில் விரிசல்கள் ஏற்படும்.
மேலும் புலம்பெயர் அமைப்புகளை இலங்கையில் அனுமதிக்காது அவர்கள் மீதான தடைகளை வித்தித்திருந்தமை நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவே என்பது உண்மைதான்.
சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் பயங்கரவாத அமைப்புகளும் இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும் இப்போது புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளது. இது நாட்டை எந்தளவுக்கு பாதுகாக்கும் என்பது சந்தேகமே.
எனவே அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தில் கூடிய கவனம் எடுத்து தேசிய பாதுகாப்பு சீரழியாத முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
கைதிகளை உடன் விடுவிக்காவிடின் தமிழர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது: ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா கூறுகின்றார்
அப்பாவி தமிழ் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் போது எதிர்ப்புக் குரல் எழுப்பும் தேசிய பற்றாளர்கள் அன்று மஹிந்த புலிகளின் தலைவர்களை அரவணைத்தபோது ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
புலிகளின் தலைவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு கொடுத்தபோது வாய்மூடி இருந்தவர்கள் அப்பாவி தமிழ் கைதிகளின் விடுதலையின்போது சீறிப்பாய்கின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்காவிடின் தமிழர்களின் ஒத்துழைப்பு முழுமையாக எம்மைவிட்டு போய்விடும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தற்போது எழுந்துள்ள சிக்கல் நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை
வினவியபோதே அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற மோசமான செயற்பாடுகள், பிரிவினைக்கான அடித்தளம் என்பன மஹிந்த தரப்பினரால் போடப்பட்டவையாகும்.
அதேபோல் யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் நாட்டில் நடந்த அனைத்து மோசடிகளின் பின்னணியிலும் மஹிந்த தரப்பினர் செயற்பட்டனர்.
அவ்வாறு இருக்கையில் வடக்கில் புலிகளை சாட்டி நாட்டில் பாரிய இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது உண்மையே. அதை சிங்கள அரசியல் தலைமைகள் மேற்கொண்டது என்பதை வெளிப்படையாக கூறவேண்டும்.
அதேபோல் மிகமுக்கியமாக விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதமேந்தி போராடிய காலகட்டத்திலும் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் மஹிந்த குழுவினர் தொடர்புகளை வைத்திருந்தனர்.
அதற்கான ஆதாரங்களை அண்மையில் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களே வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேபோல் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் புலிகளின் முக்கிய நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் பணத்தையும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் உதவிகளையும் பெற்றுக்கொண்டு ஆட்சி நடத்தியதும் மஹிந்த அணியினர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.
இன்றும் புலிகளின் முக்கிய குற்றவாளிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரகளாக செயற்படுகின்றனர். இவர்கள்தான் ஆயுத கடத்தல், கொலை, நாட்டை பிரிக்கும் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தனர்.
ஆனால் அவர்களுக்கு இராணுவ பாதுகாப்பும், அரச மரியாதையும் கொடுக்கின்றனர். அது தொடர்பில் எவரும் விமர்சிக்கவில்லை. ஆனால் ஆதராம் இல்லாது சந்தேகத்தின் பெயரில் கைது செய்து தடுத்துவைத்துள்ள அப்பாவி தமிழ் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தினால் அதை எதிர்த்து வாதிடுகின்றனர்.
இன்று அப்பாவி தமிழ் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் போது எதிர்ப்புக் குரல் எழுப்பும் நாட்டுப்பற்று வாதிகள் அன்று மஹிந்த புலிகளின் தலைவர்களை அரவணைத்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அன்று புலிகளின் முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை. இவர்களின் செயற்பாடுகள் நாட்டை பாதுகாப்பதை விடவும் நாட்டில் இனவாதத்தை தோற்றுவிப்பதாகத்தான் உள்ளது.
ஆகவே இப்போது நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டிருக்கும் நல்லதொரு தருணம். அரசாங்கமே அதை பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளது.
இப்போதாவது அநாவசியமாக தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை இப்போதாவது பூர்த்திசெய்ய வேண்டும்.
இப்போது தவறவிட்டால் தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் நாட்டை கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பும் இல்லாமல் போய்விடும் என அவர் தெரிவித்தார்.