விடிய விடிய பெய்து வரும், வரலாறு காணாத மழையால், சென்னை நகரமே மிதக்கிறது. நகரின் எல்லா பக்கங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மற்ற பகுதிகளில் இருந்து, சென்னை துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல், விடாமல் மழை பெய்கிறது. தொடர் மழை காரணமாகவும், நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், சென்னை சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஒட்டுமொத்த நகரமும், தண்ணீரில் தத்தளிப்பதால், தலைநகர மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

தெருக்களும், பிரதான சாலைகளும், வெள்ளத்தில் சிக்கியதால், மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அலுவலகங்களுக்கு செல்ல, வாகனங்களில் வந்தவர்களும், சாலை வெள்ளத்தில் சிக்கி, மீள முடியாமல் தவித்தனர். ஆங்காங்கே ஓடிய, மாநகர பஸ்களும், மாலைக்கு பின் ஒதுங்கிக் கொண்டன.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பல, உடனடி விடுமுறை அளித்து, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.அவர்கள் வீடு திரும்ப, அரசு பஸ்களை விட்டால், வேறு போக்குவரத்து இல்லாத நிலைமை காணப்பட்டது.

நிலைமையின் தீவிரத்தை அறிந்த, தனியார் கால் டாக்சி நிறுவனங்கள், வண்டிகளை ஓரங்கட்டி விட்டன. அதிக கட்டணத்திற்கு ஆசைப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே ஓடின.

அவையும் தண்ணீரில் மாட்டி, தள்ள வேண்டிய நிலைக்கு உள்ளாகின.இதற்கிடையில், சென்னையையும், மாநிலத்தின் மற்ற பகுதிகளையும், இணைக்கும் முக்கிய சாலைகள் அனைத்தும், மழையால் துண்டிக்கப்பட்டன.

சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை; சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை; சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை; சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை; கிழக்கு கடற்கரை சாலை; சென்னை பைபாஸ் சாலை போன்ற முக்கிய சாலைகள் அனைத்திலும், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில் அடுத்துள்ள வல்லஞ்சேரி பகுதியில், 3 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால், தென்

மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன  .கிழக்கு கடற்கரை சாலையில், கேளம்பாக்கம், கடம்பாடி, புதுப்பட்டினம், முட்டுக்காடு பகுதியில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.



மாதவரம் ரவுண்டானா அருகே, சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, சென்னை பைபாஸ் சாலை இணையும் இடத்தில், வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான, பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும், வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், வெளிமாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும், கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் வந்த பஸ்கள், தண்ணீரில் தத்தளித்தன.தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்கள் தத்தளித்த நிலையிலும், சுங்கச்சாவடிகளில் வழக்கம் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டன.

திருவள்ளூரில் இருந்து மணவாளநகர், ஸ்ரீபெரும்புதுார் சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வழியே வரும் வாகனங்கள், வெள்ளவேடு, திருமழிசை வழியாக, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சென்று, அங்கிருந்து, ஸ்ரீபெரும்புதுார் புறவழிச்சாலை, வாலாஜாபாத் வழியாக செங்கல்பட்டுக்கும், சுங்குவார்சத்திரம் வழியாக, காஞ்சிபுரம், வேலுார், பெங்களூருக்கும் சென்றன.

திருவள்ளூரில் இருந்து திருத்தணி, திருப்பதி, திருவாலங்காடு செல்லும் சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், திண்டிவனம், வந்தவாசி, காஞ்சிபுரம் வழியாக, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து, சென்னை வந்தன. அதே போல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் அதே பாதையில் இயக்கப்பட்டன.

ஆறுகளில் வெள்ளம்:

ஆந்திர மாநில அணைகளில் இருந்து, உபரி நீரை வெளியேற்றுவதால், திருவள்ளூர் மாவட்டம், ஆரணி மற்றும் கொற்றலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முடங்கியது சென்னை:

சென்னையில் கொட்டிய மழையால், சாலைகளில்வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து அடியோடு முடங்கியது. பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதுார் – காஞ்சிபுரம் – பெங்களூரு சாலையில் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

துண்டிக்கப்பட்ட சாலைகள்:

வண்டலுார் – செங்கல்பட்டு – விழுப்புரம்
வண்டலுார் – சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் – ஸ்ரீபெரும்புதுார்
வண்டலுார் – படப்பை – வாலாஜாபாத் சாலை
மணிமங்கலம் – ஸ்ரீபெரும்புதுார் சாலை
வண்டலுார் – பழைய மாமல்லபுர சாலை
கேளம்பாக்கம் – திருப்போரூர் சாலை

பீதியில் சென்னை மக்கள்:

சென்னை நகரில் தொடர் மழை காரணமாக, பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.கொட்டும் மழையில், தேங்கிய தண்ணீருக்கு நடுவில், கும்மிருட்டில் சென்னை மக்கள் அச்சத்துடன் இரவை கழித்தனர்.

கரையோரம் போகாதீங்க!

சென்னை மாவட்டத்தில், அடையாறு, கூவம் ஆறுகள்; ஓட்டேரி நல்லா, பக்கிங்ஹாம், கேப்டன் காட்டன் கால்வாய்களில், கனமழை காரணமாக தண்ணீர் அதிகம் செல்கிறது. ஆகவே, பொதுமக்கள், குழந்தைகள் யாரும் கரையோரம் செல்ல வேண்டாம் என, சென்னை கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புழல் உபரிநீர் திறப்பு கரையோர மக்கள் தவிப்பு: சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் உபரி நீர், சாமியார் மடம், தண்டல் கழனி, வடகரை, கிராண்ட்லைன், வடபெரும்பாக்கம், செட்டிமேடு, கொசப்பூர், வைக்காடு, சடையங்குப்பம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.

நேற்று காலை வரை, புழல் ஏரியில் இருந்து, வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர் வரத்து திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால், கரைகளில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து, உபரி நீர் திறப்பு, 5,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால், மணல் மூட்டைகள் சரிந்து, கரை உடைந்தது.

கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.சாமியார் மடம், வடகரை, கிராண்ட்லைன் பகுதி மக்கள், வெள்ளத்தில் சிக்கி, கரையேற முடியாமல் தத்தளித்தனர்.

gallerye_010110460_1400542

Share.
Leave A Reply

Exit mobile version