சுவீடனைச் சேர்ந்த யுவதியொருவர், கார்ட்டூன் பாத்திரங்களைப் போன்ற உடற்தோற்றத்தைப் பெறுவதற்காக சுமார் 3 கோடி ரூபாவை சத்திர சிகிச்சைகளுக்கு செலவிட்டுள்ளதுடன் தனது 6 விலா எலும்புகளையும் அகற்றிக்கொண்டுள்ளார்.
25 வயதான பிக்ஸீ பொக்ஸ் எனும் இந்த யுவதி எலக்ரிஷியனாக தொழில்புரிந்தவர்.
ஆனால், தனது உடலை கார்ட்டூன் பாத்திரங்களைப் போன்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே பிக்ஸீ பொக்ஸின் இலட்சியமாக இருந்தது.
எனினும், அவரின் மனதுக்கு அந்த அழகு போதுமானதாக இருக்கவில்லை.
ஜெஸிக்கா ரெபிட், அரோரா, ஹோலி போன்ற கார்ட்டூன் பாத்திரங்கள் பிக்ஸீக்கு மிகப் பிடித்தமானவை.
அப்பாத்திரங்களைப் போன்று ஒடுங்கிய இடை, பெரிய மார்பகங்களுடன் தானும் தோன்ற வேண்டும் என அவர் விரும்பினார்.
இயற்கையாக இத்தகைய உடற்தோற்றம் அமைவது அரிது என்பதால் சத்திரசிகிச்சைகளை செய்துகொள்ள அவர் தீர்மானித்தார்.
இதற்காக ஆரம்பத்தில் சுமார் 1.6 கோடி ரூபாவை அவர் செலவிட்டு சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டார்.
அதன் பின்னரும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அதனால் தனது விலாவின் கீழ்புறத்தில் 6 எலும்புகளை சத்திரசிகிச்சைகள் மூலம் அகற்றும் அதிரடி நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு அவர் துணிந்தார்.
தற்போது மிக மெல்லிய இடையுடன் பார்பீ பொம்மை போன்ற தோற்றத்தில் பிக்ஸீ பொக்ஸ் காணப்படுகிறார்.
இது தொடர்பாக பிக்ஸீ பொக்ஸ் கூறுகையில், “அந்த கார்ட்டூன் பாத்திரங்களையே உடற்தோற்றத்துக்கான முன்மாதிரியாக நான் கருதினேன். அத்தகைய உடலைப் பெறுவது எனது இலக்காக இருந்தது.
மனிதர்கள் பல்வேறு வகையானவர்கள். உதாரணமாக, பாலின மாற்றம் செய்துகொண்டவர்கள் தமது உடலின் வெளித்தோற்றமானது தம்மை பிரதிபலிப்பதாக கருதுவதில்லை.
ஆனால், என்னைப் பொறுத்தவரை உடலின் வெளித்தோற்றமே எனக்கு முக்கியம்.
ஒடுங்கிய இடை, பெரிய மார்பகங்கள், பெரிய பின்புறம், பெரிய கண்கள், அழகான முகம் ஆகியவற்றைப் பெற வேண்டும் என நான் விரும்பினேன்.
இந்த இலக்கை அடைவதற்காக விலா எலும்புகளை அகற்றிக்கொள்ளவும் நான் முன்வந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.