ஸ்விட்ஸர்லாந்தில் குதிரைகளை மனிதர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உத்தியோகபூர்வ அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்விட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், “டையர் இம் ரெச்ட்” எனும் விலங்கு உரிமைகள் குழுவின் அங்கத்தவர்கள் இது தொடர்பாக கூறுகையில், அந்நாட்டில் சுமார் 10,000 பேர் மிருகங்களுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர் என அஞ்சப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்தில் மாத்திரம் குதிரைகள் மீது பாலியல் ரீதியான 105 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது முன்னெப்போதையும்விட மிக அதிக எண்ணிக்கையாகும்.
இவற்றில் 10 சதவீதமான சம்பவங்கள் குதிரைகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டமை தொடர்பான சம்பவங்கள் எனவும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இக்குழுவின் சட்ட நிபுணரான அன்ட்ரெஸ் ருட்டின்மன் இது தொடர்பாக கூறுகையில், இந்த எண்ணிக்கை அதிர்ச்சிகரமானதாக இருந்தபோதிலும் முறைப்பாடு செய்யப்படாத இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கையே அதிக பிரச்சினைக்குரியதாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
ஸ்விட்ஸர்லாந்தில் அதிக எண்ணிக்கையான பண்ணைகள் இருப்பதும் அதிகமான குதிரையோட்ட செயற்பாடுகள் இருப்பதும் இத்தகைய பாலியல் தாக்குதல்களுக்கு ஒரு காரணமாக இருப்பதாக கருதப்படுகறது.
ஸ்விட்ஸர்லாந்தில் 18,000 பண்ணைகளில் சுமார் 110,000 குதிரைகள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்நாட்டில் 2013 ஆம் ஆண்டில் பதிவாகிய மிருகங்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை 1,542 ஆகும். கடந்த வருடம் இது 1,709 ஆக அதிகரித்துள்ளது.