எனது கட்சியான தமிழர் விடுதலை கூட்டணியியை சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்து நடத்த தயாரானால் உடனே வரவும். இந்த நிமிடமே கட்சித் திறப்பை உங்கள் கையில் தந்துவிட்டு நான் நடையை கட்டுகிறேன் என்கிறார் ஆனந்த சங்கரியார்.
இதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் தனது கட்சியை முதலமைச்சர் விக்கினேஸவரனிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறார். அதுவும் விற்பனைக்கு உள்ளது.
அதுமட்டுமல்ல, தமிழரசுக்கட்சியை சேர்ந்த சம்பந்தன், சுமந்திரன், மாவையார் தவிர்ந்த ஏனையோர் தமிழ்தேசிய கூட்டமைப்பையும் விக்கினேஸ்வரன் கையில் ஒப்படைக்க தயாராவுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பக்கம் பலமான காற்று வீசுகிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
இந்த சந்தர்ப்பத்தை சரியாக விக்கினேஸ்வரன் ஐயா பயன்படுத்துவாரானால், எல்லா தமிழ் அரசியல் கட்சியினரையும் உங்கள் தலைமையில் கீழ் ஒன்று சேர்க்கலாம்.
ஆனந்தசங்கரியார் விடுத்துள்ள அறிக்கை..
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் படித்த பண்புள்ள நம்பிக்கையானவர். அவர் ஏற்பாரேயானால் எமது கட்சியை இந்த நிமிடமே அவரிடம் ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;- என்னுடன் செயற்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். புனிதமான இந்த கட்சியை எதிர்காலத்தில் வீதியில் விட்டுச் செல்ல முடியாது. மாசுபடாத இயக்கமாக எமது கட்சி திகழ்கின்றது. இந்த நிலையில் அனைவரும் எமது கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சமூகத்தில் முக்கியஸ்தராக உள்ளார். அவர் நல்லவர். நம்பிக்கைக்குரியவர். படித்தவர் இதனால் கட்சியை ஏற்பதற்கு அவர் தயாரானால் இந்த நிமிடமே அதனை ஒப்படைப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
நல்லதொரு மனிதரை முதலமைச்சராக்கிவிட்டு அதனைப் பறிப்பதற்கு முயற்சிக்கின்றனர். அத்தகைய செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.
விக்கினேஸ்வரன் சம்மதித்தால் அவரை கட்சியின் தலைவராக நாளைக்கே நியமிப்பேன். அவர் பிரேரிக்கும் மற்றொருவரை செயலாளராக நியமிக்கவும் நான் தயாராக உள்ளேன்.
இதற்கு மேல் என்னால் எதனை செய்ய முடியும். நான் எனது கட்சியை கற்புத்தவறாத கட்சியாகவே வைத்துள்ளேன். சம்பந்தனுடனோ, மாவையுடனோ நான் இணைவதற்கு தயாராக உள்ளேன்.
2004 ஆம் ஆண்டு இரண்டு வருடத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கலைத்தார். இதனால் நான்கு வருட பிரதமர் பதவியை ரணில் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வாறு நடந்தும் ஒரு இலட்சியத்திற்காக அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இதேபோல் நானும் ஒன்றிணைவதற்கு தயாராகவே உள்ளேன். ஒற்றுமை ஏற்படவேண்டும் என்பதே எனது அவாவாகும் என்றார்.
அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வடக்கு முதல்வர் அவசர அழைப்பு. சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் விக்கி பதில்
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன.
இன்று கூட இப்பேர்ப்பட்ட மக்கள் உதவி கோரி என்னிடம் வந்தார்கள். இன்று மக்கள் சந்திப்பு நாள். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து எம் மக்களை வலுவூட்டுவதற்குப் பாடுபட வேண்டிய தருணம் இது.
இதைவிடுத்து, உட்கட்சி மோதல்கள், கருத்து முரண்பாடுகளினால் எமது செயற்பாடுகள் வேறு வழிகளில் திசை திருப்பப்படுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். நான் இது பற்றிக் கவனமாகவே இருக்கின்றேன்.
அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலைபோகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல் எமது மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்று விரும்புகின்றேன். இதுவே மக்களின் விருப்பமுமாகும்.
எனது சட்டக்கல்லூரி சமகால நண்பர் ஆனந்தசங்கரி அவர்கள் எனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்தி உள்ள கருத்துக்களுக்கும் அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றிகள். இதை மட்டுமே என்னால் தற்போது கூற முடியும்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
போலித்தனம் காட்டாத, ஒரு நேர்மையான, விலைபோகாத அரசியில்வாதியான ஆனந்தசங்கரி ஐயா அவர்கள் வழங்கிய செய்தியை கேளுங்கள்!!