இறம்பொடை இந்து கல்லூரியில் கல்விப் பயிலும் மூன்று மாணவிகள் விஷமருந்திய சம்பவமொன்று இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இறம்பொடை கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு விசமருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2ஆம் திகதி இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ மாணவிகளை அறிவுறுத்தும் கூட்டமொன்று பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது தவணைப்பரீட்சையில் குறைவானப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குப் பரீட்சையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இன்னும் இருக்கின்ற ஒரு சில நாட்களை நன்றாகப் பயன்படுத்தி கூடுமானவரை படிப்பில் ஆர்வம் செலுத்துமாறும் அறிவுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த நாள்  பாடசாலைக்கு வருகின்ற போது அனைத்து மாணவர்களும் தமது பெற்றோர்களுடன் வருகைத் தந்து பரீட்சைக்குத் தோற்றும் அனுமதி பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும், அனைவரும் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கான ஏற்பாடுகளுடன் வருகைத் தருமாறு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே பாடசாலைக்கு வருகின்ற வழியில் கெமிலிதென்ன தோட்டத்தில் மூன்று மாணவிகள் விஷம் அருந்திய சம்பவம்  இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பாடசாலைக்குப் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர்.

விசமருந்திய மாணவிகளை உடனடியாகப் பெற்றோர் அங்குள்ள அயலவர்களின் உதவியுடன் கொத்மலை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்கள் தொடர்ந்தும் இவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவை ஏற்படும் பட்சத்தில் இவர்களை கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

Share.
Leave A Reply

Exit mobile version