உடலில் ஏதேனும் மிகச்சிறிய குறைபாடுகள் இருந்தால்கூட அதற்காக கவலையடைபவர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர்.
தலைமயிர் கொட்டுகிறது. வழுக்கை விழுகிறது, உடல் பருமனாக உள்ளது, மிக மெலிவாக உள் ளது, உயரமாக இல்லை. நல்ல நிறமாக இல்லை, வசீகரமான தோற்றம் இல்லை என்றெல்லாம் கவலைப்படுபவர்களைப் பார்த்திருப்போம்.
ஆனால், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இரு கைகளும் இல்லை. கால்களும் இல்லை. ஆனால், இப்போது அதற்காக அவர் கவலையடையவும் இல்லை. பூரண ஆரோக்கியம் கொண்ட மனிதர்கள் பலர் செய்யத் துணியாத சாகசங்களிலும் அவர் ஈடுபடுகிறார்.
உலகில் மிக அதிக தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களில் ஒருவராக அவர் விளங்குகிறார். மற்றவர்களுக்கு உந்துசக்தியாக திகழும் அவரின் உரைகளை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர்.
அந்த இளைஞர் தான் நிக் வுய்சிக். (Nick Vujicic) சேர்பிய வம்சாவளியைச் சேர்ந்த நிக் வுய்சிக், 1982 ஆம் ஆண்டு டிசெம்பர் 4 ஆம் மெல்பேர்ன் நகரில் பிறந்தவர். இன்று அவரின் 33 ஆவது பிறந்த தினம்.
நிக் வுய்சிக் பிறக்கும்போது இரு கைளும் இருக்கவில்லை. கால்களும் இருக்கவில்லை. இடது கால் மிகச்சிறிய அளவில் துருத்திக்கொண்டிருந்தது. போகோமேலியா எனும் அரிய குறைபாடு காரணமாக அவர் கை, கால்கள் இல்லாமல் பிறந்தார்.
1982ஆ-ம் ஆண்டு டிசம்பர் 4ஆ-ம் திகதி, மெல்பேர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்தபோது அக்குழந்தையை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர்.
மயக்கம் தெளிந்து தனது நிக் வுய்சிக்கை பார்த்த அத் தாய் கண்ணீர்விட்டு அழுதார். இத்தனைக்கும் அத்தாயான துஸிகாவும் ஒரு தாதி. எனினும், துஸிகாவும் அவரின் தந்தை போரிஸும் அக்குழந்தையை வளர்க்கத் தீர்மானித்தார்.
கைகள், கால்கள் இல்லாதது தவிர, நிக்குக்கு வேறு எந்த உறுப்புகளிலும் பிரச்சினை இல்லை. துருத்திக்கொண்டிருந்த சிறிய இடதுகாலில் சேர்ந்திருந்த இரண்டு விரல்களை மருத்துவர்கள் பிரித்துவிட்டனர்.
தான் வித்தியாசமாக பிறந்த நபர் என்பதை உணராத நிக் வுய்சிக் இளமையிலேயே மகிழ்ச்சியாக காணப்பட்டார். மூன்று வயதிலேயே அவருக்கு ஸ்கேட்டிங் போர்டில் படுக்கவைத்து நகரப் பழக்கினர் பெற்றோர். தானியங்கி சக்கர நாற்காலி ஒன்றைத் தானாக இயக்கவும் அவர் கற்றுக் கொண்டார்.
ஆனால், அவர் வளர வளர, தனது தம்பி. தங்கை மற்றவர்கள் போல் ஏன் தனக்கு கை, கால்கள் இல்லை என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. பெற்றோரிடம் இது குறித்து கேட்டபோது அவர் கள், ‘கடவுளிடம் கேள்’ என்றனர்.
அவுஸ்திரேலியாவில் அக்காலத்தில் உடல், மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகள், இயல்பான குழந்தைகள் படிக்கும் பாடசாலையில் படிக்க, சட்ட அனுமதி இருக்கவில்லை.
ஆகவே, நிக்குக்கும் ‘சிறப்புப் பள்ளி’யில்தான் இடம் கிடைத்தது. துஸிகாவுக்கு மனம் உறுத்தியது. உட லில் சில பாகங்கள் குறைவாக இருக்கிறதே தவிர, நிக் மற்ற குழந்தைகளைப்போல இயல்பானவனே. அவன் ஏன் இங்கே படிக்க வேண்டும்? போராடிப் பார்த்தார். சட் டம் இடம் கொடுக்கவில்லை. எனவே நிக் குடும்பத்தினர், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தனர்.
அங்கே நிக் இயல்பான பாட சாலையில் படிக்க லாம், மருத்துவ வசதிகள் அதிகம், நெருங்கிய உறவினர்களும் இருக்கிறார்கள் என பல காரணங்கள். ஆனால், அமெரிக்கப் பாடசாலை சூழலில் நிக்கினால் ஐக்கியமாக முடியவில்லை.
ஒவ்வொரு பாடத்துக்கும் வேறு வேறு அறைகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயம். இன்னும் பல பிரச்னைகள். இதனால் பெற்றோர் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கே திரும்பிச் சென்று பிரிஸ்பேன் நகரில் வசிக்க ஆரம்பித்தனர்.
1989- ஆம் ஆண்டு உடல் குறைபாடு உள்ளவர்களும், இயல்பான குழந்தைகளுக்கான பாடசாலையில் படிக்க லாம் என அவுஸ்திரேலியாவில் சட்டத் திருத்தம் நிறைவேற, அதன்படி அனைவருக்குமான பள்ளியில் நிக் முதல் மாணவனாக அனுமதி பெற்றார். சக்கரநாற்காலியில் நிக் பள்ளிக்குச் செல்லும் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவர, நிக் பிரபலமானார்.
1990 ஆம் ஆண்டில் அவுஸ்தி ரேலியாவின் இளம் பிரஜைக்கான விருதை அவர் வென் றார். அப்போது நன்கொடைகள் குவிய, அவை நிக்கின் மருத்துவச் செலவுகளுக்கு உதவின. செயற்கைக் கைகள் பொருத்திப் பார்த்தார்கள். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நான், நானாகவே இருந்துகொள்கிறேன்’ என்றார் நிக்.
சமூகம் வித்தியாசமாக பார்த்தபோதிலும், தற்கொலை எண்ணங்களை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு உற்சாக வாழ ஆரம்பித்தார் நிக். குடும்பத்தினர் அவரை இயல்பான ஒருவராக நடத்த ஆரம்பித்தனர்.
பாடசாலையில் தன்னுடன் வம்பிழுத்த ஒரு மாணவன் மீது அதிவேகமாக பாய்ந்து தலையால் மோதி தான் யாருக் கும் சளைத்தவன் அல்ல என்பதை நிக் வெளிப்படுத்தினார்.
‘தான் சுதந்திரமாக இயங்க வேண்டும் என விரும்பிய நிக்., பல் துலக்குவது, குளிப்பது, கழிவறையை உபயோகிப்பது, உடை அணிவது, முட்டையை உடைத்து ஆம்லெட் போடுவது, இரண்டு விரல்களால் ரிமோட்டை இயக்குவது, கீபோர்டில் டைப் அடிப்பது, குட்டிக் காலை துடுப்பெனச் சுழற்றி நீச்சலடிப்பது என, தினம் தினம் புதிய விஷயங்களை கற்க ஆரம்பித்தார்.
படப்பிடிப்பிலும் அவர் படு கெட்டி. அவுஸ்திரேலியா வின் கிரிபித் பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் இளமாணி பட்டம் பெற்ற நிக் வுய்சிக், கணக்கியல் மற்றும் நிதி திட்டமிடல் துறையில் இரு முதுமாணிப் பட்டங்களைப் பெற்றார். அதேவேளை தனது 17 வயது முதல் மற்றவர்களுக்கு உந்துதல் அளிக்கும் உரைகளை நிகழ்த்த ஆரம்பித்திருந்தார் நிக். மேசை மேல் இருந்தவாறு உரை நிகழ்த்தினார் அவர்.
அதிக மத ஈடுபாடு கொண்ட நிக் வுய்சிக்கை கிறிஸ்தவ மத பிரசாரங்களை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.
லைவ் வித்தவுட் லிம்ப், லவ் வித்தவுட் லிமிட்ஸ் என பல நூல்களை அவர் எழுதினார். லைவ் வித்தவுட் லிம்ப் எனும் பெயரில் தொண்டர் நிறுவனமொன்றையும் அவர் ஸ்தாபித்தார்.
தன்னம்பிக்கை நிறைந்த அவரின் உரைகளை கேட்பதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். தனது கஷ்டங்களிலிருந்து மீண்ட கதையை நகைச்சுவை கலந்து அவர் விபரித்தார். தற்போது 5 கண்டங்களில் சுமார் 57 நாடுகளில் அவர் உரைநிகழ்த்தியுள்ளார்.
கை, கால்கள் இல்லாவிட்டாலும் சேர்ஃபிங், கால்பந்தாட்டம், ஹொக்கி, நீச்சல், சுழியோட்டம் என பல்வேறு விளையாட்டுகளில் நிக் வுய்சிக் ஈடுபடுகிறார்.
சுறா தாக்குதலினால் கைகளை இழந்த அமெரிக்க கடல்சறுக்கல் வீராங்கனை ஹமில்டனும் நிக்கிற்கு கடல் அலைகளின் மீது நீர்ச்சறுக்கலில் ஈடுபடுவதற்கு கற்றுக்கொடுத்தார். தரையிலும், கடலிலும் மட்டுமல்ல, வானிலும் சாகசங்களில் ஈடுபட துணிந்தவர் நிக்.வானிலிருந்து குதிக்கும் ஸ்கை டைவிங்கிலும் அவர் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எல்லா இலட்சியங்களையும் நிறைவேற்ற முடிந்தாலும் தனக்கு ஒருபோதும் திருமணம் நடக்காது என நிக் வுய்சிக் எண்ணியிருந்தார். தன்னை காதலிக்கவோ திருமணம் செய்யவோ ஒரு பெண்ணும் முன்வர மாட்டாள் என அவர் கருதினார்.
ஆனால், அவருக்கு அழகான அன்பான மனைவியுடன் ஆரோக்கியமான இரு குழந்தைகளும் உள்ளனர். அவரின் மகன் கியோஸி ஜேம்ஸ் 2013 இல் பிறந்தான். இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் டேஜான் லெவி எனும் மகளும் பிறந்தாள்.
தனது மனைவி, குழந்தையுடன் கடற்கரைகளுக்குச் செல்வது, நீந்துவது, தனது மனைவியை புகைப்படம் பிடிப்பது என இயல்பான மனிதர்களைப் போலவே அவர் சகல நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்.
நிக் வுய்சிக்கின் மனைவியின் பெயர் கெனே மியாஹரா. ஜப்பானிய தாய்க்கும் மெக்ஸிகோ தந்தைக்கும் மகளாக பிறந்தவர் கெனே மியாஹரா.
2010 ஆம ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத் தில் கெனே மியாஹராவும் நிக் வுய்சிக்கும் முதன்முதலில் சந்தித்தனர். 2012 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது.
திருமணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து, தனது காதலிக்கு எப்படி நிச்சயதார்த்த மோதிரத்தை அணி விப்பதில் நிக்கிற்கு சிரமம் இருக்கவில்லை. தனக்கே உரிய பாணியில் அதற்கும் வித்தியாசமான வழிதேடி கொண்டார் நிக்.
“பேபி, நான் உன்னை காதலிக்கிறேன். உனது கைகளை முத்தமிட விரும்புகிறேன். எனக் கூறி முத்தமிடும்போது, எனது வாயில் வைத்திருந்த மோதிரத்தை அவருக்கு அணிவித்தேன்.
கெனே முதலில் நான் அவரின் விரலை கடிப்பதாகவே எண்ணினார். பின்னர்தான் அவருக்கு அது மோதிரம் என் பது புரிந்தது. நான் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தபோது கெனே மியாஹரா ஆனந்த கண்ணீர் வடித்தார்” என்கிறார் நிக் வுய்சிக்.
தன்னம்பிக்கையின் உச்சமாக திக ழும் நிக் வுய்சிக் கிற்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக் கள்.