இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், சென்னையில், மேலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை சற்று குறைந்தாலும், தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்புப் படை வீரர்கள் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வடகிழக்கு பருவ மழை, இடைவிடாது கொட்டித் தீர்த்தது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டதால், நிலைமை மிக மோசமானது.

சென்னையில், பெரும்பாலான பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம், முடிச்சூர், வண்டலுார், தாம்பரம், அண்ணா நகர், கிண்டி, சைதாபேட்டை, தி.நகர் என, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

முதல் மாடி வரை தண்ணீர் புகுந்து விட்டதால், அடுக்குமாடி வீடுகளில் வசிப்போரும், மொட்டை மாடிகளில், உதவிக்கு யாராவது வர மாட்டார்களா என, தவம் கிடக்கின்றனர்.

ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளதால், மணலி, திருவொற்றியூர், ஆவடி, திரு.வி.க. நகர், மாதவரம் என, வெள்ளம் புகுந்த பகுதிகளின் எண்ணிக்கை, நீண்டபடி உள்ளது. எழும்பூர் புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் கூட தப்பவில்லை. சென்னையில், 90 சதவீத சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது.

cuddalur dec 3

இதனால், மக்கள் இடம் பெயர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவல் படை, மாநில மீட்புப்படை, ராணுவம், கடற்படை என, மீட்புப் படைகள் குவிந்தாலும், நேற்று முன்தினம், மழை விடாததால், மீட்புப் பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை.

50 லட்சம் பேர் பாதிப்பு:

சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, 12 லட்சம் வீடுகளில், 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னையில், 25 லட்சம் பேரும், அதைச் சார்ந்த புறநகர் பகுதிகளில், 25 லட்சம் பேர் என, 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதில், 10 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து, மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

நேற்று மழை ஓரளவு விட்டதும், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், வெள்ளம் வெளியேற எந்த வழியும் இல்லாததால்,

பணிகளை துரித கதியில் செய்ய முடியாமல், மீட்புப் படையினரும் தவித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையில், 30 குழுவினர், ஐந்து இன்ஜினியர்கள் கொண்ட குழு, தாம்பரம், முடிச்சூர், கொரட்டூர், பல்லாவரம், திருநீர்மலை, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், தி.நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று, 5,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னை விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. ரயில், பஸ் போக்குவரத்தும் முடங்கி விட்டது. மின் இணைப்பு துண்டிப்பால், மொபைல் போன் டவர்களும் செயல் இழந்ததால், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இது, மீட்பு பணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

இயல்பு நிலை எப்போது? :

தற்போது மழை விட்டுள்ள நிலையில், ஏரிகளில் நீர் திறப்பு குறைந்துள்ளது. மழை பெய்யாவிடில், மீட்புப்பணிகள் வேகமாக நடக்கும். ஒரு வாரம், பத்து நாட்களில் சென்னை இயல்பு நிலைக்கு மாறிவிடும்.

ஆனால், வானிலை ஆய்வு மையம், ‘இன்னும் மழை பெய்யும்’ என, எச்சரித்துள்ளதால், வெகு சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என, பேரிடர் நிவாரண மைய அதிகாரிகள் வெளிப்படையாக கூறினர்.

அதிகம் பாதித்த பகுதிகள்:

தென்சென்னை: மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ராமாபுரம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், எம்.ஜி.ஆர்., நகர், ஜாபர்கான்பேட்டை, நந்தனம், தி.நகர், வேளச்சேரி, அடையாறு, பெருங்குடி, துரைப்பாக்கம், மடிப்பாக்கம், மயிலாப்பூர்

மத்திய சென்னை: கொளத்துார், பெரம்பூர், கொரட்டூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எழும்பூர் புதுபேட்டை, மயிலாப்பூர்

வடசென்னை: திருவொற்றியூர், எண்ணுார், மணலி, புழல், சடையங்குப்பம், செங்குன்றம், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், வியாசர்பாடி, ராயபுரம்.
புறநகர் பகுதிகள்: மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், மேடவாக்கம், பெரும்பாக்கம், அனகாபுத்துார், பொழிச்சலுார், கவுல்பஜார், குன்றத்துார், திருமுடிவாக்கம், பழைய பெருங்களத்துார், மணிமங்கலம் பி.டி.சி., குவாட்டர்ஸ், மண்ணிவாக்கம்.

 

Share.
Leave A Reply

Exit mobile version