பாலியல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வட இலங்கையிலுள்ள பெண்களுக்கு பயிற்சியொன்று தன்னார்வ அமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாகிய நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10 ஆம் தேதி வரையிலான 14 நாட்கள் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடமாகாணத்தில் பெண்கள், சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
பெண்கள், சிறுமிகள்- பாடசாலை மாணவிகளும் கூட மோசமான முறையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தப் பின்னணியிலேயே கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், ஐநா மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சண்முகப்பிரியா ரெஜினோல்ட் கஜன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
‘சமூகம் பெண்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டிருந்தாலும், திடீரென ஏற்படுகின்ற வன்முறைகளில் இருந்து பெண்கள் முதற் கட்டமாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது இன்று அவசியமாகியிருக்கின்றது, அதற்கான திறனையும், தகுதியையும் இந்தப் பயிற்சி பெண்களுக்கு வழங்கி வருகின்றது’ என்று அவர் கூறுகிறார்.