சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை வந்து மக்களுக்கு உதவிய தன்னார்வலர் ஒருவரை அதிமுகவினர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவி செய்ய பெங்களூரில் இருந்து தன்னார்வலர்கள் குழு சென்னை வந்தது. அந்த குழுவினர் கிழக்கு அண்ணா நகரில் கெங்கையம்மன் கோவில் அருகே மக்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து உதவினர்.
அப்போது 102வது வார்டு வட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன்(அதிமுக) தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். தன்னார்வலர்கள் சமைத்து வைத்துள்ள உணவு பொட்டலங்களில் தங்களுக்கு பங்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு மறுத்த தன்னார்வலர் ஒருவரை அதிமுகவினர் அடித்து நொறுக்கினர். நாங்களும் மக்களுக்கு உணவு வழங்கத் தான் உங்களிடம் பொட்டலங்களை கேட்கிறோம் என்று கூறி தகராறு செய்தனர்.
அவர்கள் உதவாவிட்டாலும் உதவி செய்பவர்களையும் அடித்து நொறுக்கும் இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் ஆளுங்கட்சியினர் மீது கடும்கோபத்தில் உள்ளனர்.