ஆஸ்திரியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நதி ஒன்றில் மிதந்துவந்த சுமார் ஒரு இலட்சம் யூரோவுக்கும் (சுமார் 1.5 கோடி ரூபா) அதிகமான பணத்தை கண்டெடுத்துள்ளார்.
டனுபே நதியில் கடந்த சனிக்கிழமை இந்நாணயத்தாள்கள் மிதந்து வந்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
100 யூரோ மற்றும் 500 யூரோ நாணயத்தாள்களே இவ்வாறு மிதந்து வந்தன. இவற்றின் மொத்த பெறுமதி 100,000 யூரோவுக்கும் அதிகமாகும்.
நாணயத்தாள்களைக் கண்ட இந்த இளைஞர் நதியில் பாய்ந்தபோது அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார் என அருகிலிருந்தவர்கள் எண்ணி, பொலிஸாரை அழைத்துள்ளனர்.
ஆனால், அவர் பணத்துடன் கரையேறியபோதே மற்றவர்களுக்கு விடயம் புரிந்தது.
பின்னர் பொலிஸாரும் இணைந்து நாணயத்தாள்களை சேகரித்தனர். இந்த நாணயத்தாள்கள் எவ்வாறு ஆற்றுக்கு வந்தன என்பது கண்டறியப்படவில்லை.
ஒரு வருட காலம் வரை சட்டபூர்வமான உரிமையாளர் எவரும் பணத்துக்கு உரிமை கோராவிட்டால் பணத்தை கண்டெடுத்தவர் முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ள உரித்துடையவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.