குப்பைக்குள் போனா லும் குண்டுமணி குண்டு மணிதான். மக்கள் வீசியது குண்டுமணியை. ஆனால் நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையைத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறித்து கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்ட ஆனந்தசங்கரியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருக்கின்றனர் என்றும் கூறியிருந்தார்.
இக் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அண்மையில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் மட்டக்களப்பில் நடந்த கலந்துரையாடலில் சம்பந்தன் குப்பைத் தொட்டியில் மக்கள் என்னை போட்டுவிட்டதாக கூறியது அவரது பெரும் ஆராய்ச்சியின் பின் கண்டுபிடித்ததுபோல் தெரிகிறது.
ஆனால் அவரின் ஆராய்ச்சியில் குப்பைக்குள் விழுந்தது குண்டுமணிதான் என்பதை கண்டும் காணாததுபோல் நடிக்கிறார். இதுவரை காலமும் அவருக்கு பல்வேறு விடங்கள் சம்பந்தமாக பல கடிதங்கள் எழுதியிருந்தேன்.
அவற்றிற்கு ஒன்றிற்கேனும் பதில் எழுத திராணியற்றவர், விக்னேஸ்வரன் சம்பந்தமாக கூறப்பட்ட கருத்துக்கு அவசரம் அவசரமாக பொருத்தமற்ற உதாரணம் தருவது அவரின் அந்தஸ்த்துக்கு ஏற்றதல்ல.
இரா.சம்பந்தன் அவர்களை நான் ஏறக்குறைய 45 ஆண்டுகளாக நன்கறிவேன் அவருடன் பழகியுமுள்ளேன். அவர் இன்றுவரை வகிக்கும் பதவிகள் நியாயமாக கிடைத்தனவா? தகுதி அறிந்து வழங்கப்பட்டதா? அல்லது வேறு வழிகளால் கிடைத்ததா? என்பது பற்றி நான் தெரிவிக்கத் தேவையில்லை.
அவரைப்பற்றிய பல விடயங்கள் என்னால் விமர்சிக்க முடியும். தற்போதைக்கு ஒருசில விடயத்தைப் பற்றி ஆராய்வோம். எஞ்சியவை பின்பு.
ஆனையிறவு முகாமை அரச படைகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று ஜப்பான் தூதுவர் அகாசியிடம் நான் கேட்டதாக என்மீது குற்றம் சுமத்தி, இயங்காதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை கிளையை கூட்டி என்மீது நம்பிக்கையில்லாத பிரேரணையை நீங்கள் கொண்டுவந்தது ஞாபகமிருக்கும்.
நான் அப்படி சொன்னேன் என்பதை உறுதிப்படுத்தி அவரோ அல்லது அவருடன் சேர்ந்து செயற்பட்ட சிறிஸ்கந்தராசாவோ திருகோணமலை காளிகோயிலில் சத்தியம் செய்வார்களா? இரா.சம்பந்தன் பத்தரகாளி மீது மிக்க நம்பிக்கை கொண்டவர் என்பதால்தான் இதனை கேட்கிறேன்.
2004ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 95சதவீத வாக்குகளை பெற்று 22 ஆசனங்களை கைப்பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணியை தோற்கடித்தமை உண்மையான வெற்றியா அல்லது மோசடி மூலம் கிடைத்ததா?
அத்தேர்தலில் காலையில் வெல்லாதவர்கள் மாலையில் வெல்ல வைக்கப்பட்டமை தொடர்பாக உங்களுக்குத் தெரியுமா அல்லது தெரியாதா? அவர் யாரென்பதை பகிரங்கபடுத்துவீர்களா? ஜனநாயகத்தை பாதுகாத்துவந்த ஒரு பழம்பெரும் அரசியல் கட்சியை முற்றாக அழிக்க முயற்சித்தமை ஞாபகம் உண்டா.
நீங்களும் ஒரு சக பாராளுமன்ற உறுப்பினரும் கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்குச் சென்று புலம் பெயர்ந்த மக்களால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சேர்த்த பணம் எவ்வளவு என்பதையும் என்ன செய்தீர்கள் என்பதையும் மக்களுக்கு அறியத் தருவீர்களா?
தேர்தலுக்கென அந்த பணம் கொடுக்கப்பட்டிருந்தால் தேர்தலுக்காக எவ்வாறு எவ்வளவு செலவழிக்கப்பட்டது என்பதை தெளிவாக தெரிவிக்கவும்.
கடந்த தேர்தலில் பல தில்லுமுல்லுகள் நடந்ததாக நம்பக்கூடிய வகையில் செய்திகள் அடிபடுகின்றன. எதிர்கட்சி தலைவர் என்றவகையில் அதுபற்றி புரண விசாரணையை முன்னெடுக்க முயற்சித்தீர்களா?
05-.12.-2001 ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முடிவுக்கு முரணாக திரு.துரைரட்ணசிங்கம் அவர்களை தன்னிச்சையாக தெரிவு செய்தீர்களே அதன் மர்மம் என்ன? மீண்டும் அவரை கடந்த 2015ஆம் ஆண்டு தெரிவு செய்தீர்களே அத்தெரிவின் பெரிய மர்மம் என்ன? இதுதான் நீங்கள் காப்பாற்றிவரும் ஜனநாயகமா?
1965ஆம் ஆண்டு கரைச்சி கிராமசபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை 50 ஆண்டுகளுக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளிலும் சிங்கக் கொடியை ஏற்றாதவன் நான்.
இன்னும் இவ்வாறான பலவிடயங்களை சொல்லலாம். ஆனால் ஒரு விடயத்தை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். குப்பைக்குள் போனாலும் குண்டுமணி குண்டுமணிதான். விடயத்தை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
குப்பைக்குள் போனாலும் குண்டுமணி குண்டுமணிதான். மக்கள் வீசியது குண்டுமணியை நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையை. தயவு செய்து நீங்கள் ஜனநாயகம் பற்றி பேசாதீர்கள்.
மக்கள் சிரிப்பார்கள். உங்களில் காணமுடியாத பல பெரும் குணங்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் காண்கிறேன். இது தவறானதா? மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களே தவிர தலைவராக தெரிவு செய்யவில்லை. நீங்கள் கூறுவதுபோல கட்சியும் மக்களுமே அதனை தீர்மானிப்பார்கள்.