கனடா நாட்டில் குடியேறுவதற்காக முதல் விமானத்தில் வந்து சேர்ந்த சிரியா அகதிகளை அந்நாட்டு பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டித்தழுவி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் யுத்தங்களை சந்தித்து வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் சிரியாவை சேர்ந்த 25,000 அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி வழங்கப்படும் என கனேடிய பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதன் முதற்கட்டமாக, சிரியா அகதிகளின் ஒரு பகுதியினரை ஏற்றிக்கொண்ட முதல் விமானம் கனடாவில் உள்ள பியர்சன் விமான நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை வந்து சேர்ந்தது.
சிரியா அகதிகளை வரவேற்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமைச்சர்கள் நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று அவர்களை பணிவோடு வரவேற்றுள்ளனர்.
விமானத்தில் இருந்து இறங்கி வந்த ஒவ்வொருவருக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குளிர்கால மேலாடைகளை வழங்கி கை குழுக்கி வரவேற்றார்.
விமான நிலையத்திற்கு வெளியே உற்சாகத்துடன் கூடியிருந்த அந்நாட்டு குடிமக்கள், ஓடிச்சென்று ஒவ்வொருவரையும் கட்டித்தழுவி முத்தம் கொடுத்து வரவேற்றனர்.
குடிமக்களில் ஒருவர் ‘’எங்கள் நாடு இனி உங்கள் நாடு. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம்” என உருக்கமாக கூறியது அகதிகளின் கண்களில் ஆண்ந்த கண்ணீரை வரவழைத்துள்ளது.
உச்சக்கட்டமாக, சிரியா குழந்தைகளை கனேடிய குழந்தைகள் வரவேற்றது அவர்களின் பெற்றோர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிரியா அகதிகளை கனேடிய குடிமக்கள் பரிவுடன் வரவேற்று உபசரிப்பு அளித்துள்ள இந்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்காணோர் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.
’’சிரியா மக்களை கணிவுடன் வரவேற்கும் குணம் உள்ள மக்களின் மத்தியில் வாழ்வதற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’’ என கனேடிய பெண் ஒருவர் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
’’வெளி உலகங்களில் பல மோசமான சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கனடா நாட்டில் ஒரு அழகான, உணர்வுப்பூர்வமான சம்பவம் நிகழ்ந்துள்ளது பாராட்டத்தக்கது’’ என மற்றொரு பெண் கருத்து தெரிவித்துள்ளார்.