தனது கணவரை கொலை செய்ய முயற்சித்த பிரித்தானிய பெண்ணொருவர், தனது கணவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் இதற்காக அவர் குறிப்பொன்றை எழுதி வைத்திருந்ததாகவும் பொய் கூறிய நிலையில், அக்குறிப்பிலிருந்த எழுத்துப்பிழை காரணமாக அகப்பட்டுக்கொண்டுள்ளார்.
55 வயதான ஜக்குலின் பட்றிக் எனும் இப்பெண், லண்டனின் தென்பகுதியிலுள்ள தனது வீட்டில் வைத்து தனது கணவர் டக்ளஸ் பட்றிக்கை விஷமூட்டி கொலைசெய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் கணவரின் மதுபானத்தில் ஜக்குலின் பட்றிக் விஷம் கலந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது கணவரைக் காப்பாற்றுவதற்காக அவரை தான் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றதாகவும் ஆனால், தனது கணவர் காப்பாற்றப்படுவதை அவர் விரும்பவில்லை என குறிப்பொன்றை எழுதி வைத்திருந்ததாகவும் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.
பல நாட்கள் கோமா நிலையில் இருந்த டக்ளஸ் பட்றிக் பின்னர் விழித்தெழுந்தார்.
அவரின் உடலில் விஷம் கலந்தது எப்படி என விசாரித்த பொலிஸார், ஜக்குலின் மீது சந்தேகம் கொண்டனர்.
தனது கணவர் எழுதி வைத்ததாக ஜக்குலின் பட்றிக் கூறிய குறிப்பில் கண்ணியம் என்பதை குறிக்கும் ஆங்கிலச் சொல்லான dignity என்பது. dignaty என பிழையாக அச்சிடப்பட்டிருந்தது.
அதை கருத்திற் கொண்ட புலனாய்வு அதிகா ரிகள் ஜக்குலின் பட்றிக் கிடம் dignity எனும் வார்த் தையை எழுதிக்காட்டுமாறு கூறினர்.
அப்போதும் மேற்படி குறிப்பில் இருந்ததைப் போல் dignaty என பிழையாகவே எழுதினார் ஜக்குலின்.
இதனால் ஜக்குலினே இக்குறிப்பை எழுதினார் எனத் தெரியவந்தது.
ஜக்குலினும் அவரின் மகளான கெத்தரினும் நச்சுப்பொருட்கள் தொடர்பாக இணையத்தில் தேடியிருந்தமை கணினிகளை ஆராய்ந்ததன் மூலம் கண்டறியப்பட்டது.
இதனால் அவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கில் ஜக்குலின் பட்றிக்குக்கு 15 வருடச் சிறைத் தண்டனையும் கெத்தரினுக்கு 3 வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.