இந்த மாதத்தின் நடுப்பகுதியில் கிளிநொச்சி செல்வா நகரில், ஒரு காலைப் பொழுதில் ஏழைத்தொழிலாளி தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் பட்டினியின் பிடியில் இருந்து காத்துக் கொள்ள தன் கந்தல் வீட்டில் இருந்து புறப்பட்டு கனகபுரம் வீதிக்கு ஏறும் ஒரு சந்தியில் மயங்கி வீழ்ந்தார்.
அயலில் உள்ளவர்கள் தெருவில் வந்தவர்கள் அந்த மனிதனை தூக்கியபோது அவரின் உயிர் பிரிந்திருந்தது. அந்த ஏழை மனிதனின் மரணமும் மரண வீடும் அந்த கிராமத்தின் குறித்த சிலரின் உதவிகளுடன் இடுகாடுபோய் முடிந்துபோயிற்று.
அந்த ஏழை மனிதனின் பெயர் வைத்திலிங்கம் விக்னேஸ்வரன். 55வயது மதிக்கத்தக்க அந்த மனிதரின் மனைவி புவனேஸ்வரி. விரல்விட்டு எண்ணுகின்றவர்கள் மட்டும் சுற்றியிருக்க தன் பிரிவு ஆற்றாமையைக்கூட அழ சக்தி அற்றவளாய் இருந்தாள்.
விக்னேஸ்வரன் புவனேஸ்வரி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள், டிலக்சன் பிறப்பிலேயே சித்த சுவாதீனமற்றவனாய் ஆகியிருக்கிறான். அடுத்தவள் லாயினி, கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் படிக்கும் சிறுமி.
அந்தப்பாடசாலைக்கும் லாயினியின் வீட்டுக்கும் நெடுந்தூரம் நடந்தே அந்த ஏழைச் சிறுமியின் கால்கள் தேய்ந்துபோயிருக்கிறது. மரண வீடு நடந்து இரண்டு வாரங்கள் கழித்து லாயினியை சந்திக்கநேர்ந்தபோது லாயினி இறந்துபோன தன் தந்தையின் பழைய கறள் பிடித்த சைக்கிளில் பாறுக்கு கீழாக கால்களை நுழைத்த கெந்தி கெந்தி சைக்கிளோட கற்றுக்கொண்டிருந்தாள்.
அந்த வீட்டுக்கு தண்ணீர் இல்லை.மலசல கூடம் இல்லை. வேலி இல்லை. அவர்கள் அன்றாடம் சாப்பிடுகின்றார்களா, இல்லையா என்ற சேதி யாருக்கும் தெரியவில்லையே என்பதுதான்.
ஒன்றுக்கு பல வீடுகள், காணிகள், சொத்துச் சேர்ப்புக்கள். வாய்கிழிய அரசியல் பேச்சு. தேர்தல் காலங்களில் மட்டும் ஏழைகளின் படலைகளை திறந்து வாக்குப்பிச்சை எடுக்கும் இந்தச் சமுகத்தின் புல்லுருவிகள் என்று நிறம்மாறி நிறைந்து வழியும் இந்தச்சமுகத்தில் ஒரேஒரு வீடு அதற்கு ஒரு சிறுகிணறு.
இந்த குடும்பத்துக்காக அயலுள்ள மற்றைய ஏழைகள் மிகுந்த கவலைப்படுகின்றார்கள். ஆனால் அவர்களிடம் கொடுக்கின்ற மனம் மட்டுமே உண்டு கொடுப்பதற்கு ஏதுமில்லை.
இந்த ஏழைக் குடும்பத்தில் தமிழ்மதி என்ற அழகான பெயருடன் கடைசிச்சிறுமி இருக்கிறாள். அவள் முதலாம் ஆண்டு படிக்கின்றாள். லாயினி ஆறாம் ஆண்டு படிக்கின்றாள். டிலக்சன் சித்தசுவாதீனமுற்றவன். அம்மா எலும்பும் தோலுமான தாய் புவனேஸ்வரியால் என்ன செய்யமுடியும்.
தன் கணவன் தங்களுக்கு சாப்பாட்டுக்கு குறைவைக்கவில்லை என்று புவனேஸ்வரி சொல்கிறாள். உண்மைதான். ஏழைகளின் சாப்பாடு மூன்று வேளையா? இரண்டு வேளையா? ஒரு வேளையா?
கிளிநொச்சி செல்வாநகரில் தன் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் நிர்க்கதியாகி நிற்கும் புவனேஸ்வரிக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு ஒரு தொகுதி பண உதவியை வழங்கியிருக்கின்றது.