திருகோணமலையில் 16 வயது சிறுமி ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் சிறுமியின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த சிறுமியை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று தனது உறவினர் வீட்டில் தனிமையில் வைத்திருந்த போது சிறுமியின் உறவினர்கள் மூவர் தேடிச் சென்று குறித்த இளைஞனை தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு நேற்று (14) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குறித்த மூவரையும் இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ கஹகே உத்தரவிட்டார்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கே.மகேஸ்வரன் வயது (50), ஜே.என். சந்திரக்குமார் வயது(36), கே.டோரன்ஸ் வயது(30) ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பத்தொன்பது வயதுடைய இளைஞன் நீண்ட காலமாக காதலித்து திருமணம் முடிக்கும் எண்ணத்தில் குறித்த சிறுமியை உறவினர் வீட்டில் அழைத்துச் சென்று வைத்திருந்த நிலையிலேயே சிறுமியின் உறவினர்கள் தாக்கியுள்ளதாகவும், குறித்த இளைஞனின் காதலுக்கு சிறுமியின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்க்குதலுக்குள்ளான சந்துரு (19) என்ற இளைஞனே திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.