சென்னை: புதிய படமொன்றில் நடிகை சிம்ரன் பேய் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் இது பேய்க்காலம். மழை கூட பேய் மழையா பெய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நடிகர், நடிகைகளை நம்பி படமெடுப்பதை விட பேய்களை நம்பி படமெடுத்தால் ஜெயிக்கலாம் என்கிற அளவிற்கு தொடர்ந்து தமிழில் பேய்ப் படங்களாக வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. அழும் சீனில் கூட புல் மேக்கப்பில் வந்து, ‘ப்பா…’ சொல்ல வைத்த நடிகைகள் கூட, பேய்களாக மிரட்டி வருகின்றனர்.
அழகிய பேய்…
அந்த வகையில் அழகிய பேய்களின் பட்டியலில் புதிதாக இடம் பிடிக்கப் போகிறார் சிம்ரன். அறிமுக இயக்குநர் பாலா இப்படத்தை இயக்குகிறார்.
நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மாயா’ படத்தைப் போன்ற பேய் தான் இப்படத்தின் கதைக்களமாம். இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக சிம்ரன் நடிக்க இருக்கிறாராம்.
சிம்ரனுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் நடிக்கிறார். இது தவிர இந்த படத்தில் கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்க இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சிம்ரன் தான் பேயாக மற்றவர்களை மிரட்டுவார் என்றும், இல்லையில்லை பேய் தான் சிம்ரனை துரத்தும் என்றும் இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. இதில் எது உண்மை என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தூக்கத்தை விரட்டுவாரா?
ஏற்கனவே கனவுக்கன்னியாக இருந்து தமிழ் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த சிம்ரன், இப்போது ரீஎண்ட்ரியில் பேயாக மாறி அனைவரது தூக்கத்தையும் விரட்ட முடிவு செய்திருக்கிறார் போலும்.