மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணா மல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் வௌ்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயல கத்தில் நடைபெற்றபோது.
எனது இரு மகன்களுக்கும் எனது இரு மகன்களுக்கும என்ன தான் நடந்தது?
அரியாலையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தயாரான துரை மகேஸ்வரி சாட்சியமளிக்கையில், எனது மூத்த மகன் தங்கத்துரை. 1996ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் திகதி வீட்டில் இருந்தபோது சில நபர்கள் தலையாட்டியைக் கொண்டு வந்து எனது மகனை அதன் முன்னிலையில் நிறுத்தினார்கள். அதன்பின்னர் அவரை தம்முடன் கூட்டிச் சென்றுவிட்டார்கள்.
சில நாட்கள் கடந்த நிலையில் இராணுவத்தாலேயே அவர் பிடிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது அங்கு என்னை நன்கறிந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பிடிக்கப்பட்டவர்களை இளவாலையில் வைத்திருக்கின்றார்கள் எனக்கூறி முகவரியொன்றைக் கொடுத்தார். சிலநாட்கள் கழித்து அந்த அதிகாரியும் விபத்தில் இறந்து விட்டார்.
பின்னர் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்த முகவரியில் உள்ள இடத்திற்குச் சென்றேன்.
அது ஒரு இராணுவ முகாம். அவர்களிடத்தில் எனது மகன் தொடர்பாக கேட்டபோது எனது மகனை தொலைவில் வைத்துக் காட்டினார்கள். அன்று 1997ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 28ஆம் திகதி ஒருவடத்திற்கு பின்னரே எனது மகனைக் கண்டேன்.
அங்கிருந்து என்னை அனுப்பி விட்டார்கள். அதன் பின்னர் அவர் பற்றிய எதுவிதமான தகவலையும் நான் அறியவில்லை.
மூத்தமகனின் கதை இவ்வாறிருக்கையில், எனது இளைய மகன் துரை அஜந்தன். அவர் ஆயுள்வேத வைத்தியராக கடமையாற்றிக்கொண்டிருந்தார்.
2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அவர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பியிருக்கவில்லை. என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் நாம் அவருடைய தொழில் பார்க்கும் இடத்திற்குச் சென்றபோது அவரிடம் அண்ணன் தங்கத்துரை பற்றி விசாரணை செய்யவேண்டுமெனக் கூறி சிலர் வருகை தந்திருந்தனர்.
அவர்கள் அவரை அழைத்துச் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அதன்பின்னர் அவர் தொடர்பாக பல இடங்களில் விசாரித்தபோதும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை.
தற்போதும் உயிருடன் எங்காவது இருப்பார்கள் என்றே நம்புகின்றேன். எனது இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்து விட்டு இன்று அநாதையாக இருக்கின்றேன். தயவு செய்து அவர்களுக்கு என்ன நடந்ததென்றாவது கூறுங்கள் என்றார்.
மாமி வீட்டுக்குச் சென்ற மகனை இராணுவமே கொண்டு சென்றது
கண்டி வீதி அரியாலையைச் சேர்ந்த நடராஜா சிவக்கொழுந்து என்ற தாயார் சாட்சியமளிக்கையில், எனது மகன் நடராஜா ஜெயராஜா. 1973ஆம் ஆண்டு பிறந்த வர். தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.
1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 28 ஆம் திகதி வேம்பிராயில் உள்ள அவருடைய மாமி வீட்டிற்கு டெக் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார்.
வேம்பிராயில் உள்ள அவருடைய அண்ணாவின் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது வீதியால் ரோந்து சென்ற இராணுவத்தினர் விறாந்தையில் அமர்ந்திருந்த எனது மகனைக் கண்டதன் பின்னர் அங்கு வருகைதந்துள்ளனர்.
என் மகனைப் பார்த்து யார் என்று மாமியாரிடம் கேட்டுள்ளனர். இவர் என்னுடைய உறவினர், தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்.
டெக் எடுப்பதற்காக வந்தார் சற்று நேரத்தில் சென்றுவிடுவார் என்று இராணுவத்தினரிடம் கூறியுள்ளார். எதுவாக இருந்தாலும் அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறிய இராணுவத்தினர் எனது மகனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர் கல்வி கற்றுக் கொண்டிருந்தவர் அவருக்கு இயக்கங்கள் ஒன்றுடனும் தொடர்பு இருந்திருக்கவில்லை. அவர் ஒரு அப்பாவியானவர்.
அவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்றதன் பின்னர் அனுப்பிவைக்கவே இல்லை. மகன் வீடு திரும்பாத நிலையில் மாலை வேளை மகனை இராணுவம் கொண்டு போய்விட்டது என்று அறியக் கூடியதாக இருந்தது.
உடனடியாகவே மீசாலைக்குச் சென்று அங்கிருந்த இராணுவ முகாம்கள் எல்லாவற்றிற்கும் சென்றேன். எனது மகனை கண்டீர்களா அவரை விட்டுவிடுங்கள் எனக் கேட்டோம். அவர்கள் எல்லோரும் எங்களுக்குத் தெரியாது என்றே கூறினார்கள். அவருடை மாமியார் கண்மணி நேரில் கண்டசாட்சியாக இன்றும் உள்ளார்.
எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதலாவது பிள்ளை மாற்றுத்திறனாளி. இரண்டாவது மகன் தான் காணாமல் போனவர். மூன்றாவது பெண் பிள்ளை.
உணவிற்கு வழியில்லாமல் நாங்கள் கிடந்தாலும் பறவாயில்லை எனது பிள்ளை எனக்கு வேண்டும். வேறு ஒன்றுமே வேண்டாம். வேறு எதனையும் உங்களிடத்தில் கேட்கவில்லை என்றார்.
அண்ணன் இரத்தினதுரை உயிரோடு தான் உள்ளார்
பத்மநாதன் இராஜலக் ஷ்மி, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக்கழகத்தின் தலைவராக விருந்த புதுவை இரத்தினதுரையின் அக்கா சாட்சியமளிக்கையில், 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி எனது தம்பியான இரத்தினதுரை அவருடைய மனைவி மற்றும் இரு மகன்மாருடன் படையினரிடம் சரணடைந்தார்.
அதன் பின்னர் படையினர் பாரிய பெயர் பட்டியல் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அதில் அவருடைய மகன்மார் மற்றும் மனைவியின் பெயரை வைத்து நீண்ட ஆராய்வொன்றைச் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு விடுதலையளித்துவிட்டு என் தம்பியை அழைத்துச் சென்று விட்டனர்.
அவர் ஒரு கவிஞனாகவே புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தார். அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். அவர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனதன் பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக பிரபல சிங்களப்பத்திரிகையான திவயின செய்தியொன்றைப் பிரசுரித்திருந்தது. எனவே அவரை மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும். அவர் உயிருடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.
கொழும்புக்கு வந்த மகன் வீட்டுக்கு வரவேயில்லை
சாவகச்சேரி மட்டுவில் தெற்கைச் சேர்ந்த காசிப்பிள்ளை தங்கம்மா என்ப-வர் சாட்சியமளிக்கையில், எனது மகன் ஆரம்பகாலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்புடன் இணைந்து செயற்பட்டிருந்தார்.
அதன்பின்னர் ஏற்பட்ட நிலைமைகளால் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். அவர் மீண்டும் சமாதான காலப்பகுதியில் கொழும்புக்கு வருகைதந்திருந்தார்.
வீட்டுக்கு வருவதாகவும் கூறியிருந்தார். எனினும் அவர் திடீரென கொழும்பிலேயே காணாமல் போயிருந்தார். நாங்கள் பலரிடத்தில் விசாரணை செய்தோம்.
எனினும் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. பின்னர் ஒருநாள் எமது பிரதேசத்தைச் சேர்ந்த தருமன் என்பவர் எனது மகனை கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் கண்டதாக கூறினார்.
நான் அங்கு சென்று எனது மகனை விட்டு விடுங்கள் எனக்கோரினேன். முதலில் அவரைத் தெரியாது என்றே கூறினார்கள். பின்னர் அவரை விசாரணை செய்துவிட்டு விடுவிப்பதாக கூறினார்கள்.
அதன் பின்னர் அவரை விடவே இல்லை. யுத்தமும் தொடங்கிவிட்டது. இன்று வரையில் எனது மகனுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதிருக்கின்றது என்றார்.
கொலைசெய்யப்படும்போது ஐ.நா.வும் பார்த்துக்கொண்டு தான் இருந்துள்ளது
யாழ்.கச்சேரிநல்லூர் வீதியைச் சேர்ந்த சோதிராசா சாந்தகுமாரி சாட்சியமளிக்கையில்,
நாங்கள் யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் நீண்ட காலமாக வசித்து வருகின்றோம். எனக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு மகளுமாக நான்கு பிள்ளைகள்.
2007ஆம் ஆண்டு ஜனவரிமாதம் ஆலயத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் எனது சசோதரி மற்றும் சகோதரன் ஆகியோரின் பிள்ளைகள் எமது வீட்டுக்கு வருகை தந்து தங்கியிருந்தனர்.
எனது இரண்டாவது பிள்ளையான சோதிராசா மோகானந்த் (வயது 22) யாழ். மானிப்பாய் வீதியில் வசித்து வந்த எனது அக்காவின் புதல்வன் வசந்தகுமார் சிவசதீஸ்குமார் (வயது 32) வவுனியாவில் வசித்து வந்த எனது அண்ணனின் பிள்ளையான திரவியநாதன் திரவியவேந்தன் (வயது 21) ஆகிய மூன்று பேரும் ஒன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர்.
நடுச்சாமமிருக்கும் திடீரென எமது வீட்டுக்குள் வாகனங்கள் சில வருகை தந்தன. ஆயுதங்களுடன் இராணுவத்தினர் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தனர். விட்டுக்குள் வந்தவர்கள் எங்களை அச்சுறுத்திவிட்டு அவர்களை நித்திரைப்பாயிலிருந்து அழைத்துச் சென்றனர்.
இதன் போது பிள்ளைகளை விடுங்கோ கொண்டு செல்ல வேண்டாம் என்று இராணுவத்திடம் மன்றாடினோம். நாங்கள் கத்திக்கதறினோம் ஆனால் அவர்கள் எங்களை தள்ளிவிட்டுவிட்டு பிள்ளைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.
நாங்கள் கூக்குரலிட்டது அயல் முழுவதும் கேட்டது. ஆனால் யாருமே வரவில்லை. அன்றைய நிலையில் யாரும் வரவும் முடியாது. அவ்வாறு வந்தால் அவர்களுக்கு என்ன நடக்குமென்று எல்லோருக்குமே தெரியும். இவ்வாறான நிலையில் நாம் எமது பிள்ளைகளைத்தேடி இராணுவ முகாம்களுக்குச் சென்றோம்.
முதலாவதாக அரியாலையிலுள்ள இராணுவ முகாமிற்குச் சென்றோம். தாங்கள் அப்படி யாரையும் பிடிக்கவில்லை என்றே எமக்குக் கூறினார்கள். இராணுவத்தினரே பிடித்துச் சென்றனர் அவர்களை எமக்குத் தெரியும் எனக் கூறினோம்.
அவ்வாறாயின் இங்கு நிறைய முகாம்கள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் நகரில் இருக்கின்ற பிரதான முகாமிற்குச் சென்று பாருங்கள் எனக் கூறினார்கள் அதற்கமைவாக இராணுவத்தின் பிரதான தலைமையகமாக அன்று காணப்பட்ட 512ஆவது படைப்பிரிவுக்குச் சென்றோம். நாங்கள் யாரையும் பிடிக்கவில்லை.
நீங்கள் ஊரெழு அல்லது அச்செழு முகாமிற்குச் சென்று பாருங்கள் என்றனர். ஊரெழு முகாமில் எமது பிள்ளையைக் கண்டதாகவும் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் எம்மிடத்தில் தெரிவித்தனர்.
ஊரெழு முகாமிற்குச் சென்றோம். இராணுவத்தினரிடம் நாம் கேட்ட போது அப்படி யாரும் இல்லை நீங்கள் அச்செழுவிற்குச் சென்று பாருங்கள் என்றனர். நாங்கள் அச்செழுவிலுள்ள முகாமிற்கும் சென்றோம். அங்கு உங்கள் பிள்ளைகளை புலிகள் தான் பிடித்திருப்பார்கள் அவர்களிடம் கேளுங்கள் அவர்கள் கொண்டு சென்றிருப்பார்களென இராணுவத்தினர் கூறினார்கள்.
அக்காலத்தில் புலிகள் இங்கு இல்லை. யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இவ்வாறு முகாம் முகாமாக தேடி அலைந்ததன் பின்னர் பொலிஸாரிடத்தில் முறையிட்டோம். மனித உரிமை ஆணைக்குழு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றிடம் முறையிட்டோம்.
பிள்ளைகளைத் தொலைத்துவிட்ட ஏக்கத்துடன் நானும் எனது குடும்பமும் என்னுடைய அண்ணண் மற்றும் அக்காவின் குடும்பங்களும் கண்ணீருடன் அலைந்து திரிந்தோம்.
அவ்வாறிருக்கையில், 2007 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் என்னுடைய முத்த மகனும் கடைசி மகனும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதன்போது நண்பர்களிடத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அதனையடுத்து அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு வரவேயில்லை.
நாம் அவர்களை தேடிச் சென்றபோது யாழ். அம்மன் வீதியால் செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த வீதியில் தான் ஐக்கிய நாடுகள் அலுவலகம் இருந்தது. வீதியின் இரு பக்கத்தையும் மறித்து வைத்து அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
காரணத்தைக் கேட்டோம். பட்டப்பகலில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவர்கள் வேறு யாரும் அல்ல என்னுடைய பிள்ளைகள்.. (கண்ணீருடன் கதறியழுதார்) அவர்களை அவர்களுடைய நண்பர்கள் அழைக்கவில்லை. யாரோ அழைத்திருக்கின்றார்கள்.
இந்த வீதிக்கு வருமாறு கூறியிருக்கின்றார்கள். அவர்கள் அங்கு சென்றபோது குறித்த வீதியால் செல்வதற்கு ஏனையவருக்கு அனுமதியை மறுத்துவிட்டு என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
நிச்சயமாக இராணுவத்தினரே இதனைச் செய்துள்ளார்கள். இது ஐ.நா. அலு-வலகத்திற்கு அருகாமையிலேயே நடைபெற்று-ள்ளதால் அந்த அதிகாரிகளும் நேரடியாகவே பார்த்துக்கொண்டி-ருந்துள்ள-னர் என்றே கருதுகின்றேன்.
என்னுடைய மூன்று ஆண்பிள்ளைகளில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர். ஒருவரை பிடித்துச் சென்றுள்ளனர். அந்த மகனையே எட்டுவருடங்களாக தேடி அலைந்துகொண்டிருக்கின்றேன். என்னோடு எனது அண்ணன் மற்றும் அக்கா ஆகியோரும் அவர்களின் பிள்ளைகளையும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
எமது கண்முன்ணே கொண்டு சென்ற எமது பிள்ளைகளை எங்களிடம் மீட்டுத் தாருங்கள் எமது இறுதி மூச்சுவரை உங்களிடம் விடுக்கின்ற கோரிக்கை இதுவாகுமென சோதிராசா சாந்தகுமாரியும் அவரது அக்காவான கந்தசாமி வசந்தகுமாரியும் இணைந்து கண்ணீருடன் கைகூப்பிக்கோரிக்கை விடுத்தனர்.
தொகுப்பு : ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்