சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்பு மற்றும் அனிருத்தின் மீதான பிடி இறுகுவதால் நேற்று இந்தியா திரும்ப வேண்டிய அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறாராம்.

இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு மற்றும் அனிருத்தை நேரில் வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த வழக்கில் சிம்பு தற்போது சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார். அனிருத் இந்த பாடலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று 2 தினங்களுக்கு முன்னர் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆனால் அவரையும் நேரில் ஆஜராகுமாறு கோவை போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். இந்நிலையில் கனடா நாட்டில் தனது குழுவினருடன் கச்சேரி செய்ய சென்றிருந்த அனிருத் நேற்று சென்னை திரும்பவில்லை.
அவரது குழுவைச் சேர்ந்த மற்ற இசைக் கலைஞர்கள் மட்டுமே சென்னை திரும்பி வந்தனர். இதனால் நேற்று அனிருத் திரும்புவார் என்று சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த ஊடகங்கள் ஏமாற்றமடைந்தனர்.
தற்போதைய நிலவரப்படி கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியுள்ளதாக கூறுகின்றனர். மற்றொருபுறம் கனடாவில் இருந்து மும்பை அல்லது ஹைதராபாத் வழியாக அவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வர அவரது குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனராம்.

ஆனால் அவரது குடும்பத்தினரே தற்போது அவர்களது வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குழப்பத்தால் அனிருத் 19ம் தேதி கோவை போலீஸில் விசாரணைக்கு ஆஜராவாரா என்பது குழப்பமாகியுள்ளது.

கோவை போலீசாரிடம் நாளை மறுநாள் சிம்பு-அனிருத் ஆஜர் ஆவார்களா?

617b6d83-aa28-492c-805a-41e4648d4452_S_secvpf.gifஅனிருத் இசையில் சிம்பு பாடியதாக வெளியான ஆபாச பாடல் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரையும் கண்டித்து போராட்டங்கள் நடக்கின்றன. சேலம், தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள்.

மாதர் சங்கங்கள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்பு வீட்டின் முன்பும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இருவரையும் கைது செய்ய வற்புறுத்தி போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன.

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு-அனிருத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாளை மறுநாள்(19-ந்தேதி) இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனும் அனுப்பி இருக்கிறார்கள்.

இதனால் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபோல் சென்னை போலீசாரும் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

சைபர் கிரைம் போலீஸ் மூலம் ஆபாச பாடலில் உள்ள குரல் சிம்புவுடையதுதானா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை போலீசார் சம்மனை ஏற்று 19-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் கொடுப்பதா, வேண்டாமா? என்று சிம்பு-அனிருத் ஆகிய இருவரும் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தங்களுக்கு பதில் வக்கீல்களிடமே பதில் மனுக்களை கொடுத்து அனுப்பி வைக்கலாமா? என்றும் ஆலோசிக்கிறார்கள். இதுகுறித்து கோவை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது,

‘‘ஆபாச பாடல் விவகாரத்தில் சிம்புவும், அனிருத்தும் 19-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருக்கிறோம். இதனை ஏற்று அவர்கள் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது சிம்புவின் குரலை பதிவு செய்து ஆபாச பாடலில் இருப்பது அவரது குரல்தானா? என்று ஆய்வு செய்யப்படும்.

அதன் பிறகு புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார். போலீசில் ஆஜராகும்போது இருவரும் கைது செய்யப்படுவார்களா? என்று கேட்டபோது, ‘‘அதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது’’ என்று கூறிவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version