மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் வௌ்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயல கத்தில் நடைபெற்றபோது…
கடைக்குச்சென்ற மகன் திரும்பவேயில்லை அதிகாலையில் வெள்ளைவானே வந்தது
கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சோதிலிங்கம் சாரதாம்பாள் என்ற தாயார் சாட்சியமளிக்கையில், எனது மகன் ஜனார்த்தனன் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதியன்று மாலை கடைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.
நாங்கள் என்னசெய்வதென தெரியாது பதறிக்கொண்டிருந்த சமயம் நள்ளிரவைத்தாண்டி அதிகாலை ஒருமணியிருக்கும். எமது வீட்டுக்கு வெள்ளைவானில் வருகைதந்தவர்கள் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
15 பேரளவில் கறுப்பு உடைதரித்திருந்தார்கள். கையில் துப்பாக்கிகள் வைத்திருந்தார்கள். வீட்டைச்சோதனை செய்யவேண்டுமெனக் கூறினார்கள்.
எம்மை ஒரு இடத்தில் அமர்த்தி வைத்துவிட்டு வீட்டின் அனைத்துப்பகுதிகளையும் சோதனையிட்டார்கள். கொச்சைத்தமிழிலேயே பேசினார்கள்.
அதன்பின்னர் எம்மை அச்சுறுத்திவிட்டு சென்றுவிட்டார்கள். நாம் மகனைத்தேடி அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச்சென்றோம். இருப்பினும் அங்கு எவருமே எமக்கு பதிலளிக்கவில்லை. எமது வீட்டுக்கு அருகிலுள்ள மனோகராச்சந்தியில் இராணுவ முகாம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றார்.
அண்ணா வருவார் அண்ணா வருவார் ..மனநோயாளியாகினார் தங்கை
யாழ்ப்பாணத்தைச்சோந்த முருகேசு வசந்தகுமாரி என்பவர் சாட்சியமளிக்கையில், எனது அண்ணனான அருச்சுனராஜா ஜெயக்குமார் (அப்போது வயது 31) என்பவர் மேசன் வேலை முடித்து வீடு திரும்பும் வேளை 1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி ஈச்சமோட்டை குளத்தடியில் வைத்து கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்டவர் யாழ்.அசோஹா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார் என்ற தகவல் அறிந்தோம். அங்கு சென்று பார்வையிட்டோம்.
அண்ணனுடன் கதைத்தோம். மறுநாள் சென்ற போது அங்கே அண்ணா இல்லை. அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது அண்ணா இல்லை என கூறி எம்மை அனுப்பி விட்டார்கள்.
அதன் பிறகு எனது தங்கை ஒருவர் அண்ணா வருவார் அண்ணா வருவார் என அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார். நாளடைவில் அவர் மன நோயாளியாகிவிட்டார். தற்போதும் அண்ணா வருவார் அண்ணா வருவார் என்றே கூறிக்கொண்டு இருக்கின்றார்.
இதேபோன்றே எனது மூத்த சகோதரனான உதயகுமார் சைக்கிள் கடை வைத்து இருந்தார். 1987ஆம் ஆண்டு அவரது கடைக்கு சென்ற இந்திய இராணுவத்தினர் கடையையும் அடித்து நொருக்கி அண்ணன் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.
அதனால் அண்ணனுக்கு மாறாட்டம் ஏற்பட்டு தற்போது அவரும் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மனநோயால் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்களையும் நானே பார்த்து வருகின்றேன் என்றார்.
பஸ்ஸை நிறுத்தி கணவனை கடத்திச் சென்றுள்ளனர்
அரியாலை கிழக்கைச் சேர்ந்த பிரதீபன் ஜெனனி என்பவர் சாட்சியமளிக்கையில், எனது கணவர் பிரதீபன். இவர் இலங்கை போக்குவரத்துச் சபையில் பேருந்து சாரதியாக கடமைபுரிந்து வந்தவர்.
2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி புங்குடுதீவுப்பகுதியில் பஸ்ஸை செலுத்திக்கொண்டு வரும்போது அங்கு வருகை தந்திருந்த சில நபர்கள் பஸ்ஸை நிறுத்தி எனது கணவனைக் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் அங்கு வந்தவர்கள் யார் என்பதை எவராலும் அடையாளம் கண்டிருக்க முடியவில்லை.
நீண்டநேரமாகியும் கணவர் வீடுதிரும்பாததையடுத்து விசாரித்தபோது எனக்கு இந்த விடயம் தெரியவந்தது. நாம் அங்கு சென்று பலருடன் பேசினோம்.
எனினும் யாருக்குமே எதுவுமே தெரியவில்லை. இன்றுவரையில் எனது கணவன் தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்கின்றேன் என்றார்.
கையொப்பத்திற்காகச் சென்றபோது பொலிஸார் பேசிக்கலைத்தனர்
நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாதன் பேரின்பராணி என்பவர் சாட்சியமளிக்கையில், எனது மகன் லோகநாதன் பிரதீபனை (அப்போது வயது 20) கச்சேரிக்கு அருகில் வைத்து 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி 4 மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவத்தினர் கடத்திச்சென்றனர்.
மகனை தேடி நல்லூரடியில் உள்ள இராணுவ முகாமுக்கு சென்றேன். அங்கு ரஞ்சித் என்ற இராணுவத்தைச் சேர்ந்தவர் என்னுடன் கதைத்தார்.
எனது மகன் தொடர்பான விபரங்களை விசாரணை செய்தார். தாம் அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறி என்னை அனுப்பிவைத்தார்.
நான் என்னசெய்வதென்றறியாது வீடு திரும்ப முற்படுகையில் இராணுவ முகாமினுள் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளொன்று வந்தது. அதில் இரண்டு இராணுவத்தினருக்கு இடையில் எனது மகனின் இரு கைகளும் பின் புறமாக கட்டப்பட்ட நிலையில் இருத்திக் கொண்டு வேகமாகச் சென்றதைக் கண்டேன்.
கூச்சலிட்டுக் கத்தினேன். இருப்பினும் அவர்கள் எனது மகனை வேகமாகக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் எனது மகனை காணவேயில்லை.
கொழும்பில் எனது மகனை தடுத்து வைத்துள்ளார்களென அறிந்து கொழும்பு பூசா சிறைச்சாலைக்கு சென்றேன். சிறைச்சாலையில் எனது மகனின் விபரத்தை கூறி மகனின் புகைப்படத்தினை காண்பித்தேன்.
சிறிது நேரத்தின் பின்னர் என்னை அழைத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனது குடும்ப விபரம் அனைத்தையும் கூறினார்கள். உங்களது மகன் எல்.ரி.ரி.ஈ தானே எனக் கேட்டனர். நான் இல்லை என்றதோடு அவருக்கு அவ்வாறான எந்தவொரு அமைப்புடனும் தொடர்பில்லையென மறுத்தேன்.
அதனையடுத்து என்னை உள்ளே அழைத்து சென்றனர். அங்கிருந்த ஒருவரைக் காட்டி இது தானே உங்கள் மகன் எனக் கேட்டனர். நான் இல்லை என கூறி எனது மகனின் விபரத்தை கூறினேன்.
அப்போது அவர்கள் அழைத்து வந்திருந்த அந்த நபர் அம்மா உங்கள் மகன் எங்களுடன் தான் இருக்கின்றார் என சத்தமாகக் கூறினார். அப்போது அங்கிருந்த உத்தியோகத்தர்கள் அவருடைய தலையின் பின்புறமாக அடித்து அவரை பேசவிடாது இழுத்துச் சென்றனர்.
அத்துடன் என்னையும் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து பேசி கலைத்து விட்டனர்.
2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு நாலாம் மாடியில் இருந்து கடிதம் ஒன்று எமது வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
அக்கடிதத்துடன் அங்கு சென்ற போது காலையில் இருந்து மாலை வரை என்னை மறித்து வைத்திருந்தனர். சாப்பாடு தண்ணீர் இல்லாமல் மயங்கி வீழ்ந்தேன்.
பின்னர் எனக்கு அங்கிருந்தவர்கள் முதலுதவி செய்து மகனை பற்றிய தகவல்களை கேட்ட பின்னர் உங்கள் மகன் தொடர்பில் காங்கேசன்துறை இராணுவ முகாமில் சென்று விசாரியுங்கள் என்று கூறியதோடு கடிதம் தந்தனர்.
அந்த கடிதத்தை வாங்கிக்கொண்டு காங்கேசன்துறை இராணுவ முகாமுக்கு சென்றபோது அங்கிருந்த இராணுவ அதிகாரி யாரைக்கேட்டு கொழும்பு போனீர்கள் யார் அங்கே போகச் சொன்னது என கோபமாகக் கத்தினார்.
நான்கொண்டு சென்ற கடிதத்தை பெற்று வாசித்தவர் அதனைக் கொண்டுசென்று தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையொப்பமொன்றை வாங்கி வாருங்களென கூறி அனுப்பினார்கள்.
தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கடிதத்தை கொடுத்தால் அவர்கள் அதனை வாங்கி வைத்துவிட்டு என்னை அங்கிருந்து செல்லுமாறு கடும்வார்த்தைகளை பிரயோகித்து பேசிக் கலைத்து விட்டனர் என்றார்.
எனது மகனைக் கைது செய்தவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலுள்ளார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயொருவர் சாட்சியமளிக்கையில், சமாதான காலப்பகு தியில் முகமாலை இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் 2003ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி எனது மகனை கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்தனர்.
மகனை கைது செய்த இராணுவத்தினர் எமது வீட்டுக்கு மகனுடன் வந்தனர். அவரை எம்மிடத்தில் அழைத்து வந்து உங்கள் மகனை கைத்துப்பாக்கி வைத்திருந்ததால் கைது செய்துள்ளோம் எனக் கூறியதுடன் எனது கணவரையும் வருமாறு அழைத்து சென்றனர்.
முகமாலை இராணுவ முகாமிற்கு அழைத்து சென்றவர்கள் அங்கு எனது கணவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்தனர். அதன்பின்னர் மகனை விடுவிப்பதாக கூறி எனது கணவனை அனுப்பி வைத்தனர்.
மகன் பற்றிய எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணம் வளலாய் பிரதேசத்தில் காணப்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளை உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. நாமும் அங்கு சென்றிருந்தோம்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு சீருடையுடன் அங்கு கடமையில் இருந்தவர் எனது மகனை கைது செய்து வீட்டுக்கு அழைத்து வந்த இராணுவத்தில் ஒருவராவார்.
அவரை அடையாளம் கண்டு அவரிடம் சென்று எனது மகன் எங்கேயெனக் கேட்ட போது எம்மை கடுமையாக மிரட்டி அது பற்றி எதுவும் தனக்கு தெரியாதெனக் கூறினார்.
எம்மால் அந்தவிடத்தில் எதுவுமே செய்திருக்க முடியவில்லை. அமைதியாக அழுதவாறே அங்கிருந்து வந்துவிட்டோம். தற்போதும் கூட வீட்டுக்கு வந்த இராணுவத்தினரை என்னால் நன்கு அடையாளம் காட்ட முடியும். தயவு செய்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் அன்றிருந்தவரை விசாரித்து எனது மகனுக்கு என்ன நடந்ததென்பதைக் கூறுங்கள் என்றார்.
நெஞ்சில் காயம்பட்டிருந்த மகனை இராணுவமே கொண்டு சென்றது
நாகலட்சுமியென்ற தாயார் சாட்சியமளிக்கையில், எனது மகன் சிவகுமாரன். அவர் ஊடகவியலாளர் ஆவார். நாங்கள் இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பில் தங்கியிருந்தோம்.
யுத்தம் உக்கிரமடைந்தது. 2009ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் திகதி எனது மகன் வலைஞர்மடத்திலிருந்து குடியிருப்புக்குச்சென்றுள்ளார்.
அதன்போது அவருக்கு நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் இராணுவத்தினரே அவரை அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் செட்டிகுளம் ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக எனது மகன் அனுதிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கேயே சில நாட்களாக சிகிச்சைபெற்று வந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் சிகிச்சை நிறைவடைந்ததா? எனது மகன் எங்கே சென்றார் என்பது குறித்து இன்றுவரையில் தெரியாதுள்ளது. தற்போதும் அவரைத்தேடிக் கொண்டேதான் இருக்கின்றேன் என்றார்.
இரத்தம் ஒழுக ஒழுக அண்ணாவை இராணுவம் இழுத்துச்சென்றுள்ளது
தனது மூத்த சகோதரரை இராணுவத்தினரிடம் பறிகொடுத்த குணசீலன் சாட்சியமளிக்கையில், எனது அண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி தர்மசீலன்.
2008 ஆம் ஆண்டு மாசி மாதம் இரண்டாம் திகதி ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருந்தது. அன்று இரவு 9.30 மணியளவில் இராணுவப் புலனாய்வுத்துறையில் இருந்து வருவதாக கூறிய சிலர் எனது அண்ணாவை அழைத்து சென்று எமது வீட்டிற்கு அண்மையில் உள்ள தனிமையான வீட்டில் வைத்தனர். அங்கு அவரை கடுமையாக அடித்து சித்திரவதை செய்ததுடன் இரத்தம் ஒழுக ஒழுக தான் அவரை இழுத்துச் சென்றார்கள்.
தனது கணவன் இழுத்துச்செல்லப்படுவதைக் கண்ட எனது அண்ணியாரும் பிள்ளைகளும் அவர்கள் பின்னால் ஓடிச்சென்று தடுத்தார்கள். இராணுவத்தினர் அவர்களை விட்டு வைக்கவில்லை.
அவர்கள் மீது ஈவிரக்கமின்றி பூட்ஸாலும் துவக்கு பிடியாலும் அடித்தனர். இதனால் ஏற்பட்ட காயம் தற்போதும் உட்காயக் கண்டல்களுடன் காணப்படுகின்றன.
எனது அண்ணாவை பிடிக்க வந்த போது சிலர் இராணுவ உடையிலும் சிலர் சிவில் உடையிலும் காணப்பட்டிருந்ததுடன் அவர்கள் கொச்சை தமிழிலும் பேசியிருந்தார்கள். அத்துடன் வீட்டைச்சுற்றிவர பல இராணுவத்தினர் நின்றுகொண்டிருந்தனர்.
அதன்பின்னர் அண்ணனை ஊரெழு இராணுவ முகாமில் வைத்திருப்பதாக சொன்னார்கள். இருப்பினும் அங்கு விசாரித்தபோது இல்லையென்றே கூறினார்கள். அவர் தொடர்பாக எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
இப்படியான நிலையில் இவர்களை எல்லாம் கடத்தி கொண்டு சென்று காடழிக்க வைத்திருக்கிறார்களென சிலர் கூறுகின்றார்கள். முதலைக்கு உணவாக போடுகிறார்கள் என்றும் கூறுகின்றார்கள். அவ்வாறு பலவாறு பேசிக்கொள்கிறர்கள். உண்மையிலேயே எனது அண்ணனுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை.
அத்துடன் கடந்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் நாங்கள் சுதந்திரமாக தெரிவிக்க முடியாத ஒரு நிலையே காணப்பட்டது.
ஏனெனில் காணாமல் போனவர்களை தேடிப் போனவர்களே காணாமல் போன சம்பவங்களே அதிகம் இடம்பெற்றுள்ளது. அண்ணாவை கடத்தினவர்கள் ஏன் என்று எனக்கு தெரியவில்லை.
அவருக்கு தொழில் ரீதியாக போட்டியிருந்தது. அந்தவகையில் யாராவது வேண்டுமென்றே இப்படி செய்ய சொல்லியிருக்கலாம்.
முக்கியமாக விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துவந்து இராணுவத்துடன் இணைந்திருந்து புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்த யாழ்.பல்கலையில் மருத்துவ பீடத்தல் கல்விகற்ற இரண்டாம் வருட மாணவன் சுகந்த தீபன் என்பவர் ஊரெழு இராணுவ முகாமிற்கு பொறுப்பாக இருந்ததுடன் பலரை காட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த வகையில் இவர் மூலமும் ஏதாவது தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்குள்ளது என்றார்.
அப்பாவை காலில் சுட்டுவிட்டு அண்ணாவை வெள்ளை வானில் கொண்டு சென்றனர்
காணாமல்போன அண்ணா தொடர்பாக கொக்குவிலைச்சேர்ந்த அவருடைய தங்கை சாட்சியமளிக்கையில்,
எனது அண்ணாவின் பெயர் ரஜிந்தன். அவர் வாகன சாரதியாக பணியாற்றிக்கொண்டிருந்தபோது 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி இரவு வெள்ளை வானில் கறுப்பு துணியால் முகத்தை மூடிக்கொண்டு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் தாங்கியவாறு எமது வீட்டுக்கு வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் எனது இரண்டாவது சகோதரரான மோகனை மோகன் மோகன் எனப் பெயர் கூறி அழைத்தனர்.
இதன்போது அறையிலிருந்து வெளியே வந்த எனது மூத்த சகோதரர் ரஜிந்தன் அவர் வீட்டில் இல்லை எனக் கூறினார். சென்றவர்கள் மீண்டும் வந்து இரண்டாவது சகோதரனை பெயர் கூறி அழைத்தனர். இதன் போது எனது மூத்த சகோதரர் அவர் இல்லையென்றே சொன்னார். உடனே எனது மூத்த அண்ணனை இழுத்து சென்றனர்.
எனது தந்தை அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக முற்பட்ட போது வந்தவர்கள் அவரை கீழே தள்ளி விட்டு அவரது காலில் துப்பாக்கியால் சுட்டனர்.
அண்ணாவை இழுத்து சென்றனர். அண்ணணை விட்டு விடும்படி கத்தியபடி வாகனத்தின் பின் நாங்கள் ஓடினோம். இருந்தபோதும் அவர்கள் அதனையும் பொருட்படுத்தியிருக்கவில்லை.
இச்சம்பவத்தின் போது வந்திருந்தவர்களில் சிலர் எமது வீட்டினை சுற்றி வர ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். அவர்கள் சிங்களம் கலந்த கொச்சை தமிழிலேயே உரையாடியதை நான் கேட்டேன்.
நாங்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடமும், பொலிஸா ரிடமும், செஞ்சிலுவைச் சங்கம் எனப் பலரிடமும் முறையிட்டும், வெலிக்கடை, பூசா போன்ற சிறைச்சாலைகளில் தேடினோம்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உங்களால் அடையாளம் காட்ட முடியுமாவென விசாரணையாளர்கள் கேட்டபோது கடத்தி செல்ல வந்தவர்கள் தங்களது முகத்தை துணியினால் கட்டி மறைத்திருந்தனர். எனவே அவர்களது முகத்தை எம்மால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்றார்.
இரண்டு மணித்தியாலத்தில் விடுவிப்பதாக கூறினார்கள்
மீசாலையைச் சேர்ந்த ரி.உதயநாதன் என்பவர் சாட்சியமளிக்கையில், எஸ்.அருணன். எனது அண்ணாவின் மகன். மீசாலைச் சந்தியில் நின்றிருந்த இராணுவத்தினர் 1996ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி வீதியால் சென்றுகொண்டிருந்தபோது அவரை இடைமறித்துள்ளனர்.
விசாரணைசெய்யவேண்டுமெனக் கூறி அழைத்துச்செல்ல முற்பட்டனர். அதன்போது அவருடைய தந்தை நேரில் கண்டார். அவர் அவரை எங்கே அழைத்துச் செல்கின்றீர்கள் என வினவினார்.
அதன்போது உங்கள் மகனை விசாரணை செய்துவிட்டு இரண்டு மணித்தியாலங்களில் விடுதலை செய்துவிடுவோம் நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்களெனக் கூறினார்கள். தற்போதுவரையில் அவருக்கு என்ன நடந்ததென்று தெரியாது என்றார்.
யாழ். சோமசுந்தரம் வீதியைச்சேர்ந்த தாயார் சாட்சியமளிக்கையில்,
எனது மகன் இராஜன் அலெக்சாண் டர். யாழ்.பொதுநூலகத்தின் மேற்பார் வையாளராக கடமையாற்றி வந்தவர் 2007பெப்ரவரி ஏழாம் திகதியன்று இராணுவத்தினரால் கடத்திச் செல்லப் பட்டார்.
வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தவர். பின்னர் சோமசுந்தரம் வீதி யில் இருந்து இராசாவின் தோட்டம் வீதி யிலுள்ள கடைக்குச் சென்றார். அப்போது, இராசாவின் தோட்டம் வீதியில் இருந்த இரா ணுவத்தினருடன் கதைத்துக் கொண்டிருந்த தாக அவரை தெரிந்தவர்கள் சொன்னார்கள்.
இராணுவத்தினரிடம் கேட்டபோது, நாங் கள் பிடிக்கவில்லை என்று கூறினார்கள்.
பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை செஞ் சிலுவை சங்கத்தினரிடமும் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் எனது மகனின் பெயர் வந்தது. அவரை பார்ப்பதற்கு அவரின் அப்பா வெலிக்கடை சிறைச்சாலைக்கு பொருட்களும் வாங்கிக்கொண்டு சென்றவர்.
அந்த பெயருக்கு உரியவர் அங்கு இல்லை என சிறைச்சாலையில் உள்ளவர்கள் கூறி னார்கள் பின்னர், கொண்டுசென்ற பொருட்களை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்து விட்டு அப்பா வந்து விட்டார்.
அவ்வாறு சிறைச்சாலையில் இருந்து வந்த அப்பா மூன்று நாட்களின் பின்னர் இறந்துவிட்டார். எனக்கு பிள்ளைகள் மட்டும் இருக்கின்றார்கள். அவர்களும் திருமணம் செய்யவில்லை.
என்னுடைய பிள்ளையை பார்த்துவிட்டுச் சாகவேண்டும். இல்லாவிட்டால் நான் தற்கொலை தான் செய்ய வேண்டும். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள். இல்லாவிட்டால், ஒன்றும் வேண்டாம் என்றார்.