ஆட்டையாம்பட்டி: ‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப பெற்ற தாய், தந்தையர் இருவரும் இறந்த பிறகு தான் கட்டிய வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து தினந்தோறும் வழிபடும் அதிசய குடும்பத்தை பற்றிய தகவல்கள் கேட்போரின் மனதை மெய் சிலிர்க்க வைக்கிறது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டிக்கு அருகே எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொங்கான்காடு அம்மன் கோவில் பாவடி பகுதியில் வசித்து வருபவர்கள் ஆதிமூலம் மீசை (என்ற) பி. சண்முகசுந்தரம் (வயது 56) குடும்பத்தினர்.
நெசவுத்தொழில் செய்து வந்த இவரது தந்தை பழனியப்ப முதலியார் (73) 1999–ம் ஆண்டில் காலமாகி விட்டார்.
தாயார் எல்லம்மாள் (78). கடந்த 23.9.2013–ந் தேதி இறந்துவிட்டார். பழனியப்ப முதலியார் – எல்லம்மாள் தம்பதியருக்கு ஈஸ்வரி, கந்தசாமி, ராஜலட்சுமி, சண்முக சுந்தரம், மல்லிகா, சாஸ்திரி ஆகிய 6 பேர்கள் வாரிசுதாரர்களாக பிறந்தனர்.
இவர்களில் சண்முக சுந்தரம் என்பவர் குடும்பத்தினர் மட்டும் மறைந்த தாய் தந்தையர் இருவருக்கும் தனது தார்சு வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து தினந்தோறும் வணங்கி வருகிறார்.
பெற்ற தாய், தந்தையரை மதிக்காமல் அடித்தும், உதைத்தும், உண்ண உணவு கொடுக்காமல் ஒதுக்கி வைத்துள்ள மகன்கள் இருக்கும் இந்த உலகத்தில் தாய்–தந்தையருக்கு சிலை அமைத்து வணங்குவது பாராட்டக்கூடிய, அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்லதொரு வழி என்றே கூறலாம்.
‘கண்ணுக்கு தெரியாத தெய்வத்தை வழிபடுவதை விட, கண்ணுக்கு தெரிந்த நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையரை தெய்வமாக வணங்குவது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று பெருமைப்பட கூறுகிறார்கள் சண்முகசுந்தரம் குடும்பத்தினர்.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு தாய் – தந்தையருக்கு தார்சு வீட்டு கூடாரத்தில் சிலை அமைத்து தினந்தோறும் தீபாராதனை காட்டி வழிபட்டு வருகிறார்கள். விசேஷ நாட்களில் பூ மாலை அணிவித்தும் விரதம் இருந்தும் படையல் செய்து வழிபடுகிறார்கள்.
உயிருடன் இருக்கும் போது உடல் தானம் செய்ய விரும்பியதால் அம்மா எல்லம்மாள் இறந்தவுடன் அவரது உடலை தானம் செய்தனர் அவரது குடும்பத்தினர்.
மேலும் மற்றவர்களும் கண்தானம், உடல் தானம் செய்வதற்கு வழிகாட்டும் வகையில் தாயின் வழியில் மகன் சண்முகசுந்தரமும், இவரது மனைவி தமிழ் செல்வியும், தாங்கள் இறந்த பிறகு உடலை தானம் செய்ய உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து உள்ளனர்.
‘அடுத்தவர் காசுக்கு ஆசைப்படக்கூடாது, தெய்வ வழிபாடு, நல்லொழுக்கம், மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்ந்தால் எல்லா நலனும் பெற்று வாழலாம், மன நிம்மதியும் கிடைக்கும் என அப்பாவின் தாரக மந்திரத்தை நினைவு கூர்ந்து வாழ்வதாக ஆதிமூலம் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மீசை என்கிற பி.சண்முகசுந்தரம் கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ‘பிறந்தோம், வாழ்ந்தோம்’ என்று இருக்காமல் சாதிக்க வேண்டும் என்ற செயல்பாட்டோடு வாழ்ந்து வரும் இவரது குடும்பத்தினர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது மறுக்க முடியாத உண்மை என்றே கூறலாம்.
பெற்ற தாய், தந்தையரை ஆதரிக்காமல், உதாசீனப்படுத்தும் மகன்கள் வாழும் இவ்வுலகில் சண்முக சுந்தரத்தை பின்பற்றி, சிலை வைக்க தேவையில்லை, ஆதரவு காட்டி வாழ்ந்தால் வறுமை ஒழிந்து அனைவரது வாழ்வும் உயர்வு பெறும்.
பெற்ற தாய், தந்தையரை ஆதரித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை என உணரமுடிகிறது.