தமிழீழ விடுதலைப் புலி குழுவினரே இரண்டு தங்கை களையும் கடத்தினர்
தனது தங்கைகள் இருவர் கடத்தப்பட்டதாக தாயார் சகிதம் சகோதரியொருவர் சாட்சியமளிக்கையில், மானிப்பாய் வீதி ஓட்டுமடம்பகுதியில் நாம் வசித்து வந்திருந்தோம்.
இவ்வேளையில் 1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி விடுதலைப்புலி உறுப்பினர் நசீர் என்பவரின் தலைமையிலான குழுவினர் எமது வீட்டுக்குள் புகுந்தார்கள்.
எனது தங்கைகளான வாமதேவன் இந்திராதேவி (அப்போது வயது 22) மற்றும் வாமதேவன் சுதாதேவி (அப்போது வயது 15) ஆகியோரை கடத்தி சென்றனர்.
அதன் பின்னர் எனது தங்கைகள் தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் இல்லை. ஆனால் நாம் சில நாட்களுக்கு முன்பாக ஜோதிடம் கேட்டோம்.
அதன்போது இப்போதும் எனது இரு சகோதரிகளும் உயிருடன் தான் இருக்கின்றார்களென ஜோதிடர் கூறுகின்றார். எனவே எனது இரு சகோதரிகளும் இன்னமும் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என நம்புகின்றேன். அவர்களை கண்டறிந்து தாருங்கள் என்றார்.
பட்டப்பகலில் எனது மகனை இராணுவமே பவல் வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளது
குருநகர் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் நெல்சனின் தாயார் சாட்சியமளிக்கையில்,
எனது மகன் நெல்சன். நாங்கள் நீண்டகாலமாகவே குருநகரில் வசித்து வருகின்றோம். என்னுடைய மகன் குருநகர் கடலில் சிறுவயது முதலே தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி கடலுக்குச் சென்ற மகன் அன்று பிடிக்கப்பட்ட மீன்களை விற்பதற்காக கல்வியங்காட்டுப் பகுதியிலுள்ள சந்தைக்கு காலை 11 மணியளவில் சென்றார்.
அங்கு மீன்களை விற்பனை செய்துவிட்டு மீண்டும் பிற்பகல் ஒரு மணியளவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றபோது நாயன்மார் கட்டுச் சந்தியில் வைத்து இராணுவத்தினர் அவரை மறித்துள்ளனர்.
அங்கு தரித்து நின்ற இராணுவத்தின் பவல் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். நாம் நீண்டநேரமாகியும் மகனை காணவில்லையென யோசித்தவாறே அங்கு சென்றபோது இராணுவத்தினர் ஏற்றிக்கொண்டு சென்றதை நேரில் கண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அரியாலையில் இருந்த இராணுவ முகாமிற்குச் சென்றேன். அங்கு எனது மகன் இல்லையென்றும் யாழ்.நகரிலுள்ள தலைமை முகாமிற்குச் செல்லுமாறு கூறினர்.
அதற்கமைய நகரில் இருந்த தலைமைமுகாமான 512ஆவது படைத்தலைமை அலுவலகத்திற்குச் சென்று தேடினேன். அங்குமில்லை. இராணுவத்தினரின் ஒவ்வொரு முகாமாகத் தேடினேன்.
அது மட்டுமல்லாமல் மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சில அமைப்புக்களிடமும் முறையிட்டேன். அதன் பின்னர் பல தரப்பினர்களிடம் முறையிட்டது மட்டுமல்லாமல் பல இடங்களிற்குச் சென்றும் தேடினேன். ஆனால் இன்று வரை அவர் கிடைக்கவில்லை. எங்கிருக்கின்றார் என்று கூடத் தெரியாது.
என்னுடைய மகன் இல்லாமல் நான் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றேன். அத்தோடு அவரைத் தேடி அலைந்து நாங்கள் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றோம்.
இவ்வாறு எங்களுக்குப் பாதிப்புக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. காணாமல் போனோர் தொடர்பிலே இங்கு விசாரணை செய்யப்படுகின்றது.
எனது மகனை இராணுவமே பிடித்துச் சென்றது. இதனைப் பலரும் கண்டுள்ளனர். எனவே இராணுவம் பிடித்த என்னுடைய மகனை மீட்டுத்தாருங்கள் இதுவே எனக்குப் போதும். இதனைத் தான் இந்தக் குழுவிடம் நான் மன்றாட்டமாக வேண்டுகின்றேன் என்றார்.
இராணுவச் சிப்பாயின் சதியாலே எனது மகன் கைது செய்யப்பட்டார்
நாவற்குழியைச் சேர்ந்த சின்னத்தம்பி சாட்சியமளிக்கையில், எனது மகன் சிவகுமார் (வயது 32). என்னுடைய பாதுகாப்பில் என்னுடைய வீட்டிலேயே இருந்தார்.
1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி நாவற்குழி கிழக்கு கோயிலாக்கண்டிப் பகுதியில் நாவற்குழி படைமுகாமைச்சேர்ந்த இராணுவத்தினர் ஐந்து கிலோமீற்றர் பரப்பளவினை உள்ளடக்கிய பகுதியில் பாரிய சுற்றிவளைப்பைச் செய்திருந்தனர்.
இதன்போது அனைவரும் ஒன்றுதிரட்டப்பட்டு நீண்ட வரிசையில் நிற்கவைக்கப்பட்டார்கள். முகமூடி அணிந்த நான்கு தலையாட்டிகளை இராணுவத்தினர் கொண்டுவந்தனர்.
அவர்களை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றவர்களை செல்லுமாறு கூறினர். அப்பொழுது தலையாட்டியின் முன் செல்வதற்காக நானும் எனது முன்னால் மகனும் வரிசையில் சென்றுகொண்டிருந்தோம்.
மகன் முதலாவதாக தலையாட்டிக்கு முன்பாக சென்றார். முதல் மூன்று தலையாட்டிகளும் மகன் சென்றும் எதுவுமே செய்யவில்லை. நான்காவதாக நின்ற தலையாட்டியும் தலையாட்டாமல் நின்றது.
சிப்பாயொருவர் அந்த தலையாட்டியின் பின்னால் நின்று கொண்டிருந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் அதனைக் கண்டிருந்தார்.
கூரிய இரும்பு கம்பியால் தலையாட்டியின் காலில் குத்தினார். இதனை நான் அவதானித்தேன். வேறு யாரும் கவனத்தில் கொண்டிருக்கவில்லை.
இவ்வாறு குத்தும்போது வலி தாங்க முடியாமல் நான்காவது தலையாட்டி உடலினை அசைப்பதை பார்த்த ஏனைய இராணுவத்தினர் எனது மகனை கைது செய்து விட்டனர்.
எனக்கு சிங்கள மொழி தெரியும். உடனடியாகவே தலையாட்டிற்கு பின்னால் நின்ற சிப்பாய் நடந்துகொண்ட விதத்தை அவர்களிடத்தில் விளக்கி கூறினேன். எனது மகனை விட்டுவிடுங்கள் எனக்கோரினேன். ஆனால் இராணுவத்தினர் நான் சொல்வதை கேட்கவில்லை.
சுற்றிவளைப்பு நடைபெற்ற பகுதிகளில் பிடிக்கப்பட்டவர்களை ஏற்றிவந்த வாகனத்தில் எனது மகனையும் ஏற்றிச் சென்றனர்.
அவர்களை பின்தொடர்ந்து நாவற்குழி படைமுகாம் வரைக்கும் கால்நடையாகச் சென்றேன். படைமுகாம் வாசலுடன் என்னை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
அப்போது சாவகச்சேரி பிரதேச செயலாளராக இருந்தவர் எனது மகனை இராணுவம் பிடித்துச் சென்றது என்பதை உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றினை தந்துள்ளார்.
அந்த படைமுகாமிற்கு பொறுப்பாக இருந்த கமாண்டருக்கு அனைத்துமே தெரியும். அவரை விசாரித்து எனது மகனுக்கு என்ன நடந்தது என்பதைக் கூறுங்கள் என்றார்.
எனது தம்பிக்காக பத்து இலட்சம் பணம் செலுத்தியும் பயனில்லை
நல்லூரைச்சேர்ந்த சபாரட்ணம் அன்புரு சாட்சியமளிக்கையில், எனது தம்பி சபாரட்ணம் சதீஸ் 2007ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி யாழ்.நகருக்கு வங்கிக்கு செல்வதற்காக துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தார்.
பின்னர் அவர் வீட்டுக்குத் திரும்பவேயில்லை. அவரை யாழ்.நகர் பெற்றோல் நிலைய சந்தியில் இராணுவத்தினர் மறித்து வைத்திருந்ததை அவ்வழியால் வந்த சிலர் கண்டிருந்தனர்.
அவர்கள் எனக்கு இந்த தகவலை தெரிவித்தனர். நான் வைத்தியசாலையில் பணிபுரிபவன். இராணுவ முகாம்கள் ஒவ்வொன்றுக்குமாகச் சென்றேன். அங்கு எனது தம்பி தொடர்பாக விசாரித்தேன் எங்கும் இல்லையென்றே கூறினார்கள்.
இந்நிலையில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் எமது வீட்டிலுள்ள தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. எனது தம்பியான சதீஸை தாமே கடத்தி வைத்திருக்கின்றோம்.
30 இலட்சம் ரூபா பணத்தை வழங்கினால் அவரை உடன் விடுவிப்போம் எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்கள். பின்னர் மறுபடியும் தொடர்பு கொண்டார்கள்.
அப்போது எனது தம்பியை எங்கு வைத்திருக்கிறீர்கள் எனக்கேட்டேன். பணத்தை வழங்கினால் உடன் விடுதலை செய்யப்படுவார் எனக் கூறினார்கள்.
நான் சாதாரண வைத்தியசாலையில் தொழில் புரியும் ஒருவன். என்னிடம் அத்தனை தொகை பணம் இல்லையென்று கூறினேன். அதன்போது உன்னிடம் பணம் இருக்கின்றது என்பது எமக்குத் தெரியும் என்றார்கள்.
இறுதியில் தம்பியைக் காட்டாமல் பணத்தை வழங்க முடியாதெனக் கூறினேன். தொடர்பை துண்டித்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஊரடங்கு நேரம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் வெள்ளை நிற வான் ஒன்று எங்களது பிரதான வாயிலுக்கு முன்னால் வந்து நிற்கும்.
நள்ளிரவு கழிந்தே செல்லும். ஊரடங்கு சட்டம் இருந்ததால் நாம் வெளியில் சென்று அந்த வானை பார்ப்பதில்லை. அவ்வாறொரு நாள் நின்றுவிட்டு வாகனம் சென்றதன் பின்னர் எமது வீட்டுத் தொலைபேசிக்கு மீண்டும் அழைப்பு வந்தது.
நாங்களே உங்களுடைய வீட்டுக்கு முன்னால் வானில் வந்து நின்றுவிட்டுச் சென்றோம். மரியாதையாக பணத்தை வழங்கு இல்லையென்றால் உன் தம்பியும் கிடைக்கமாட்டான்.
நீ வேலைசெய்யும் வைத்தியசாலையில் சவச்சாலைக்கே செல்வாய் என்று அச்சுறுத்தினர். ஒருபக்கத்தில் தம்பிக்கு எதுவும் நடக்கக் கூடாது. மறுபக்கத்தில் எனக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புக்களும் இருந்தன.
இதனால் சரி பணம் தருகின்றேன். ஆனால் 30 இலட்சம் என்னிடமில்லையென்றேன். பேரம்பேசி 10 இலட்சம் வழங்குமாறு கோரினர். ஈற்றில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் 10 இலட்சம் ரூபா பணத்தை திரட்டினேன்.
எம்.ஆர்.என்.பாகீம் என்ற பெயரைக் கொண்ட தனியார் வங்கி கணக்கிலக்கத்தினை எனக்கு தந்தார்கள். அதற்கு வைப்பிலிட்டு விட்டு அவர்கள் தொடர்பு கொள்ளும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தினேன்.
தொலைபேசி செயற்றிருந்தது. தம்பியும் வீடு திரும்பியிருக்கவில்லை. எனது தம்பி காணாமல் போனபோதும் நாம் பணத்தை வைப்பிலிட்டபோதும் யாழ். நகரம் 512ஆவது படைப்பிரிவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது.
எமது வீட்டிலிருந்து சொற்ப தூரத்தில் இராணுவ முகமொன்றும் இருந்தது. ஆகவே ஊரடங்கு நேரத்தில் நடமாடியவர்கள் யார் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயமாகவே தெரிந்திருக்கும்.
இத்தனை நாளும் அச்சம் காரணமாக இந்த தகவலை நானோ அல்லது குடும்பத்தினரோ வெளிப்படுத்தாது வைத்திருந்தோம். தற்போது அதனைக் கூறியுள்ளோம். எனது தம்பிக்கும் எமது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் ஆணைக்குழுவே பொறுப்பு என்றார்.
இராணுவத்திடம் கணவரை ஒப்படைத்தசாட்சியாக எனது தந்தை இன்றுமுள்ளார்
இரண்டு பிள்ளைகளின் தாயான ஷிரோமி ஜெயச்சந்திரன் சாட்சியமளிக்கையில், 2009 மே 19ஆம் திகதி அன்று வட்டுவாகல் பாலத்தினூடாக நாம் வருகை தந்துகொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் எம்மிடத்தில் சரணடையுங்கள் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்கின்றோம் என பகிரங்க அறிவிப்பை இராணுவத்தினர் வெளியிட்டனர்.
இதனையடுத்து பெண்கள் நிரலில் நான் காத்திருக்க எனது தந்தையாரான அல்பிரட் பிரான்சிஸ் லோரன்ஸ், எனது கணவர் சிவசுப்பிரமணியம் ஜெயச்சந்திரனை அழைத்துச் சென்று இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார்.
எனது கணவன் ஜெயச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இம்ரான் பாண்டியன் படைப்பிரிவில் திலீப் என்ற பெயரில் செயற்பட்டு வந்திருந்தார்.
இதனாலேயே இராணுவத்தின் அறிவிப்பைக் கேட்டு எனது தந்தை அவரை சரணடையச்செய்திருந்தார். அதன் பின்னர் நாம் பல இராணுவ முகாம்களுக்கு எனது கணவரை தேடிச் சென்றபோது அனைத்து இடங்களிலும் அவர் இல்லை என்றே கூறினார்கள். தற்பொழுதும் எனது தந்தை உயிருடன் இருக்கின்றார். அவர் நேரில் கண்ட சாட்சியாவார்.
ஈ.பி.டி.பி.யின் மீதே எனக்குச் சந்தேகம்
ஈச்சமோட்டையை சேர்ந்த முத்துலிங்கம் கொலஸ்ரினா என்பவர் சாட்சியமளிக்கையில், ஈச்சமோட்டையில் உள்ள எமது வீட்டுக்கு 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி சிவில் உடையில் இரவு 10 மணியளவில் வந்த 7 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பல் எனது மகனான முத்துலிங்கம் மலரவன் (வயது 19) உறங்கிக்கொண்டிருந்தபோது விசாரணை செய்ய வேண்டுமென அழைத்து விசாரணை மேற்கொண்டது.
மேலும் விசாரணைகளைச் செய்யவேண்டியிருப்பதால் அவரை அழைத்துச்செல்ல வேண்டுமென்றனர். அதன்போது நாளை காலையில் எங்கே அழைத்து வரவேண்டுமென்று சொல்கின்றீர்களோ அங்கே அழைத்து வருகின்றேனென நான் கூறினேன்.
அவர்கள் அதனைப்பொருட்படுத்தாது, இரவு 12 மணியளவில் மகன் கதறக்கதற இழுத்து சென்றனர். மகனை இழுத்து சென்றபோது நானும் பின்னால் கத்திக்கொண்டே சென்றேன்.
என்னை தள்ளிவிட்டு வெளியில் நின்ற வாகனத்தில் மகனை ஏற்றினர். எமது வீட்டு ஒழுங்கை முழுவதும் சீருடை தரித்த பல இராணுவத்தினர் நிற்பதனை நான் கண்டேன். நான் கதறியழுதபோதும் அவர்கள் எதுவுமே கூறாது ஏற்றிச்சென்றுவிட்டனர்.
மறுநாள் காலையில் என்னசெய்வதென்றறியாது எனது வீட்டில் அழுதவாறே இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வருகைதந்திருந்த மூவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து எமது தொலைபேசியை பறித்து சென்றனர்.
அதில் ஒருவர் ஈ.பி.டி.பி. உறுப்பினர். நான் அவரை அடையாளம் கண்டேன். அன்றைய தினமே யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்திற்கு சென்ற போது முதல் நாள் எமது வீட்டுக்கு வந்த குழுவை சேர்ந்த மூவரை கண்டேன்.
அவர்களிடம் எனது மகன் எங்கே என கேட்ட போது தமக்கு எதுவும் தெரியாதெனக் கூறி அவர்கள் ஈ.பி.டி.பி.முகாமினுள்ளேயே சென்றனர். அதன் பின்னர் மகனை பற்றிய தகவல் எதுவும் இல்லை. எனக்கு ஈ.பி.டி.பி.யினர் மீதே சந்தேகம் உள்ளது என்றார்.
இரண்டு பிள்ளைகளையுமே நான் தொலைத்துவிட்டேன்
மணியந்தோட்டத்தைச் சேர்ந்த கருப்பன் நாகம்மா என்ற தாயார் சாட்சியமளிக்கையில், நாங்கள் மணியந்தோட்டம் உதயபுரத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்கள். எனக்கு இரண்டு புதல்வர்கள்.
மூத்தவர் பாலகிருஷ்ணன், இளையவர் சுரேஷ். 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேவாலயத்திற்குச் சென்ற எனது மூத்த மகனை துண்டிச் சந்தியில் சாவடி அமைத்திருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.
அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அதனை எனது கணவனின் சகோதரர் கண்ணால் கண்டுள்ளார். அதன்பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்களென எதிர்பார்த்திருந்தோம்.
எனினும் அவர்கள் மகனை அனுப்பவேயில்லை. அவரைத்தேடி அந்த சாவடிக்குச் சென்றோம். மணியந்தோட்டம், பாஷையூர் இராணுவ முகாம்களுக்கும் சென்றோம். அவரைத் தெரியாதென்றே கூறினார்கள்.
இவ்வாறிருக்கையில் எனது இளைய மகன் கடற்றொழில் செய்பவர். அவர்கள் ஜூலை மாதத்தில் குறித்த நாளொன்றில் வழமைபோன்றே கடலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் கொழும்புத்துறைச் சந்தியில் வைத்து இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
இதனை நேரில் பார்த்தவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். மிக முக்கியமாக எனது மகனை இராணுவத்தினர் கூட்டிச்சென்றதை நேரில் கண்ட சாட்சியாகவிருந்தவர் தற்போது மரணமடைந்து விட்டார்.
தற்போது வரையில் எனது இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் என்ன நடந்ததென்பது தெரியாது அவர்களை தொலைத்துவிட்டு கண்ணீருடன் அலைந்துகொண்டிருக்கின்-றேன் என்றார்.
காணாமல்போன கணவனை பலர் கண்டிருக்கின்றார்கள்
ஜெயகாந்தன் நர்மிலா சாட்சிம-ளிக்கையில், நாங்கள் கோண்டாவிலைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் முத்துலிங்கம் ஜெயகாந்தன் (வயது 32). 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி பிற்பகல் 2.30 மணியிருக்கும் எமது வீட்டுக்குள் திடீரென ஆயுதங்கள் தாங்கியவாறு வருகைதந்திருந்த இராணுவத்தினர் எனது கணவனை இழுத்துச் சென்றனர்.
ஒருவார்த்தை கூட பேசவில்லை. நான் என்ன செய்வதென்றறியாது இருந்தேன்.
2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் திகதி அச்சுவேலி கோவிலடியில் எனது கணவரை முகத்தை மறைத்துக் கட்டியபடி மோட்டார் வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்டபோது சிலர் அவதானித்திருக்கின்றார்கள்.
அதன் பின்னர் 2010ஆம் ஆண்டும் இராணுவ சீரு-டை-யுடன் முகத்தை மறைத்தவாறு பலா-லி- வீதியில் நின்றமையை சிலர் அவ-தானித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி நல்லூர் பின்வீதியில் நின்று உறவினர் ஒருவருடன் கதைத்துக்கொண்டிருந்திருக்கின்றார். அதேநேரம் கோண்டாவில் தில்லையம்பதியிலும் எனது கணவரைக் கண்டதாக கூறப்படுகின்றது.
இராணுவத்தாலேயே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். பலாலி, அச்சுவேலி, நல்லூர் பிரதே-சங்கள் உட்பட சொந்த ஊரிலும் அவ-ரைக் கண்டதாக கூறுகின்றார்கள்.
உண்மையில் அவர் எங்கிருக்கின்றார் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதை கண்டறிந்து தாருங்கள் என்றார்.
…..