உயிர் வாழும் உரிமையில் ஒருவருடைய உயிரை எப்படி இன்னொருவரினால் பறிக்க முடியாதோ அதே போல் தன்னுடைய உயிரைத் தானே பறித்துக்கொள்ளும் உரிமையும் எவருக்கும் கிடையாது என்பதை மறந்துவிடக் கூடாது
தம்மிக்க! நீங்கள் திருமணம் செய்து சந்தோஷமாக வாழுங்கள்! திருமண வைபவத்தை எந்தவித குறையுமில்லாமல் வெகு விமரிசையாக செய்யுங்கள். நான் உங்களுடைய வங்கிக்கணக்கில் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிட்டிருக்கின்றேன்.
நீங்கள் எனக்கு வாங்கித் தந்த தங்க நகைகள் அனைத்தும் வீட்டிலுள்ள அலுமாரியின் மேல் இருக்கின்றன. அவற்றையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.
தயவு செய்து இனிமேல் எந்தப்பிரச்சினைக்கும் நீங்கள் செல்லக்கூடாது. நான் உங்கள் மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன் என்று உங்களுக்கு தெரியும்.
ஆனால், அந்த அன்பு காலப்போக்கில் வெறுப்பாய் மாறியதற்கும் உங்களை தவிர வேறு எவரும் காரணமில்லை. உங்களுடைய நடவடிக்கைகள் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படையான காரணம்.
இது கடந்த வாரம் 8 ஆம் திகதி காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான விஷ்வணி என்ற இளம் பெண் தனது மரணத்துக்கு முன்னர் தனது முன்னாள் காதலனுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இச்சம்பவத்தில் குறித்த இளம் பெண்ணின் தாயான 42 வயதான ஹேமலதா என்ற பெண்ணொருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களையும், வாக்குமூலங்கனையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குவோமானால்,
ஹேமலதா சுமார் 21 வருடங்களுக்கு முன்னர் தடுகொடுவ, கட்டுகெந்த பிரதேசத்தைச் சேர்ந்த சோமரத்ன என்பரை வாழ்க்கை துணையாக கரம் பற்றினார்.
அதன்பின் கணவர் , மாமி, மாமா என்று புகுந்த வீட்டில் அவருடைய திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக கழிந்தது. திருமண வாழ்க்கையின் ஆதாரமாய் விஷ்வணியும் பிறக்க அவர்களுடைய மகிழ்ச்சி மேலும் இரட்டிப்பானது.
எனினும், காலவோட்டத்தில் ஹேமலதாவின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. சோமரத்னவுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக 1998 ஆம் ஆண்டு அவர் இறந்து விட்டார்.
இந்நிலையில் இளம் வயதினிலேயே கணவரை இழந்து குழந்தையுடன் நிர்க்கதியாய் நின்ற ஹேமலதா மீண்டும் தனது பிறந்த வீட்டை வந்தடைந்தாள். அங்கு ஹேமலதாவின் தாயும், சகோதரனும் அவளுக்கு பெரும் உதவியாக இருந்தார்கள்.
ஹேமலதா இடியப்பம், அப்பம் போன்ற உணவுப்பொருட்களை செய்து கடைகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் தனது செலவுக்கு தேவையான பணத்தை தேடிக்கொண்டார்.
அதுமட்டுமின்றி கணவரின் சொத்துகளில் இருந்து வரும் வருமானத்தை சிறுக சிறுக சேமித்து தாய் வீட்டுக்கு அருகிலுள்ள காணி துண்டில் தனியாக வீடொன்றை நிர்மாணித்து தனது மகளுடன் குடிபுகுந்தாள்.
இவ்வாறு கணவரின் இழப்பின் பின் தனது தைரியத்தை கைவிடாது, மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் மகள் விஷ்வணியை வளர்த்து ஆளாக்கினாள். விஷ்வணியும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய கையோடு ஆடைத்தொழிற்சாலை ஒன்றுக்கு வேலைக்கு சென்றாள்.
தாயும், மகளும் ஊரிலுள்ள யாருடனும் பெரிதாக நட்புக் கொண்டாடவில்லை. யாருடைய பிரச்சினைகளுக்கும் செல்லவில்லை. இருவர் என்றாலும் அவர்களுடைய வாழ்க்கை மிக அமைதியாகவும் ,அழகாகவும் சென்றது.
இந்நிலையில் விஷ்வணி இராணுவத்தில் பணியாற்றும் தம்மிக்க (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலிக்க ஆரம்பித்தாள். தம்மிக்க விஷ்வணியின் மிக நெருங்கிய உறவினராவார். அதுமட்டுமின்றி தம்மிக்க விஷ்வணியை வெறித்தனமாக காதலித்தான்.
அவளுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்தான். எனினும் இருவருடைய காதல் விவகாரமும் இரு வீட்டாருக்கும் தெரிய வர தமது எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தனர்.
அதற்கு காரணம் இரத்த உறவுமுறையினருக்கு இடையில் திருமணம் செய்து கொள்வது முறையற்ற ஒன்றாகும் என்ற காரணத்தினாலேயேயாகும்.
இராணுவத்திலிருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் தம்மிக்க ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விஷ்வணியின் வீட்டுக்குச் சென்று விஷ்வணியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தொந்தரவு செய்வான்.
சில சமயங்களில் ஆத்திரத்தில் ஹேமலதாவை அடிக்கவும் கையை ஒங்குவான். எனவே, இத்தகைய செயல்கள் விஷ்வணியின் மனதில் தம்மிக்க தொடர்பாக வெறுப்பை உருவாக்கியது.
அதுமட்டுமின்றி, தம்மிக்கவின் பெற்றோரும் ஹேமலதா தொடர்பாக வெவ்வேறு விதமான கட்டுக்கதைகளை உருவாக்கி அங்கும் இங்கும் சென்று கதைத்துத் திரிந்தார்கள்.
இதனால் பெரும் மனமுடைந்த விஷ்வணி தம்மிக்கவுடனான காதல் தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள். அதன்படி தம்மிக்கவை விட்டுப் பிரிந்தாள்.
எனினும் தம்மிக்க அவனுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. நான் உன்னைத் தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாய் இருந்தான். ஆனால், அதை விஷ்வணி சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அதுமட்டுமின்றி தம்மிக்கவை பிரிந்து சிறிது காலத்துக்குள்ளேயே புதிய உறவு ஒன்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்தாள். அதன்படி நளின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலிக்க ஆரம்பித்தாள்.
இந்த விவகாரம் இராணுவத்திலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தம்மிக்கவுக்கு எப்படியோ தெரியவர அதை எதிர்க்க ஆரம்பித்தான்.
இரவு வேளைகளில் விஷ்வணியின் வீட்டுக்கு சென்று தாயையும் மகளையும் மிரட்டுவது, விஷ்வணியின் புதிய காதலனை மிரட்டுவது என்று தம்மிக்கவின் அட்டூழியங்கள் தொடர்ந்தன.
இதனால் பல இரவுகள் விஷ்வணிக்கும், ஹேமலதாவுக்கும் நிம்மதியற்ற பொழுதுகளாகவே கழிந்தன. ஹேமலதாவின் வாழ்வில் அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல், நம்பிக்கை எல்லாமே விஷ்வணி தான்.
அப்படியிருக்கையில் அவள் காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக தினம் கண்ணீர் சிந்துவது பெரும் வேதனையாகவிருந்தது. ஆயினும் யாரிடமும் இது தொடர்பாக கூறி தீர்வு காணவும் இருவரும் முன்வரவில்லை.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இரவு 11 மணியளவில் வழமைபோல் தம்மிக்க ஹேமலதாவின் வீட்டுக்கு வந்துசென்றதாகத் தெரியவருகின்றது.
மேலும் அடுத்த நாள் காலை ஹேமலதாவின் தாய் தன்னுடைய பையொன்றை எடுப்பதற்காக மகளின் வீட்டுக்கு சென்ற போதே, மகள் ஒரு இடத்திலும் பேத்தி வீட்டின் இன்னோர் இடத்திலும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்தார்கள்.
இதன்போது அதிர்ச்சியில் ஹேமலதாவின் தாய் கதறி அழ, சத்தம் கேட்டு ஊரார் அனைவரும் சம்பவ இடத்தை நோக்கி விரைந்துசென்றனர்.
அதுமட்டுமின்றி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி விஷ்வணியை உளரீதியாக சித்திரவதை செய்த தம்மிக்கவும் மேற்படி சம்பவம் தொடர்பாக கேள்வியுற்று தற்கொலைக்கு முயற்சித்திருந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மேற்படி சம்பவம் தொடர்பாக பன்னல பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தமது விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் .
இதன்போதே வீட்டிலிருந்து இருவரும் தமது கையெழுத்தில் எழுதி கையொப்பமிட்ட 8 கடிதங்களை பொலிஸார் கண்டெடுத்தனர். எனவே கிடைத்த கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைக்கான காரணத்தை அறிய முற்பட்ட பொலிஸாருக்கு இது இரு காதல் தொடர்புகளினால் ஏற்பட்ட மரணமென்று தெரியவந்தது.
இக்கடிதங்களில் விஷ்வணி தனது முன்னாள் காதலான தம்மிக்கவுக்கு எழுதியதும், ஏனைய கடிதங்கள் ஹேமலதாவினால் தனது தாய்க்கும், சகோதரனுக்கும் எழுதியவையாகும்.
ஹேமலதா எழுதியிருந்த கடிதமொன்றில் “அம்மா, அண்ணா என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் இருவரும் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கின்றீர்கள்.
எல்லாவற்றுக்கும் நன்றி. மகளுடைய காதல் தொடர்பினால் நாங்கள் இருவருமே நிம்மதியில்லாமலேயே வீட்டில் இருந்து வந்தோம். மகள் அடிக்கடி நான் செத்தால் தான் நிம்மதி என்று புலம்புவாள் எனவே, எனக்கு இருப்பது மகள் மட்டுமே, மகள் போன பிறகு என்னால் மட்டும் தனியாக வாழ முடியாது. ஆகவே தான் மகளுடன் சேர்ந்து நானும் இந்த முடிவை” எடுத்தேன். “என்று குறிப்பிட்டிருந்தார்.
இளம் வயதிலேயே கணவரை இழந்து மறுவிவாகமும் செய்துகொள்ளாது ஒரே மகளுக்காக பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலும் தைரியத்துடன் வாழ்ந்த ஹேமலதா இவ்வாறான ஒரு முட்டாள்தனமான முடிவினை தேடிச்சென்றது வேதனைக்குரியதே .
எது எவ்வாறாயினும் ஒருவருடைய உயிரை எப்படி இன்னொருவரினால் பறிக்க முடியாதோ அதே போல் தன்னுடைய உயிரை தானே பறித்துக்கொள்ளும் உரிமையும் எவருக்கும் கிடையாது என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை பிரச்சினைகள் என்று வரும் போது அதை சமாளிக்க திறனின்றி நிரந்தரமற்ற பிரச்சினைகளுக்காக நிரந்தரமான பாரதூரமான முடிவுகளை நோக்கிச் செல்கின்றார்கள்.
ஆனால், உங்களுடைய இழப்பானது உங்களுடன் நெருக்கமானவர்களுக்கு எவ்வாறான வேதனையளிக்கும் என்பதை ஒரு தரம் சிந்தித்து பார்க்கவும் தவறிவிடாதீர்கள்.
-வசந்தா அருள்ரட்ணம்-