தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (19.12) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யாத பட்சத்தில் ரெலோ கட்சி வரவு செலவுத் திட்ட வாக்களிப்பை புறக்கணிக்கப் போவதாக அக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சபையில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது அதனை புறக்கணித்தார்.
அதேவேளை, தனது பிரதிநிதியாக தனது கட்சியைச் சோந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களை வாக்களிக்க அனுப்பியிருந்தார். இது ரெலோ கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அல்லது கட்சி இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதா..? அல்லது கட்சியை வழிநடத்த, கட்டுப்படுத்த ஆளுமை அற்றவராக செல்வம் எம்.பி மாறிவிட்டாரா என பல வினாக்களை அச் சம்பவம் எழுப்பியிருந்தது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான வாக்களிப்பு நிறைவடைந்த பின் சபாநாயகர் இல்லத்தில் விருந்துபசாரம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பியுடன் இணைந்து செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டார்.
வாக்களிப்பில் கலந்து கொள்ளாது புறக்கணித்த இவர், வாக்களிப்பின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டது இவரது இரட்டை வேடத்தையும் தனது இருப்புக்காக போடும் வேசத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.